Published:Updated:

`காசி, சபரிமலை ஒரு மாநிலத்துக்குச் சொந்தமானது அல்ல... நாட்டுக்குச் சொந்தமானது!' - பொன்.ராதாகிருஷ்ணன்

முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்
News
முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்

`காசிக்கும் நமக்கும் நீண்டகாலத் தொடர்பு உண்டு. ஆலயத்தின் இடையூறுகள் அகற்றப்பட்டு இன்று எங்கிருந்து பார்த்தாலும் கோயில் தெரியும் அளவுக்கு உள்ளது. இந்தப் பணிகள் எந்தவிதப் பிரச்னையும் இல்லாமல் பிரதமரால் செய்யப்பட்டிருக்கின்றன' என்றார் பொன்.ராதாகிருஷ்ணன்.

பா.ஜ.க தேசிய செயற்குழு உறுப்பினரும், முன்னாள் மத்திய அமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணன் நாகர்கோவிலில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், ``இந்திய திருநாட்டின் பழம்பெருமையை உலக நாடுகள் அனைத்தும் போற்றுகின்றன. அதற்கு மூலகாரணமாக இருப்பது ஆதிகாலம் முதல் இருக்கிற பண்டைய கலாசாரமும், பழக்கவழக்கங்களும்தான். இதற்குச் சாட்சியாக இன்றும் நம் கண்முன் அமைந்திருக்கிறது உத்தரப்பிரதேசத்தின் காசி மாநகரம். தமிழகத்தின் மதுரை, காஞ்சி, தஞ்சை, கும்பகோணம், ராமேஸ்வரம், கன்னியாகுமரி ஆகியவை பழைமையும் பெருமையும் மிக்கதாக இருக்கின்றன. அவைபோல காசி மாநகரம் வணங்கக்கூடிய நகரமாக காசி விஸ்வநாதர் ஆலயம் திகழ்கிறது. காசி நகரம் புராண காலத்திலிருந்து பேசப்படக்கூடிய நகரம். ராமாயணம், மகாபாரதம் என வேதங்கள் அனைத்திலும் போற்றுதலுக்குரிய நகரமாக காசி மாநகரம் இருந்திருக்கிறது. 1850-ம் ஆண்டு, ஜெய்ப்பூர் மன்னர் புதிய ஆலயம் கட்ட முயன்றார். 1880-ம் ஆண்டு தற்போதைய காசி ஆலயத்தை அன்றைய இந்து மகாராணி அகல்யாபாய் கட்டினார். காசி ஒரு மாநிலத்துக்குச் சொந்தமானது அல்ல. உலக மக்களுக்குச் சொந்தமானது. காசிக்கும் தமிழகத்துக்கும் தொடர்பு உள்ளது. 1813 முதல் காசி ஆலயத்தின் மூன்றுகால பூஜையையும் நம் மாநில நகரத்தார் சமுதாயத்தினர் நடத்திக்கொண்டிருக்கிறனர்.

2018-ல் கும்பாபிஷேகம் செய்த பெருமையும் தமிழ்ச் சமுதாயத்துக்கு கிடைத்துள்ளது. 1898-ம் வருடத்தில் தன் தகப்பனார் காலமான பிறகு பாரதி, காசியில் வசித்துக்கொண்டிருந்த அத்தை குப்பம்மாளிடம் 1902-ம் ஆண்டு வரை படித்தார். காசிக்கும் நமக்கும் நீண்டகாலத் தொடர்பு உள்ளது. ஆலயத்தின் இடையூறுகள் அகற்றப்பட்டு இன்று எங்கிருந்து பார்த்தாலும் கோயில் தெரியும் அளவுக்கு உள்ளது. இந்தப் பணிகள் எந்தவிதப் பிரச்னையும் இல்லாமல் பிரதமரால் செய்யப்பட்டுள்ளன. பணிகள் முடிக்கப்பட்டு ஆலயத்தை, பிரதமர் நரேந்திர மோடி வரும் 13-ம் தேதி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். இதைச் சாதாரண நிகழ்வாக நாம் எடுத்துக்கொள்ளக் கூடாது. இது ஒரு குறிப்பிட்ட மதத்துக்கோ, மாநிலத்துக்கோ, குறிப்பிட்ட கட்சிக்கோ சொந்தமானது அல்ல. நம் நாட்டு மக்களின் ஒட்டுமொத்த உணர்வுக்கும் தீர்வுகண்டதாக நினைக்கிறோம்.

