Published:Updated:

கல்லூரிப் பேராசிரியர் டு அமைச்சர்... திருக்கோவிலுார் தொகுதியை வென்ற பொன்முடி! #TNelections2021

கட்சிக்காரர்கள் ஆதரவுடன் வெற்றி பெறும் பொன்முடி, அமைச்சர் ஆனவுடன் கட்சிக்காரர்களை மறந்து விடுவார் என்பதும், அமைச்சர் பதவி ஏற்றதும், தாம் சார்ந்த சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு மட்டும்தான் உதவிகள் செய்வார் என்பதும் அவர் மீது தி.மு.க.வினர் வைக்கும் குற்றச்சாட்டு.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

திமுக வேட்பாளராக அக்கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளரும், முன்னாள்அமைச்சருமான பொன்முடி போட்டியிட்டதாலேயே திருக்கோவிலுார் தொகுதி நட்சத்திர வேட்பாளர் தொகுதியாக இந்தத் தேர்தலில் கவனம் ஈர்த்தது. திருக்கோவிலூர் தொகுதியில் 1952 ஆம் ஆண்டு முதல் நடைபெற்ற தேர்தலில் தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி 1 முறையும், காங்கிரஸ் 4 முறையும், தி.மு.க 5 முறையும், அ.தி.மு.க. 4 முறையும், பா.ம.க. ஒரு முறையும், தே.மு.தி.க. 1 முறையும் வெற்றி பெற்றுள்ளன. 1989-ல் விழுப்புரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பொன்முடி,1991-ல் விழுப்புரம் தொகுதியில் தோல்வி அடைந்தார். 1996-ல் அதே விழுப்புரத்தில் வெற்றி. பின்னர் 2001, 2006 தேர்தல்களிலும் விழுப்புரம் தொகுதியில் வெற்றி. 2011 தேர்தலில் அ.தி.மு.க வேட்பாளர் சி.வி.சண்முகத்திடம் தோல்வியடைந்தார்.

அதன் பிறகு 2016 சட்டமன்றத் தேர்தலில் திருக்கோவிலூர் தொகுதிக்கு மாறி களமிறங்கினார். அந்தத் தேர்தலில் 93,837 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் கோதண்டராமன் 52,780 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். எம்.ஏ., (வரலாறு), எம்.ஏ., (பொது நிர்வாகம்), எம்.ஏ., (சமூக அறிவியல்), பி.எட்., பி.ஜி.எல்., பிஹெச்.டி என முனைவர் பட்டம் வரை, பல பட்டமேற்படிப்புகளுக்குச் சொந்தக்காரர் பொன்முடி. 17 ஆண்டு காலம் கல்லூரிப் பேராசிரியர் பணியில் இருந்தவர்.

பொன்முடி
பொன்முடி

விழுப்புரம் கலைக் கல்லூரியில் பணியில் இருந்தபோது திராவிடர் கழக மேடைகளில் பேச்சாளராக அறிமுகமானவர். அரசியல் ஆர்வம் காரணமாக தனது பணியை ராஜினாமா செய்து விட்டு, தி.மு.க-வில் சேர்ந்தார். முதன் முதலாக 1989 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றவர், சுகாதாரத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். மீண்டும்1996-ல் தி.மு.க ஆட்சி அமைத்த போது, பொன்முடி போக்குவரத்துறை அமைச்சரானார். 2006-2011 தி.மு.க ஆட்சியின்போது, உயர்கல்வித்துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்தார். கட்சிக்காரர்கள் ஆதரவுடன் வெற்றி பெறும் பொன்முடி, அமைச்சர் ஆனவுடன் கட்சிக்காரர்களை மறந்து விடுவார் என்பதும், அமைச்சர் பதவி ஏற்றதும், தாம் சார்ந்த சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு மட்டும்தான் உதவிகள் செய்வார் என்பதும் அவர் மீது தி.மு.க.வினர் வைக்கும் குற்றச்சாட்டு. ஆனாலும், மீண்டும் திருக்கோவிலூர் தொகுதியில் கட்சித் தலைமையின் ஆதரவுடன் களம் இறங்கிய பொன்முடி, இந்தமுறை பலமான போட்டியை எதிர்கொண்டார். பொன்முடியை எதிர்த்து, அதிமுக கூட்டணியில் பா.ஜ.க. கட்சியின் மாவட்டத் தலைவராக உள்ள கலிவரதனும், தினகரனின் அமமுக கூட்டணியில் இருக்கும் தேமுதிக மாவட்டச் செயலாளர் வெங்கடேசனும், நாம் தமிழர் கட்சி சார்பில் முருகன்என்பவரும் மோதினர்.

பொன்முடி
பொன்முடி

பல அதிருப்திகள் கட்சிக்குள் இருந்தாலும் இன்றைய வாக்கு எண்ணிக்கையில் ஆரம்பம் முதலே முன்னிலை வகித்து வந்தார் பொன்முடி. தபால் வாக்குகள் துவங்கி வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்ட போதும் பொன்முடி தொடர்ந்து முன்னிலையிலேயே இருந்தார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜ.க. கட்சியின் மாவட்டத் தலைவராக உள்ள கலிவரதன் தொடர்ந்து பின்னடைவை சந்திக்க இறுதியில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட கலிவரதனைவிட 58,339 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார் திமுகவின் மாநில துணைப் பொதுச் செயலாளர் பொன்முடி.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு