Published:Updated:

அதிமுக-வுக்குள் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்திய பொன்னையன் குரல் - சமாளிப்பாரா எடப்பாடி?

பொன்னையன்

பலகட்ட போராட்டங்களுக்குப் பிறகு அ.தி.மு.க-வின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றிருக்கும் நிலையில், பொன்னையன் பேசியதாக வெளியான ஆடியோவால், அ.தி.மு.க-க்குள் மீண்டும் புயல் வீசத் தொடங்கியிருக்கிறது.

அதிமுக-வுக்குள் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்திய பொன்னையன் குரல் - சமாளிப்பாரா எடப்பாடி?

பலகட்ட போராட்டங்களுக்குப் பிறகு அ.தி.மு.க-வின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றிருக்கும் நிலையில், பொன்னையன் பேசியதாக வெளியான ஆடியோவால், அ.தி.மு.க-க்குள் மீண்டும் புயல் வீசத் தொடங்கியிருக்கிறது.

Published:Updated:
பொன்னையன்

அ.தி.மு.க-வுக்கு ஒற்றைத் தலைமை வேண்டும் என்று கடந்த ஜூன் 14-ம் தேதி தொடங்கிய கலகக்குரல் ஜூலை 11-ம் தேதியன்று எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராகப் பொறுப்பேற்றதும் கொஞ்சம் ஓய்ந்திருந்தது.

பொன்னையன்
பொன்னையன்

ஆனால், கடந்த மே மாத இறுதியிலேயே அ.தி.மு.க-க்குள் ஒரு கலகக்குரல் கேட்டது. அதாவது, சென்னை ராயப்பேட்டையிலுள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அம்மா பேரவை மாவட்ட நிர்வாகிகளின் செயல்திறன் மேம்பாட்டுப் பயிற்சி முகாம் மே 31-ம் தேதி நடைபெற்றது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதில் பேசிய அமைப்புச் செயலாளர் பொன்னையன், ``பா.ஜ.க., அ.தி.மு.க-வின் கூட்டணிக் கட்சிதான் என்றாலும், அந்தக் கட்சி தமிழ்நாட்டில் வளர்வது அ.தி.மு.க-வுக்கு நல்லதல்ல. காவிரி நதிநீர், முல்லைப்பெரியாறு விவகாரத்தில் பா.ஜ.க-வினர் இரட்டை வேடம் போடுகிறார்கள். காவிரி, முல்லைப்பெரியாறு, பாலாறு விவகாரத்தில் தமிழக பாஜக குரல் எழுப்பாததை சமூக வலைதளங்கள் மூலம் அ.தி.மு.க-வின் தொழில்நுட்பப் பிரிவினர் அம்பலப்படுத்த வேண்டும். அ.தி.மு.க-வை அழித்து ஒழித்துவிட்டு, பாஜக வளரத் துடிக்கிறது" என்று கூட்டணிக் கட்சியின்மீது பெரிய குண்டை தூக்கிப் போட்டிருந்தார்.

எடப்பாடி பழனிசாமி, பொன்னையன்
எடப்பாடி பழனிசாமி, பொன்னையன்

பொன்னையனின் இந்தக் கருத்து அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி சுவரை அசைத்துப் பார்த்திருந்தது. பொன்னையன் பேசியது அவரது சொந்தக் கருத்து என்று அ.தி.மு.க தலைமை விளக்கமளித்ததும் விவகாரத்தின் வீரியம் சற்று குறைந்தநிலையில், ஜூன் 14-ம் தேதி ஒற்றைத் தலைமை கோஷம் வலுத்தது. இதற்கு மறுப்பு தெரிவிதது சட்டப் போராட்டம் நடத்திய ஓ.பி.எஸ் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதோடு அந்த அனல் சற்று தணிந்தது.

இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற முன்னாள் செயலாளர் நாஞ்சில் கோலப்பனிடம், பொன்னையன் பேசியதாக ஒரு ஆடியோ வெளியாகி இ.பி.எஸ் தரப்புக்குள் புகைச்சலை ஏற்படுத்தியிருக்கிறது. அந்த ஆடியோவில், ``தொண்டர்களெல்லாம் இரட்டை இலைப் பக்கம்தான் இருக்கிறார்கள். தலைவர்கள் பணம் பக்கம் நிற்கிறார்கள். இப்போ தங்கமணி தன்னைக் காப்பாற்றிக்கொள்ள ஸ்டாலின்கிட்ட ஓடுறாரு. அதே மாதிரி கே.பி.முனுசாமியும் ஸ்டாலினைத் திட்டுறதை நிறுத்திட்டாரு.

