Published:Updated:

`அ.தி.மு.க தலைமையின் கீழ், எங்கள் கூட்டணி!’ - பொன்.ராதாகிருஷ்ணன்

செய்தியாளர் சந்திப்பில் பொன்.ராதாகிருஷ்ணன்
செய்தியாளர் சந்திப்பில் பொன்.ராதாகிருஷ்ணன்

`தி.மு.க வரும் தேர்தலில் இன்னிக்கு இருக்கும் பலத்தில், மூன்றில் ஒரு பங்கு பெற்றால் அது அவர்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கும்“ என்றார் பொன்.ராதாகிருஷ்ணன்.

``வரும் சட்டசபைத் தேர்தலில் தி.மு.க-வுடன்கூட கூட்டணி அமையலாம்’’ என முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் அளித்த பேட்டி சமீபத்தில் கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியது. இதற்கு அ.தி.மு.க-வின் அமைச்சர்கள் உட்பட சிலர் பதிலடி கொடுத்தனர். இந்தநிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை பா.ஜ.க மாநிலத் தலைவர் முருகன் சந்தித்துப் பேசினார். இதையடுத்து அந்த சர்ச்சை முடிவுக்கு வந்தது.

இந்தநிலையில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அவரது பேச்சில் அ.தி.மு.க தலைமையில் தங்கள் கூட்டணி இருப்பதை ஆணித்தரமாகத் தெரிவித்தார். பேட்டியின்போது பொன்.ராதாகிருஷ்ணன் கூறுகையில், ``தமிழக முதல்வர் என்ற முறையிலும், எங்கள் கூட்டணிக் கட்சியைச் சேர்ந்தவர் என்பதாலும் கன்னியாகுமரி மாவட்டத்துக்கு ஆய்வுக்கு வரும் எடப்பாடி பழனிசாமியை சந்திக்கவிருக்கிறோம். அ.தி.மு.க கூட்டணியில் எந்தப் பிரச்னையும் இல்லை. ஒவ்வொருத்தருக்கும் ஓர் இலக்கு, லட்சியம் இருக்கும். இன்னிக்கு என்ன தேவையோ, அதன்படி முடிவு எடுக்கப்படும்.

பொன்.ராதாகிருஷ்ணன்
பொன்.ராதாகிருஷ்ணன்

தமிழகத்தில் கூட்டணி பற்றி அகில இந்திய தலைமைதான் முடிவு எடுக்கும். நான் மாநிலத் தலைவராக இருந்தபோது ஒரு கூட்டணியை உருவாக்கினேன். அப்போது, அகில இந்திய தலைமையோடு நான் எப்படியெல்லாம் அனுமதி பெற்றேன் என்பது எனக்குத் தெரியும். தமிழக முதல்வரை நான் என்ன விஷயத்துக்கு சந்திக்கப் போகிறேனோ, அதே விஷயத்துக்காகத்தான் மாநிலத் தலைவரும் சந்திக்கச் சென்றிருக்கிறார். பா.ஜ.க ஓர் அகில இந்தியக் கட்சி. அதை குறுகிய வட்டத்துக்குள் அடைக்காதீர்கள் என்கிறோம். இது அகில இந்தியக் கட்சி, குறுகிய வட்டத்திலிருந்து நாங்கள் முடிவெடுக்க முடியாது.

அ.தி.மு.க-வில் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியைத் தேர்வு செய்தது சுமுக முடிவு. அவர்கள் பிளவுபட வேண்டும் எனச் சிலர் நினைத்தார்கள். ஆடுகள் மோதும்போது ரத்தம் சிந்தினால் குடிக்கலாம் எனச் சிலர் காத்திருந்தார்கள். அது நடக்கவில்லை. தி.மு.க வரும் தேர்தலில் இன்னிக்கு இருக்கும் பலத்தில் மூன்றில் ஒரு பங்கு பெற்றால், அது அவர்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கும். அ.தி.மு.க தலைமையின் கீழ் எங்கள் கூட்டணி இருக்கிறது. தமிழகத்தில் எங்கள் தலைமையில் கூட்டணி இல்லை.

செய்தியாளர் சந்திப்பில் பொன்.ராதாகிருஷ்ணன்
செய்தியாளர் சந்திப்பில் பொன்.ராதாகிருஷ்ணன்

2021-ஆண்டு அரசில் அங்கம்வகிக்கும் கட்சியாக பா.ஜ.க இருக்கும் என எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. எல்லாக் கட்சிகளும் ஆட்சியைப் பிடிக்கும் நம்பிக்கையில்தான் கட்சியை வழிநடத்த முடியும். நான் பா.ஜ.க மாநிலத் தலைவராக இருந்தபோது 2014 மத்தியில் ஆட்சி, 2016- மாநிலத்தில் ஆட்சி என்று தாமரை மாநாட்டில் தீர்மானித்தோம். இப்போது மோடி அரசு, காங்கிரஸ் ஆட்சியின் தவறுகளைச் சரி செய்துகொண்டிருக்கிறது. தமிழகத்தில் பா.ஜ.க தலைமையில் கூட்டணியைக் காலமும், அகில இந்தியத் தலைமையும்தான் முடிவு செய்யும்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு