Published:Updated:

குமரி:`நயினார் நாகேந்திரன் கூறியதில் எந்தத் தவறும் இல்லை’ - இடைத்தேர்தல் குறித்து பொன்.ராதாகிருஷ்ணன்

நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசிய பொன்.ராதாகிருஷ்ணன்
நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசிய பொன்.ராதாகிருஷ்ணன்

`வசந்தகுமாரின் மகன் தேர்தலில் போட்டியிடுவதும், அவருக்கு அனுதாப அலை இருக்கிறது எனக் கூறுவதும் தவறு. அனுதாபம் என்பது ஏழு நாள்களுடன் முடிந்துவிடும்’ என்கிறார் பொன்.ராதாகிருஷ்ணன்.

கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதி எம்.பி-யாக இருந்த வசந்தகுமார் கடந்த மாதம் 28-ம் தேதி மரணமடைந்ததைத் தொடர்ந்து அந்தத் தொகுதி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அங்கே நவம்பர் மாதம் இடைத்தேர்தல் நடக்க வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்த் களம் இறங்க வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.

பா.ஜ.க சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மீண்டும் இந்தத் தொகுதியில் களமிறங்க வாய்ப்பிருக்கிறது. எனவே, குமரியில் இப்போதே தேர்தல்களம் சூடுபிடிக்க தொடங்கியிருக்கிறது. இந்த நிலையில் மாற்றுக் கட்சியினர் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் பா.ஜ.க-வில் இணையும் நிகழ்ச்சி நாகர்கோவிலில் இன்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில் மாவட்டத் தலைவர் தர்மராஜ் உளிட்டோர் கலந்துகொண்டனர்.

பொன்.ராதாகிருஷ்ணன்
பொன்.ராதாகிருஷ்ணன்

இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ``தமிழகத்தில் வரும் 2021 சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க அங்கம்வகிக்கும் கூட்டணிதான் வெற்றி பெறும். நாங்கள் அங்கம்வகிக்கும் ஆட்சி அமையும். எங்கள் தலைமையில் கூட்டணி அமையும் என்று இதுவரை நான் கூறவில்லை. கன்னியாகுமரி நாடாளுமன்ற இடைத்தேர்தல் சட்டமன்றத் தேர்தலுடனும் வரலாம் அல்லது ஆறு மாதங்களுக்கு உள்ளாகவும் தேர்தல் வரலாம். நவம்பர் மாதம் பீகாரில் நடக்கும் தேர்தலுடன்கூட நடக்கலாம். இது பற்றித் தேர்தல் ஆணையம்தான் முடிவு செய்யும். 2014-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை கன்னியாகுமரி மாவட்டத்துக்கு எத்தனை திட்டங்கள் கொண்டுவரப்பட்டன... எத்தனை திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன... எத்தனை திட்டங்கள் நிறைவேறாமல் பாதியில் இருக்கின்றன என்பது மக்களுக்குத் தெரியும்.

2019-க்கு முன்னர் திட்டங்கள் எப்படி இருந்தனவோ அப்படியே இப்போதும் இருக்கின்றன. இதை மாவட்டம் முழுவதும் கண்கூடாகப் பார்க்கிறோம். கன்னியாகுமரி மாவட்டத்தின் வளர்ச்சி மிகவும் முக்கியம். 2014-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை நடந்த வளர்ச்சிப் பணிகளையும், கடந்த ஒன்றரை வருடங்கள் நடந்த செயல்பாடுகளையும் மக்கள் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். வசந்தகுமாரின் மகன் தேர்தலில் போட்டியிடுவதும், அவருக்கு அனுதாப அலை இருக்கிறது என்று கூறுவதும் தவறு. அனுதாபம் என்பது ஏழு நாள்களுடன் முடிந்துவிடும்.

பொன்.ராதா கிருஷ்ணன்
பொன்.ராதா கிருஷ்ணன்

கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியில் வாய்ப்பு கிடைத்தால் போட்டியிடுவதாக நயினார் நாகேந்திரன் கூறியதில் எந்தத் தவறும் இல்லை. நான் போட்டியிடுவது பற்றி கட்சி முடிவு செய்யும். இனி வரும் மூன்றரை வருட காலத்தில் எந்தத் திட்டங்களை நிறைவேற்ற முடியும் எனப் பார்த்து அத்தனை திட்டங்களும் விரைவுபடுத்தப்படும். வர்த்தகத் துறைமுகம் மக்கள் விரும்பினால் கண்டிப்பாக வரும். கொரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு முடிந்த அளவு கவனம் செலுத்திவருகிறது. பொது மக்களின் தேவைகளை அறிந்து பஸ் போக்குவரத்தை அரசு செயல்படுத்தியிருக்கிறது. அனைத்து விஷயங்களிலும் தமிழக அரசு முழு கவனம் செலுத்த வேண்டும். மக்களும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு