Published:Updated:

`கிராமசபை பெயரிலாவது கிராமத்தைப் பார்க்கட்டும்!’ - தி.மு.க-வைச் சாடிய பொன்.ராதாகிருஷ்ணன்

`கிராமசபைக் கூட்டம் என்ற பெயரிலாவது தி.மு.க-வினர் கிராமத்தையும், விவசாயிகளையும் பார்க்கட்டும். தமிழகத்தில் ஐந்து முறை ஆட்சி நடத்தி என்ன நலதிட்டங்களை அவர்கள் கொண்டுவந்திருக்கிறார்கள்' என்று ஆவேசமாகக் கேட்கிறார் பொன்.ராதாகிருஷ்ணன்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

கன்னியாகுமரி ஜீரோ பாயின்ட் பகுதியில், முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பிறந்ததினம் கொண்டாடப்பட்டது. மாவட்ட தொழில் பிரிவுச் செயலாளர் சுபாஷ் தலைமையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு வாஜ்பாய் உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

பின்னர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ``விவசாயிகளை அரசியல் கட்சிகள் தூண்டிவிட்டுவருகின்றன. மத்திய அரசு கொண்டுவந்திருக்கும் விவசாயச் சட்டங்கள் இரண்டு மாநிலங்களுக்கு மட்டுமல்ல, இந்தியா முழுமைக்கும் உள்ளது.போராட்டம் நடத்தும் விவசாய அமைப்புகள், மத்திய அரசின் அழைப்பை ஏற்று பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ள வேண்டும். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு டெல்லியில் அய்யாக்கண்ணு நடத்திய போராட்டத்துக்குப் பின்னணியில் தி.மு.க இருந்தது.

அப்போது விவசாயிகளை துறைசார்ந்த அமைச்சர்களிடம் நான்தான் அழைத்துச் சென்றேன். விவசாயிகளுக்குத் தங்களின் உரிமைகளைக் கேட்க உரிமை உண்டு. அவர்கள் இரட்டிப்பு நன்மை அடைய வேண்டும் என்பதுதான் பிரதமரின் கனவு. இதற்காகத்தான் பிரதமர் மோடி உழைத்துக்கொண்டிருக்கிறார்.

பொன்.ராதாகிருஷ்ணன்
பொன்.ராதாகிருஷ்ணன்

ஐந்து முறை தமிழகத்தில் ஆட்சி நடத்திய தி.மு.க-வுக்கு தமிழகத்தின் நிலப்பரப்பு எவ்வளவு என்று தெரியாமல், குடும்பத்துக்கு இரண்டு ஏக்கர் என்று அறிவித்தது எதன் அடிப்படையில்? கிராமசபைக் கூட்டம் என்ற பெயரிலாவது தி.மு.க-வினர் கிராமத்தையும், விவசாயிகளையும் பார்க்கட்டும். தமிழகத்தில் ஐந்து முறை ஆட்சி நடத்தி என்ன நலத்திட்டங்களை அவர்கள் கொண்டுவந்திருக்கிறார்கள்...

தி.மு.க-வுக்கு ஒட்டுக் கேட்க என்ன தகுதி இருக்கிறது... அந்த வாக்குறுதியை நிறைவேற்றிவிட்டு அடுத்த வாக்குறுதியை தி.மு.க கொடுக்கட்டும். வாக்குறுதி கொடுக்க அருகதையற்ற கட்சி தி.மு.க. அந்தக் கட்சி தமிழகத்தில் தற்போது தேய்ந்துகொண்டிருக்கிறது. கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதிக்கு நடக்கும் இடைத்தேர்தலில் பா.ஜ.க வெற்றி பெறும். கன்னியாகுமரி மாவட்டத்தில் 50,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான திட்டப் பணிகள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. மேலும், பல்வேறு பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டிருக்கிறது.

கன்னியாகுமரி
கன்னியாகுமரி

கன்னியாகுமரி தொகுதியில் பா.ஜ.க வெற்றி பெற்றால் மட்டுமே திட்டங்களை நிறைவேற்ற முடியும். ஒரு எம்.பி-யால் எல்லாவற்றையும் சாதிக்க முடியாது. குமரி மாவட்ட வளர்ச்சிக்கான வேலைக்காரன் வெற்றி பெற்றால்தான் இந்தப் பணிகள் செய்து முடிக்கப்படும். அ.தி.மு.க கூட்டணியில்தான் பா.ஜ.க இருக்கிறது. இதில் யாருக்கும் எந்தச் சந்தேகமும் கிடையாது. பொங்கல் பண்டிகைக்காக தமிழக அரசு ரேஷன் கார்டுகளுக்கு 2,500 ரூபாய் வழங்குகிறது. மக்கள் கஷ்டப்படும் நேரத்தில் இது போன்ற அறிவிப்பு தவறில்லை" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு