Election bannerElection banner
Published:Updated:

காஞ்சிபுரத்தில் அதிர்ச்சி: இறந்தவரின் பெயரில் வாங்கப்பட்ட பொங்கல் பரிசுத்தொகை, ரேஷன் பொருள்கள்!

ரேஷன் கடை
ரேஷன் கடை

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இரண்டு வருடங்களுக்கு முன்பு இறந்தவரின் பெயரில் பொங்கல் பரிசுத்தொகை வாங்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம், திருப்போரூர் அருகேயுள்ள நெம்மேலி கிராமத்தில் ஹரி கிருஷ்ணன் (49) என்பவர் வசித்துவந்தார். இவரின் மனைவி பத்து வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இந்தத் தம்பதியருக்குக் குழந்தைகள் கிடையாது. தனியாக வசித்துவந்த ஹரிகிருஷ்ணன், கடந்த 2019-ம் ஆண்டு, ஜனவரி 15-ம் தேதி உயிரிழந்தார். இறந்து இரண்டு வருடங்கள் ஆகும் நிலையில் தற்போது, அவரின் குடும்ப அட்டையிலிருந்து பொங்கல் பரிசுத்தொகை எடுக்கப்பட்டதாக குறுஞ்செய்தி வந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

குறுஞ்செய்தி
குறுஞ்செய்தி

இது குறித்துப் பேசிய அவரின் சகோதரர் ஜானகி ராமன், ``என் அண்ணன் இறந்து இரண்டு வருடங்கள் ஆகின்றன. இறந்தவர்களின் குடும்ப அட்டையைப் பயன்படுத்தக் கூடாது ஒப்படைத்துவிடுங்கள் என்று ரேஷன்கடை ஊழியர்கள் கூறினார்கள். அவரின் குடும்ப அட்டையை 2020-ம் ஆண்டு, மார்ச் மாதம் நியாயவிலைக் கடையில் ஒப்படைத்துவிட்டேன். என் சகோதரர் பயன்படுத்திய சிம்கார்டை எனது பெயரில் வாங்கி கொடுத்திருந்தேன். தற்போது அந்த சிம்கார்டை நான் பயன்படுத்தியபோது, பொங்கல் பரிசுத்தொகை வழங்கப்பட்டதாகக் குறுஞ்செய்தி வந்தது" என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், ``தொடர்ந்து மற்ற குறுஞ்செய்திகளைப் பார்க்கும் போது, மாதம்தோறும் பொருள் வாங்கப்பட்டதாகக் குறுஞ்செய்தி வந்திருக்கிறது. இரண்டு வருடங்களுக்கு முன் இறந்தவரின் குடும்ப அட்டையில் எப்படி பொருள்கள் வாங்க முடியும்... அவரின் பெயரில் அந்தப் பணத்தை எடுத்தவர்கள் யார்... இந்தச் செயலில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறினார்.

ஹரிகிருஷ்ணன் இறப்பு சான்றிதழ்
ஹரிகிருஷ்ணன் இறப்பு சான்றிதழ்

ஹரிகிருஷ்ணன் இ.சி.ஆர் சாலையிலுள்ள பட்டிக்குளத்திலிருக்கும் ரேஷன் கடையில்தான் பொருள்களை வாங்கி வந்திருக்கிறார். இவரின் குடும்ப அட்டையில்தான் பணம் எடுக்கப்பட்டிருக்கிறதா என்பதை உறுதி செய்ய, ``மாநில நுகர்வோர் மையத்தைத் தொடர்புகொண்டு இந்தக் குடும்ப அட்டை விவரங்களைக் கொடுத்து, கேட்டிருந்தோம். நுகர்வோர் மையத்தில் ஹரிகிருஷ்ணனின் குடும்ப அட்டை இன்றளவும் ஆக்ட்டிவாக இருப்பதாகவும், கடந்த ஜனவரி 11-ம் தேதி இலவச வேட்டி சேலை வாங்கியது வரை விவரங்களை உறுதிப்படுத்தினர்.

அந்த ரேஷன்கடை அமைந்திருக்கும் பகுதி நிர்வாகியிடம் இது குறித்துக் கேட்டபோது, ``இந்தப் புகார் குறித்து உரிய விசாரணை நடத்தப்படும். சம்பந்தப்பட்ட அனைவரின் மீதும் துறைரீதியான நடவடிக்கை கண்டிப்பாக எடுக்கப்படும்" என்று கூறினார்.

ஹரிகிருஷ்ணன் குடும்ப அட்டை
ஹரிகிருஷ்ணன் குடும்ப அட்டை

இந்த ரேஷன் கடையில் ஹரிகிருஷ்ணனின் கணக்கில் மட்டுமே மாதா மாதம் பொருள்கள், கொரோனா ஊரடங்கில் நிவாரணாத் தொகை மற்றும் பொருள்கள், பொங்கல் பரிசுத்தொகை என அனைத்தும் வாங்கப்பட்டுள்ளன. இவரைப்போல இன்னும் எத்தனை பேரின் கணக்குகளில் அவருக்கே தெரியாமல் பணமும் பொருளும் எடுக்கப்பட்டுக்கொண்டிருக்கிறதோ... வரும் காலங்களில் இது போன்ற தவறுகள் நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்பதே ஒட்டுமொத்த மக்களின் ஒருமித்த கருத்தாக இருக்கிறது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு