Published:Updated:

`அரசியலுக்குள் செல்ல விரும்பவில்லை... ஜெய் ஹிந்த்!' - ஹிஜாப் சர்ச்சைக்கு விளக்கமளித்த துணைவேந்தர்

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கலந்துகொண்ட பட்டமளிப்பு விழாவில், என்ன நடந்தது என்பது குறித்து விளக்கமளித்திருக்கிறார் புதுவைப் பல்கலைக்கழகத் துணைவேந்த குர்மீத் சிங்.

புதுவைப் பல்கலைக்கழகம்
புதுவைப் பல்கலைக்கழகம்

புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் 27-வது பட்டமளிப்பு விழா கடந்த 27-ம் தேதி நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்ட குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், மாணவ, மாணவியர்களுக்கு பட்டங்களையும் தங்கப் பதக்கங்களையும் வழங்கினார். விழா அரங்கத்துக்குள் குடியரசுத் தலைவர் வருகை தருவதற்கு முன்னர், அங்கு தங்கப் பதக்கம் பெறுவதற்காக அமர்ந்திருந்த கேரள இஸ்லாமிய மாணவி ரபீஹா காவல்துறையினரால் வெளியேற்றப்பட்டார்.

பட்டமளிப்பு விழா
பட்டமளிப்பு விழா

மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கிவிட்டு குடியரசுத் தலைவர் சென்ற பிறகே ரபீஹா அரங்கத்துக்குள் அனுமதிக்கப்பட்டார். இந்த விவகாரம் தேசிய அளவில் சர்ச்சையைக் கிளப்பியது. தொடர்ந்து பல்கலைக்கழகத்தின் கலாசார இயக்குநர் ராஜீவ் ஜெயினிடம் பட்டம் பெற்ற அவர், தன்னை அவமானப்படுத்திவிட்டதாகக் கூறி தங்கப் பதக்கத்தை வாங்க மறுத்துவிட்டார்.

இந்த விவகாரம் குறித்துப் பேசிய மாணவி ரபீஹா, ``என்னை எதற்கு வெளியேற்றினார்கள் என்று தெரியவில்லை. நான் தலையில் ஹிஜாப் அணிந்தது காரணமா என்று தெரியவில்லை. குடியுரிமை சட்டத்துக்கு எதிராகப் போராடிக்கொண்டிருக்கும் என் சகோதரர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து தங்கப் பதக்கத்தை நான் வாங்கவில்லை” என்று பேட்டியளித்தார்.

மாணவி ரபீஹா
மாணவி ரபீஹா

மாணவி ரபீஹா வெளியேற்றப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், ``பட்டமளிப்பு விழாவில் மாணவி ரபீஹாவால் கலந்துகொள்ள முடியாதபடி அவர் வெளியே அமர வைக்கப்பட்டிருக்கிறார். அந்த விழாவில் நான் இருந்தாலும் அவர் வெளியேற்றப்பட்ட விவகாரம் எனக்குத் தெரியாது. அவரை தடுத்து நிறுத்தியது யார்... எதற்காகத் தடுக்கப்பட்டார் என்று மக்கள் மத்தியில் கேள்வி எழுந்திருக்கிறது. அதனால் அதுகுறித்து பல்கலைக்கழக நிர்வாகத்திடமும் காவல்துறையிடமும் விளக்கம் கேட்டிருக்கிறேன்” என்று நேற்று கூறியிருந்தார் முதல்வர் நாராயணசாமி.

`ஹிஜாப் அணிந்தது குற்றமா?' - குடியரசுத் தலைவர் விழாவில் கொதித்த புதுச்சேரி பல்கலை மாணவி #CAA

இதையடுத்து பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் குர்மீத் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் பட்டமளிப்பு விழாவின் வீடியோ ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். 20 விநாடிகள் ஓடக்கூடிய அந்த வீடியோவில், பட்டம் பெறும் ஒரு மாணவியின் பெயர் அழைக்கப்படுகிறது. அப்போது அவருக்கான பதக்கங்களையும் சான்றிதழ்களையும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடம் எடுத்துவந்து கொடுக்கிறார் ஹிஜாப் அணிந்திருக்கும் இஸ்லாமிய மாணவி ஒருவர்.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்

அதைப் பெற்றுக்கொள்ளும் குடியரசுத் தலைவர், மாணவி ஒருவருக்கு பதக்கங்களை வழங்குவதோடு அந்த வீடியோ காட்சி முடிகிறது.

அத்துடன், ``கல்வியாளராக இருக்கும் நான் அரசியலுக்குள் செல்ல விரும்பவில்லை. அதனால் பட்டமளிப்பு விழாவின் சிறிய வீடியோ காட்சியைப் பதிவிட்டிருக்கிறேன். அதன் வழியாக நீங்கள் உண்மையைத் தெரிந்துகொள்ளலாம். ஜெய்ஹிந்த்…!” என்று ட்வீட்டைப் பதிவு செய்திருக்கிறார், குர்மீத்சிங்.