நாகர்கோவிலில் பேட்டி அளித்த பொன்.ராதாகிருஷ்ணன்
நாகர்கோவிலில் பேட்டி அளித்த பொன்.ராதாகிருஷ்ணன்

பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிக்கும்போது எல்லா மாவட்டங்களிலும் இந்த நிகழ்ச்சி நேரடி ஒளிபரப்பாக வேண்டும். 12 ஜோதிர்லிங்க தலங்களிலும் நேரடியாக ஒளிபரப்ப வேண்டும். 51,000-க்கும் மேற்பட்ட ஆலயங்கள், மடங்கள், மத வழிபாட்டுத் தலங்களிலும் இந்த நிகழ்ச்சி நேரடியாக ஒளிபரப்பப்பட வேண்டும். அதற்காக பா.ஜ.க நிர்வாகிகள், மக்கள் பிரதிநிதிகள் சேர்ந்து ஒருங்கிணைப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

காசி ஆனந்த நகரம், ஒளி நிறைந்த நகரம் எனவும் கருதப்படுகிறது. எனவே, அந்த நகரத்தை ஒளி மிகுந்ததாக ஆக்க ஒளி விளக்குகள் ஏற்றுவதுடன் கங்கையிலிருக்கும் அனைத்துப் படகுகளிலும் ஒளி ஏற்ற நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகம் முழுவதும் இருக்கும் எல்லா வீடுகளிலும் ஒளி ஏற்றி வழிபாடு நடத்தும்போது காசிக்கே சென்று வணங்கிய பாக்கியம் கிடைக்கும். காசியில் வரும் 14-ம் தேதி மிகப்பெரிய கருத்தரங்கம் நடக்கிறது. அதில் நாடு முழுவதும் உள்ள முதல்வர்கள், துணை முதல்வர்கள், அமைச்சர்கள் கலந்துகொள்கிறார்கள். பா.ஜ.க தலைவர் ஜே.பி.நட்டா கலந்துகொள்கிறார். 13, 14, 15 என மூன்று நாள்கள் நடக்கும் கலாசார நிகழ்ச்சிகளில் அனைத்து அமைச்சர்களும் கலந்துகொள்கிறார்கள். டிசம்பர் 17-ம் தேதி நாடு முழுவதுமுள்ள மேயர்களுக்கான மாநாடு நடக்கிறது. டிசம்பர் 13-ம் தேதி அதி முக்கியத்துவம் வாய்ந்த நாளாக நாடுமுழுவதும் இருக்கும். இயற்கை விவசாயம் சார்ந்த விஷயங்கள் குறித்த மாநாடு காசியில் நடைபெறுகிறது. அதில் பிரதமர் மோடி கலந்துகொள்கிறார். காசி விஸ்வநாதர் ஆலயம் எழுப்பப்பட்டபோது எந்த மாதிரியான எழுச்சி, உத்வேகம் உலக மக்களுக்கு ஏற்பட்டதோ, அதே உணர்வு டிசம்பர் 13-ம் தேதி ஏற்படும். 2021, டிசம்பர் 13-ம் தேதி இந்திய சரித்திரத்தில் பொன் எழுத்துகளால் எழுதப்பட வேண்டும்.

பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர் சந்திப்பு
பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர் சந்திப்பு

குமரிக்கண்டம் நம் மண்சார்ந்த விஷயம். குமரிக்கண்டம் இந்தியாவின் ஒட்டுமொத்தப் பகுதிகளும் சார்ந்த ஒன்று. இங்கிருக்கக்கூடிய பழம் பெருமைகளை நமக்கு மட்டுமே சொந்தம் எனப் பூட்டிவைக்கக் கூடாது, அது பாரதநாட்டுக்குச் சொந்தம்.

நாகாலாந்து பிரச்னை ரொம்ப துரதிர்ஷ்டவசமானது. சில சமயங்களில் எதிரிகள் நம் நாட்டைச் சேர்ந்தவர்களைப் போன்றே வருவார்கள். அந்தச் சம்பவம் சம்பந்தமாக உள்துறை விசாரித்து நடவடிக்கை எடுக்கும். எந்த வகையிலும் மதத்தை அரசியலுக்கு பயன்படுத்தக் கூடாது. கொரோனா, ஒமைக்ரான் போன்ற காரணங்களைச் சொல்லி சபரிமலையில் எதையும் முடக்கக் கூடாது. சபரிமலையில் நெய்யபிஷேகம் போன்ற விஷயங்களைக் கொண்டுவர வேண்டும். சபரிமலை கேரளத்துக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த நாட்டுக்கும் சொந்தமானது" என்றார்.