Published:Updated:

`ஜம்மு, காஷ்மீருக்கு மட்டும் சிறப்புக் கவனம் ஏன்?'-புதுவை முதல்வரின் `திருநங்கை' ஒப்பீட்டு சர்ச்சை

ஜி.எஸ்.டி வருவாயின்போது மட்டும் புதுச்சேரியை மாநிலமாக பார்க்கும் மத்திய அரசு, மக்கள் நலத்திட்டங்களுக்கான நிதி அளிக்கும்போது மட்டும் யூனியன் பிரதேசமாகப் பார்க்கிறது.

நாராயணசாமி
நாராயணசாமி

`வளர்ந்து வரும் இந்திய நிதி கூட்டாட்சித் தத்துவத்தின் சவால்கள்' என்ற தலைப்பில் தேசிய கருத்தரங்கு ஒன்று புதுச்சேரியில் உள்ள தனியார் விடுதியில் இன்று தொடங்கியது. இந்தக் கருத்தரங்கில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கனிமொழி, கேரள மாநில நிதி அமைச்சர் தாமஸ் ஐசக் மற்றும் சி.பி.எம் தமிழ் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி
புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி

நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் நாராயணசாமி, ``சமீபத்தில் யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்ட ஜம்மு மற்றும் காஷ்மீர் ஆகியவை 15-வது நிதிக்குழுவில் சேர்க்கப்பட்டுள்ளது.

`சிவாஜி கணேசனை மிஞ்சிய ஒரு நடிகர் அவர்'- யாரைச் சொல்கிறார் நாராயணசாமி?

ஆனால், யூனியன் பிரதேசங்களான புதுச்சேரியும் டெல்லியும் நிதிக்குழுவில் சேர்க்கப்படவில்லை. புதுச்சேரி மாநிலத்தை நிதிக்குழுவில் சேர்க்க வேண்டும் என்று பிரதமர், நிதியமைச்சர், உள்துறை அமைச்சர் எனப் பலரையும் சந்தித்து வலியுறுத்தினேன். ஆனால், அதை செயல்படுத்தாமல் புதிதாக பிரித்த மாநிலத்தை மட்டும் சேர்த்துள்ளனர்.

கருத்தரங்கு மேடை
கருத்தரங்கு மேடை

முன்பெல்லாம் புதுச்சேரிக்கு மத்திய அரசு 70 சதவிகித நிதியைக் கொடுத்துவந்தது. ஆனால், தற்போது 30 சதவிகிதம்தான் என மத்திய அரசு தெரிவித்துவிட்டது. அதில் கையில் கிடைப்பதோ வெறும் 26 சதவிகித நிதிதான்.

அதேநேரத்தில் மற்ற மாநிலங்களுக்கு 42 சதவிகிதம் மத்திய அரசின் நிதி கிடைக்கிறது. மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றும் பொறுப்பு எங்களுக்கு உள்ளது. இப்படி பல தடைகளுக்கு இடையிலும் மாநிலத்தின் வளர்ச்சி 11.4 சதவிகிதம் என்ற அளவில் உள்ளது.

தேசிய கருத்தரங்கு
தேசிய கருத்தரங்கு

மத்தியில் மாநிலங்களுக்கான நிதிக்குழு, யூனியன் பிரதேசங்களுக்கான நிதிக்குழு என இரு நிதிக்குழுக்கள் இருக்கின்றன. ஆனால், இவை இரண்டிலுமே புதுச்சேரி மாநிலம் இல்லை. ஜி.எஸ்.டி, சுங்கம் உள்ளிட்ட பல்வேறு வருவாயை மத்திய அரசு பெறும்போது மட்டும் புதுச்சேரியை ஒரு மாநிலமாக மத்திய அரசு கருதுகிறது. ஆனால், மக்கள் நலத்திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டின்போது யூனியன் பிரதேசமாகப் பார்க்கிறது. இதற்கு எங்களை திருநங்கை என அறிவித்துவிடுங்கள். எங்களிடம் வளம் உள்ளது. ஆனால், நிதியில்லாமல் பல்வேறு சிக்கல்களில் தவிக்கிறோம்” என்றார்.

மத்திய அரசின் மீதான விமர்சனத்தை முதல்வர் நாராயணசாமி முன்வைத்தாலும், திருநங்கைகளோடு ஒப்பிட்டுப் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.