Election bannerElection banner
Published:Updated:

கன்னியாகுமரி பா.ஜ.க வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன்... ப்ளஸ், மைனஸ் ரிப்போர்ட்!

பொன்.ராதாகிருஷ்ணன்
பொன்.ராதாகிருஷ்ணன்

அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணியில் கன்னியாகுமரி நாடாளுமன்ற இடைத்தேர்தல் வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டிருக்கிறார்.

கடந்த 2019-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றப் பொதுத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ஹெச்.வசந்தகுமார் வெற்றிபெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பொன்.ராதாகிருஷ்ணன் இரண்டாம் இடத்தைப் பிடித்தார். இந்தநிலையில், ஹெச்.வசந்தகுமார் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, மீண்டுவந்த பின்னர் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஆண்டு மரணமடைந்தார். அதைத் தொடர்ந்து கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதிக்கு ஏப்ரல் 6-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கிறது. அதில் அ.தி.மு.க கூட்டணியில் பா.ஜ.க-வைச் சேர்ந்த பொன்.ராதாகிருஷ்ணனுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சியில் பொன்.ராதாகிருஷ்ணன்!
ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சியில் பொன்.ராதாகிருஷ்ணன்!
பைல் படம்

பொன்னார் கடந்துவந்த பாதை:

1951, மார்ச் 1-ம் தேதி பிறந்த பொன்.ராதாகிருஷ்ணன் சட்டப்படிப்பை முடித்த கையோடு ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் இணைந்தார். பின்னர் இந்து முன்னணி நிறுவனtஹ் தலைவராக இருந்த ராமகோபாலனுக்கு உதவியாக உடன் இருந்தார். 1993-ம் ஆண்டு ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் `பிரசாரக்’-காக (முழுநேர ஊழியர்) ஆனார். இதனால் திருமணம் செய்துகொள்ளாமல் முழுநேரமாக இயக்கப் பணியில் இணைந்தார். 1993-ம் ஆண்டு, கன்னியாகுமரி மாவட்ட பா.ஜ.க தலைவராக ஆன பொன்.ராதாகிருஷ்ணனின் கண்ணசைவில்தான் இன்றுவரை குமரி பா.ஜ.க இயங்குகிறது. பா.ஜ.க மாநிலத் தலைவராக இரண்டு முறை இருந்திருக்கிறார்.

1991-ம் ஆண்டு முதல் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டுவருகிறார். இன்றைய கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதி, அப்போது நாகர்கோவில் நாடாளுமன்றத் தொகுதி என இருந்தது. இதுவரை எட்டு முறை நாடாளுமன்றத் தேர்தல்களிலும், ஒருமுறை 2011-ல் நாகர்கோவில் சட்டசபைத் தேர்தலிலும் போட்டியிட்டிருக்கிறார். 1999, 2014 ஆகிய இரண்டு நாடாளுமன்றத் தேர்தல்களில் வெற்றிபெற்று மத்திய அமைச்சர் ஆனார். இதுவரை ஒன்பது தேர்தல்களில் போட்டியிட்ட பொன்.ராதாகிருஷ்ணன் 10-வது முறையாக இம்முறையும் களம்காணுகிறார்.

மார்த்தாண்டம் மேம்பாலம்
மார்த்தாண்டம் மேம்பாலம்

களத்தில் ப்ளஸ் - மைனஸ்:

கன்னியாகுமரி நாடாளுமன்றத் தேர்தல் வெற்றியைத் தீர்மானிப்பது மதம் என்றே சொல்லலாம். இங்கு சிறுபான்மையினர் கிட்டத்தட்ட பெரும்பான்மையினருக்கு இணையாக இருக்கிறார்கள். சிறுபான்மையினர் வாக்கு பெரும்பாலும் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணிக்குத்தான் செல்லும். ஆனால் பொன்.ராதாகிருஷ்ணன் வெற்றிபெற்ற சமயங்களில் குறிப்பிட்ட சில பகுதிகளிலுள்ள சிறுபான்மையினரும் அவருக்கு வாக்களித்திருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக மீனவர்கள் வாக்கும் பொன்னாருக்குக் கிடைத்திருக்கிறது.