அதிமுக
அதிமுக

குவாரி, எஸ்போர்ட்ல ஒரு மாசத்துக்கு 2 கோடி ரூபாய் சம்பாதிக்கறாரு. எல்லாம் கொள்ளையடிச்ச பணத்தைப் பாதுகாக்க இப்பிடி ஆடுறாங்க. எடப்பாடி மட்டும்தான் மம்தா பானர்ஜி மாதிரி ஜெயிலுக்குப் போனாலும் பரவால்லைன்னு ஸ்டாலினைக் கொஞ்சம் திட்டுறாரு. குறைஞ்சது 100 கோடி, 200 கோடி இல்லாத மாவட்டச் செயலாளர் இல்லை. எடப்பாடி பின்னாடி போனாத்தான் இதைப் பாதுகாத்துக்க முடியும். தளவாய் சுந்தரம்தான் பெரிய புரோக்கர். எடப்பாடியைக் கெடுக்கறதே அவர்தான்.

வேலுமணி
வேலுமணி

எல்லா மா.செ-க்களையும் எம்.எல்.ஏ-க்களையும் நாலு வருஷமா கொள்ளையடிக்கவிட்டாரு. இப்போ அவரு முதுகிலேயே குத்திட்டாங்க. சி.வி.சண்முகம் பகல்லேயே குடிச்சிட்டு இருப்பாரு. இப்போ அவர் கையில 19 எம்.எல்.ஏ-க்கள். அந்தச் சாதி அடிப்படையில் எம்.எல்.ஏ-க்கள் இருக்கிறதால அவங்க பின்னாடி தொங்குறாங்க.

ஆறு மாவட்டத்துல இருக்குற 42 கொங்கு நாட்டு கவுண்டர்கள் எம்.எல்.ஏ-க்களில் எடப்பாடி கையில ஒன்பது பேர்தான். மீதி எல்லாரையும் காசு கொடுத்து, வேலுமணி, தங்கமணி கையில வெச்சிருக்காங்க. இதனால எடப்பாடிக்கு வேற வழியே இல்லை. நாளைக்கு முனுசாமியும் ஒற்றைத் தலைமைக்கு வரலாம். சாதி அடிப்படையில் ஒரு குழு வேலை செஞ்சுட்டு இருக்கு. பதவியைப் பாதுகாத்துக்கிட்டா போதும்னு எடப்பாடி ஓடிக்கிட்டு இருக்காரு முட்டாள்தனமா. யாருமே கட்சிக்கும் விசுவாசமா இல்லை..." என்று இருந்தது.

ஓ.பி.எஸ்-ஸுடன் நாஞ்சில் கோலப்பன்
ஓ.பி.எஸ்-ஸுடன் நாஞ்சில் கோலப்பன்

`இது என் குரலே இல்லை. யாரோ மிமிக்ரி செய்திருக்கிறார்கள்’ என பொன்னையன் மழுப்பினாலும், `அது பொன்னையன்தான்’ என நாஞ்சில் கோலப்பன் அடித்துக் கூறுகிறார்.

இந்த விவகாரம் எடப்பாடி முகாமுக்குள் புதுப் புயலையே கிளப்பயிருக்கிறது. இது தொடர்பாக எடப்பாடி முகாமில் விசாரித்தபோது, ``பொன்னையன் ரொம்பவே சீனியர். அவரே விவரமறியாமல் போனில் இப்படிப் பேசியிருக்கிறார். ஆடியோவில் பேசுவது பொன்னையன்தான் என்பது எங்களுக்குத் தெரியும். ஆனால், அவர்மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாத நிலையில் நாங்கள் இருக்கிறோம்.

கே.பி.முனுசாமி
கே.பி.முனுசாமி

ஒருவேளை அவர்மீது நடவடிக்கை எடுத்தால், எங்கள் தரப்பிலிருந்து வெளியேறி, ஓபிஎஸ் பக்கம் சென்றுவிட வாய்ப்பு இருக்கிறது. ஆடியோ குறித்து பொன்னையனிடம் எடப்பாடி இரவே கேட்டார். 'தெரியாம நடந்து போச்சு' என்று சொன்னாராம். அதேபோல, முனுசாமி, வேலுமணி, தங்கமணி, தளவாய் சுந்தரம் எனப் பலரும் பொன்னையன் மீது கடுப்பில் இருக்கிறார்களாம்.

சி.வி.சண்முகம்
சி.வி.சண்முகம்

சி.வி.சண்முகம் டெல்லி போயிட்டு வந்ததும், பிரச்னை பெரிதாக வாய்ப்பிருப்பதால், அவரைச் சொந்த ஊருக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்" என்றனர்.

ஒற்றைத் தலைமை விவகாரத்தின்போது, மாவட்டச் செயலாளர்களை எடப்பாடி தரப்பு பணம் கொடுத்து வளைத்துவிட்டதாக ஓ.பி.எஸ் தரப்பு சொல்லிக்கொண்டேயிருந்தது. இப்போது பொன்னையன் ஆடியோ அதை உறுதி செய்வதுபோல் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அமைப்புச் செயலாளராக இருந்த அவர் அந்தப் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு, அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்றச் செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார். இடைக்காலப் பொதுச்செயலாளராக பொறுப்பேற்றிருக்கும் எடப்பாடி பழனிசாமி இந்தச் சிக்கல்களை எப்படிக் கையாளப்போகிறார் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!