Published:Updated:

சுப்பிரமணியன் சுவாமி கருத்துக்கு, `நோ கமென்ட்ஸ்!' - ஒதுங்கிச்செல்லும் பொன்.ராதாகிருஷ்ணன்

பொன்.ராதாகிருஷ்ணன்
பொன்.ராதாகிருஷ்ணன்

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள், யோகி ஆதித்யநாத்தின் சர்ச்சைக்குரிய பேச்சு, தமிழ் வளர்ச்சிக்கு குறைவான நிதி ஒதுக்கிய மத்திய அரசின் நிலைப்பாடு போன்ற பல்வேறு பிரச்னைகள் குறித்து பா.ஜ.க-வின் மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணனின் பேட்டி.

`மத்திய பா.ஜ.க அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்' என்ற கோரிக்கையை வலியுறுத்தி, 7-வது நாளாக சென்னையில் மக்கள் போராட்டம் வலுத்துவருகிறது.

இந்தப் போராட்டத்தின் பின்னணி குறித்துப் பேசிய பா.ஜ.க மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், ``பிணத்தின்மீது ஆட்சி செய்ய நினைக்கிறது தி.மு.க" என்று காட்டமாக விமர்சித்துள்ளார். உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், இன்னும் சீரியஸாக `சி.ஏ.ஏ போராட்டத்தின்போது சாக வேண்டும் என வருபவர்கள் எப்படி உயிர் வாழ்வார்கள்?" என்று அம்மாநில சட்டசபையிலேயே கேட்டிருக்கிறார்.

இந்நிலையில், தமிழக பா.ஜ.க-வின் மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணனிடம் பேசினோம்...

சி.ஏ.ஏ எதிர்ப்பு போராட்டம்
சி.ஏ.ஏ எதிர்ப்பு போராட்டம்

``சி.ஏ.ஏ-வுக்கு எதிரான போராட்டங்கள் குறித்துப் பேசும்போது, `சாக நினைக்கிறாங்க, பிணத்தின் மீது அரசியல்' என்றெல்லாம் பா.ஜ.க தலைவர்கள் பேசிவருவது மறைமுக மிரட்டல்தானே?''

``யோகி ஆதித்யநாத் என்ன பேசினார் என்று எனக்குத் தெரியாது. எனவே, அவருடைய பேச்சோடு என் பேச்சை இணைத்துப் பார்க்காதீர்கள். `யார் செத்தாலும் அந்தப் பிணத்தை வைத்து அரசியல் செய்யக்கூடிய கட்சிதான் தி.மு.க' என்றுதான் நான் சொன்னேன்.

நாட்டில் ஒரு பிரச்னையும் இல்லாத சூழ்நிலையில், போராட்டத்தைத் தூண்டி, அதன்மூலம் அரசியல் ஆதாயம் தேட முயற்சிப்பதுதான் தி.மு.க-வின் தன்மை. 1960-களில் இந்தி மொழிக்கு எதிரான போராட்டங்களை தி.மு.க தூண்டிவிட்டதால், பலபேர் மரணமடைந்திருக்கிறார்கள். அந்த வகையில், இன்னும் ஒரு வருடத்துக்குப் பிறகு வரப்போகிற சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள இப்போதே தி.மு.க தயாராகிவருகிறது என்பதைத்தான் இது காட்டுகிறது.''

பெண்ணைக் காப்பாற்றிய ஹீரோக்கள்!- திருப்பூர் விபத்தில் இறந்த கண்டக்டர், டிரைவரால் வேதனையில் கேரளம்

``இந்தியா முழுக்கவே, குடியுரிமை திருத்தச் சட்டம் விவகாரம் தொடர்பான போராட்டங்கள் வலுத்திருக்கின்றனவே... அதற்கும் தி.மு.க-தான் காரணமா?''

``மற்ற மாநிலங்களில் நடைபெறும் போராட்டங்களின் பின்னணியில் காங்கிரஸ் கட்சி இருக்கிறது. தி.மு.க - காங்கிரஸ் உள்ளிட்ட ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக் கட்சியினரே நாடு முழுக்க இப்படியொரு போராட்டக் களத்தை உருவாக்கிக் கொடுக்கிறார்கள்.''

யோகி ஆதித்யநாத்
யோகி ஆதித்யநாத்

``நாடு முழுக்க, தன்னெழுச்சியாக நடைபெற்றுவரும் போராட்டத்தை, மிக எளிதாக `எதிர்க்கட்சியினர் தூண்டிவிடுகிறார்கள்' என்று சொல்லிவிட முடியுமா?''

``தி.மு.க-வுக்கு 37 எம்.பி-க்கள் இருக்கிறார்கள்தானே... இவர்களெல்லாம் நாடாளுமன்றத்தில், `இந்த சட்டத்தால் இஸ்லாமியர்கள் இந்த வகையிலெல்லாம் பாதிக்கப்படப் போகிறார்கள்' என்று கேள்வி எழுப்பினார்களா? சம்பந்தப்பட்ட துறை அமைச்சரை சந்தித்து, `சிறுபான்மையினர் பாதிக்கப்படப் போகிறார்கள் என்ற அச்சம் நிலவுகிறது. எனவே, தெளிவைக் கொடுங்கள்' என்று பேசினார்களா?''

``சி.ஏ.ஏ மசோதா நிறைவேற்றத்தின்போது, எதிர்க்கேள்விகள் கேட்டதும், சி.ஏ.ஏ-வுக்கு எதிரான மக்கள் கையெழுத்தை ஜனாதிபதியிடம் சமர்ப்பித்ததும் தி.மு.க எம்.பி-க்கள்தானே?"

``ஜனாதிபதியிடம் மனு கொடுத்து என்ன பண்ண முடியும்? நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்பதும் அமைச்சரை சந்தித்து சந்தேகத்தை தெளிவுபடுத்தக் கோரியும் கேட்டிருக்க வேண்டுமா இல்லையா?''

கையெழுத்து இயக்கத்தில் ஸ்டாலின்
கையெழுத்து இயக்கத்தில் ஸ்டாலின்

``தி.மு.க-தான் போராட்டத்தைத் தூண்டிவிடுகிறது என்று எந்த ஆதாரத்தின் அடிப்படையில் கூறுகிறீர்கள்?"

``போராடுவதற்கு தெருவுக்கு வாருங்கள் என்று மு.க.ஸ்டாலின்தானே கூப்பிடுகிறார். அவருடைய முரசொலி பத்திரிகையிலேயே, `இந்த விஷயங்களினால் நாங்கள் பாதிக்கப்படுகிறோம்' என்று விளக்கமாகக் குறிப்பிடலாமே... அதை ஏன் அவர் செய்யவில்லை?

உதாரணத்துக்கு, `கொலைக்குற்றவாளிக்கு மரண தண்டனை' என்று சட்டம் இருக்கும்போது, `என்னைக் குறிவைத்துத்தான் இந்தச் சட்டம்' என்று சொன்னால் அதற்கு என்ன அர்த்தம்?''

``தமிழ் உள்ளிட்ட மற்ற மொழி வளர்ச்சிக்காக ஒதுக்கப்பட்ட நிதியைவிடவும் சம்ஸ்கிருத மொழி வளர்ச்சிக்காக 22 மடங்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறதே?''

``தமிழ் மொழிக்கும் மொழி வளர்ச்சிக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என்பதுதான் எங்கள் நிலைப்பாடும். தமிழ்நாடு அரசாங்கமும் இதற்கு தனி கவனம் செலுத்த வேண்டும். 37 எம்.பி-க்களை வைத்திருக்கக்கூடிய தி.மு.க-வும் இதற்காகப் பேசவேண்டிய இடத்தில் பேச வேண்டுமே தவிர, தமிழ் மொழி வளர்ச்சிக்காக நிதி கிடைக்கவில்லை; கிடைக்கவில்லை என்று இங்கே மட்டும் பேசிக்கொண்டிருந்தால் என்ன கிடைக்கும்?

கடந்த காலங்களில், இவர்கள் கூட்டணியிலிருந்தபோது சம்ஸ்கிருத மொழிக்கு ஒதுக்கப்பட்ட நிதி பற்றி ஒரு வார்த்தைகூட பேசாமலிருந்தவர்கள், இப்போது மட்டும் எதிர்த்துப் பேசிவருவதுதான் கேள்விக்குள்ளாக்கப்பட வேண்டும் என்கிறேன்.''

மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின்

``ஆளுங்கட்சியைச் சேர்ந்த தலைவர் என்ற முறையில், தமிழ் மொழி வளர்ச்சி நிதிக்காக உங்களுடைய பங்களிப்பு என்ன?''

``சம்ஸ்கிருதத்துக்கு அள்ளிக் கொடுக்க வேண்டும்; தமிழ் மொழிக்கு கிள்ளிக் கொடுக்க வேண்டும் என்பதில் எனக்கு உடன்பாடு கிடையாது. என்னைப் பொறுத்தவரையில், என் தமிழ் மொழிக்கு எவ்வளவு முக்கியத்துவம் உயர்வு கொடுக்க வேண்டுமோ அதைக் கொடுத்தே ஆகவேண்டும். எனவே, சம்ஸ்கிருதத்துக்கோ அல்லது வேறு எந்த மொழிக்குமோ என்ன வேண்டுமானாலும் கொடுத்துவிட்டுப் போங்கள். ஆனால், என் தமிழ் மொழிக்கு அதைவிடவும் அதிகமாக நிதி ஒதுக்க வேண்டும் என்று கேட்பதுதான் நம் கடமை. அதற்கான அழுத்தங்களை என்னால் எந்தளவு கொடுக்க முடியுமோ அதை நான் கட்டாயம் செய்வேன்.''

`வருமானம் ரூ.30,000 கோடி; விழிப்புணர்வுக்கு ரூ.3 கோடி!’ -தமிழக டாஸ்மாக் கடைகளின் தற்போதைய நிலை

``மத்திய பா.ஜ.க அரசின் ஜிஎஸ்டி, 21-ம் நூற்றாண்டின் மிகப்பெரிய முட்டாள்தனம் என்கிறாரே சுப்பிரமணியன் சுவாமி?"

சுப்பிரமணியன் சுவாமி கருத்துக்கு, `நோ கமென்ட்ஸ்!' - ஒதுங்கிச்செல்லும் பொன்.ராதாகிருஷ்ணன்

``நோ கமென்ட்ஸ்!"

அடுத்த கட்டுரைக்கு