Published:Updated:

`நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் துரதிர்ஷ்டமானது'- பொன்.ராதாகிருஷ்ணன் வேதனை!

கனரா வங்கியில் அதிகபட்சமாக வடமாநிலத்தவர்கள் விண்ணப்பித்ததால் அவர்கள் அதிகம் தேர்வாகியுள்ளனர்.

பொன்.ராதாகிருஷ்ணன்
பொன்.ராதாகிருஷ்ணன்

மகாத்மா காந்தியடிகளின் 150-வது பிறந்தநாளையொட்டி கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில், வடசேரி பகுதியில் அமைந்துள்ள மகாத்மா காந்திஜி நினைவு பூங்காவில் உள்ள காந்தியடிகள் சிலைக்கு பி.ஜே.பி. முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பொன்.ராதாகிருஷ்ணன்
பொன்.ராதாகிருஷ்ணன்

பின்னர் மகாத்மா காந்திஜி நினைவு பூங்காவில் இருந்து நாகர்கோவில் ராமன்புதூர் வரை செல்லும் "காந்தி சங்கல்ப யாத்திரை" நடந்தது. இந்த நிகழ்ச்சியின்போது பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறுகையில், "அடிமைப்பட்டுக்கிடந்த பாரத தேசத்தை விடுதலைசெய்ய போராடி வாழ்நாள் முழுவதையும் நாட்டுப்பணிக்காக அற்பணித்த லட்சக்கணக்கான தேச பக்தர்கள் மத்தியில் தேசப்பிதா என அழைக்கும் அளவிற்கு உயர்ந்தவர் காந்தியடிகள். அவரின் 150 பிறந்தநாளை உலகம்முழுவதும் கொண்டாடுகிறார்கள். பி.ஜே.பி சார்பில் பாதயாத்திரை நிகழ்ச்சிகளை நடத்துகிறோம்.

தமிழகத்தில் எல்லா மாவட்டங்களிலும் இந்த நிகழ்ச்சி நடக்கிறது. குறைந்தது 10 கிலோ மீட்டர் வீதம் 15 நாட்களில் 150 கிலோமீட்டர் நடக்க உள்ளோம். காந்தி எந்த லட்சியங்களுக்காக வாழ்ந்தாரோ, அவரது லட்சியங்களை இன்றைய தலைமுறைக்கு கொடுக்கும் விதமாக யாத்திரை செல்லும் வழியில் பெரியவர்களை சந்தித்து ஆசிகளை பெறுகிறோம்.

காந்திஜி விரும்பிய விஷயங்களில் நடக்காத விஷயம். காங்கிரஸ் கட்சியை கலைத்துவிடுங்கள் தேவை இல்லை என்றார். அவர் ஆசை நிறைவேறவில்லை.

பொன்.ராதாகிருஷ்ணன்
பொன்.ராதாகிருஷ்ணன்

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்யப்பட்டது துரதிர்ஷ்டவசமான விஷயம். ஏழை வீட்டு குழந்தைகள் ஆள் மாறாட்டம் செய்யமாட்டார்கள். இதை தடுக்க அந்தந்த மாநிலங்கள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். நீட் வராமல் இருந்திருந்தால் எவ்வளவு மோசடி நடந்திருக்கும் என்பதை நினைத்துபார்க்க வேண்டும்.

கனரா வங்கியில் அதிகபட்சமாக வடமாநிலத்தவர்கள் விண்ணப்பித்ததால் அவர்கள் அதிகம் தேர்வாகியுள்ளனர். இதுபோன்ற தேர்வுகளில் மன்னின் மைந்தர்களுக்கு அதிகப்படியான இடம் கொடுக்க வேண்டும். அண்ணா பல்கலைகழக பாடத்திட்டத்தில் கொண்டுவரப்பட்டுள்ள பகவத் கீதை, வாழ்வியலுக்கு வழிகாட்டும் அற்புதமான நூல். வாழ்க்கைக்கான எடுத்துக்காட்டாக விளங்கும் அதை மதரீதியாக பார்க்கக்கூடாது" என்றார்.