2014 முதல் 2019-வரை மத்திய அமைச்சராக இருந்த பொன்.ராதாகிருஷ்ணன், மார்த்தாண்டம் மற்றும் பார்வதிபுரத்தில் மேம்பாலங்கள், சுசீந்திரம் பழையாற்றில் புதிய பாலம், கன்னியாகுமரிக்குச் செல்ல சுசீந்திரத்திலிருந்து தனியாக இணைப்புச்சாலை, அனைத்து ரோடுகளையும் செப்பனிட்டது என வளர்ச்சிகளைக் குவித்திருந்தார். அதுபோல நான்குவழிச் சாலைப் பணிகள், இரட்டை ரயில் பாதைப் பணிகளை முடுக்கிவிட்டார். ஆனால், முதலில் இனயம் பகுதியிலும், பின்னர் கன்னியாகுமரியிலும் வர்த்தகத் துறைமுகம் கொண்டுவருவதாக பொன்.ராதாகிருஷ்ணன் கூறியது, கடலோரப் பகுதி மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. மேலும், கட்சியினரிடையேயும் சின்னச் சின்ன அதிருப்திகள் இருந்தன. இதுதான் கடந்தமுறை பொன்.ராதாகிருஷ்ணன் தோல்வியடையக் காரணமாகிவிட்டது.

கோயில் கும்பாபிஷேக விழாவில் பொன்.ராதாகிருஷ்ணன்
கோயில் கும்பாபிஷேக விழாவில் பொன்.ராதாகிருஷ்ணன்

அதேசமயம் 2019-ல் மீண்டும் பா.ஜ.க ஆட்சி அமைத்த பிறகு வெளிநாடுகளில் சிக்கிய மீனவர்களை மீட்பதற்கு பொன்.ராதாகிருஷ்ணன் உதவியிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் வர்த்தகத் துறைமுகம் பற்றிப் பேசுவதையே பா.ஜ.க-வினர் விட்டுவிட்டனர். அதிலும் பொன்னார் கடந்த தேர்தலில் தோற்றதால் வருத்தப்பட்ட பா.ஜ.க-வினர் சுமார் இரண்டு ஆண்டுகளில் அமைப்பை பலப்படுத்தியிருக்கிறார்கள். நாளை அமித் ஷா குமரி வரும் நிலையில், மாவட்டத்தில் தொண்டர்கள் எழுச்சி மேலும் அதிகரித்திருக்கிறது.

என்றாலும், பொன் ராதாகிருஷ்ணனை எதிர்த்துப் போட்டியிடப்போவது தி.மு.க - காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் என்றால், கன்னியாகுமரி நாடாளுமன்ற இடைத்தேர்தலில் போட்டி மிகக் கடுமையாக இருக்கும் என்பது மட்டும் உண்மை.

கட்டுரை, படங்கள், தொகுதி பிரச்னை குறித்த வீடியோக்களை அனுப்ப க்ளிக் செய்க.... https://bit.ly/39BnZAJ

கன்னியாகுமரி பா.ஜ.க வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன்... ப்ளஸ், மைனஸ் ரிப்போர்ட்!

தமிழகத் தேர்தல் களம் அனல் தகிக்கத் தொடங்கிவிட்டது. தமிழகமெங்கும் சுழன்று செய்திகளை வழங்கிக்கொண்டிருக்கிறது விகடனின் நிருபர் படை. இந்தப் பணியில் நீங்களும் இணையத் தயாரா?

நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் இதுதான்;

தேர்தல் தொடர்பான உங்கள் ஏரியா சுவாரஸ்யங்களோ, கள நிலவரங்களோ... அரசியல் கட்சி மீதான விமர்சனங்களோ அல்லது பார்வைகளோ... தொகுதிப் பிரச்னை, தலைவர்கள் பற்றிய நினைவுகள், தேர்தல் குறித்த நாஸ்டால்ஜியா நினைவுகள் ஆகியவையோ... எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். கட்டுரை, படங்கள், வீடியோ என எதிலும் கலக்கலாம். அனுப்ப வேண்டிய லிங்க்: https://bit.ly/39BnZAJ

உங்கள் பங்களிப்புகளுக்கு இங்கே களம் அமைத்துத் தருகிறது விகடன்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://ugc.vikatan.com/election/createarticle

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு