Published:Updated:

பரந்தூர் விமான நிலையம்: "உண்மையை அமைச்சர் தெளிவுபடுத்த வேண்டும்"- பூவுலகின் நண்பர்கள் அமைப்பு

பரந்தூர் விமான நிலையம்

``பரந்தூர் விமான நிலையம் குறித்து அரசு வெளிப்படைத்தன்மையோடு செயல்படுமெனில், முதலில் அந்த pre-feasibility அறிக்கையை வெளியிடட்டும்.'' - பூவுலகின் நண்பர்கள்

பரந்தூர் விமான நிலையம்: "உண்மையை அமைச்சர் தெளிவுபடுத்த வேண்டும்"- பூவுலகின் நண்பர்கள் அமைப்பு

``பரந்தூர் விமான நிலையம் குறித்து அரசு வெளிப்படைத்தன்மையோடு செயல்படுமெனில், முதலில் அந்த pre-feasibility அறிக்கையை வெளியிடட்டும்.'' - பூவுலகின் நண்பர்கள்

Published:Updated:
பரந்தூர் விமான நிலையம்

சென்னையின் இரண்டாவது விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூரில் அமையவிருக்கிறது என அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியான நாள் முதல் அதற்கான எதிர்ப்புகளும் வந்த வண்ணம் இருக்கின்றன. இந்தத் திட்டத்தால் பரந்தூர் உட்பட அதனைச் சுற்றியிருக்கும் கிராம மக்களின் வாழ்வாதாரம் முற்றுலுமாக பாதிக்கப்படும் என கிராம மக்களுடன், அரசு சாரா நிறுவனங்களும் திட்டத்தைக் கைவிடக் கோரி குரலெழுப்பிவருகின்றன. ஆனால், ஒருபக்கம் திட்டத்தின் பணிகள் அடுத்தடுத்து நடைபெற்றுவருவதாகக் கூறப்படுகிறது.

பரந்தூர் புதிய விமான நிலைய திட்டம்
பரந்தூர் புதிய விமான நிலைய திட்டம்

அண்மையில் அமைச்சர் தங்கம் தென்னரசு ஒரு நிகழ்ச்சியில் , ``எல்லா இடங்களிலும் ஏரிகளும், விளைநிலங்களும் இருக்கின்றன. அதனால்தான் விளைநிலங்களை வாங்கவேண்டிய சூழல் உள்ளது. சென்னையைச் சுற்றியுள்ள 11 இடங்களில் இந்திய வானூர்தி நிலையங்களின் ஆணையம், புதிய விமான நிலையம் அமைக்க ஆய்வு மேற்கொண்டது. அதிலிருந்துதான் விமான நிலையம் அமைப்பதற்கு பரந்தூர் தேர்ந்தெடுக்கப்பட்டது" எனக் கூறியிருந்தார். இந்த நிலையில் அமைச்சர் பேசியது தொடர்பாக, பூவுலகின் நண்பர்கள் குழு தற்போது கேள்வியெழுப்பி அறிக்கை வெளியிட்டிருக்கிறது.

பரந்தூர் விமான நிலைய திட்டம்
பரந்தூர் விமான நிலைய திட்டம்

அதில், ``இரண்டு தினங்களுக்கு முன்னர் பரந்தூர் விமான நிலையம் தொடர்பாக பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, இந்தத் திட்டத்துக்கான சாத்தியக்கூறு அறிக்கையை டிட்கோ தயாரிக்கும் எனத் தெரிவித்திருந்தார். இன்று வெளிவந்திருக்கும் அறிக்கையில், விமான நிலையம் அமைவதற்கான இடத்தை இந்திய அரசின் விமானப் போக்குவரத்து அமைச்சகம் உறுதிசெய்திருப்தாகத் தெரிவித்திருக்கிறது. இதில் எது உண்மை என்பதை அமைச்சர் தெளிவுபடுத்த வேண்டும். போராடும் மக்களைச் சந்திக்கும் அமைச்சர்கள், `உங்களின் கோரிக்கையை பரிசீலிப்போம்’ என்கிறார்கள், அடுத்த சில தினங்களில் `டிட்கோ இந்தத் திட்டத்துக்கான சாத்தியக்கூறு அறிக்கையை தயாரிக்கும்’ என்கிறார் அமைச்சர். அடுத்த இரண்டு தினங்களில் இந்திய விமான அமைச்சகம் இந்த இடத்தை உறுதிசெய்துவிட்டது என்று `யாருடைய பெயரும்’ போடாத அறிக்கை வெளியாகிறது, ஏன் இந்தத் தடுமாற்றம்?

பூவுலகின் நண்பர்கள்
பூவுலகின் நண்பர்கள்

டிட்கோவின் சாத்தியக்கூறு அறிக்கை வெளிவருவதற்கு முன்பாகவே இந்த இடம் சரியானது என முடிவுக்கு வந்துவிட முடியுமா... அப்படியெனில், எது உண்மை... சாதாரண ஏழை விளிம்புநிலை மக்கள் நீர்நிலைகளில் வாழ்ந்தாலே ஆக்கிரமிப்பு என்று அகற்றும் அரசு, 1,000-க்கும் மேற்பட்ட ஏக்கரிலுள்ள 13 நீர்நிலைகளை அழிப்பது சரியாகுமா... நீர்நிலைகளைப் பாதுகாப்போம் என்றால் அந்த 1,000 ஏக்கர் நிலம் இல்லாமல் விமான நிலையத்தை அமைக்க முடியுமா... இதுவரை ``Pre-feasibility report”-ஐ கூட பொதுவெளியில் வைப்பதற்கு ஏன் தடுமாறுகிறது தமிழக அரசு... உண்மையை மறைக்காமல், வெளிப்படைத்தன்மை இல்லாமல் மக்களின் மனதை வென்றுவிடலாம் என்று நினைப்பது தவறாகத்தான் போய் முடியும். இப்போதுள்ள விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய அருகில் ``ஒரு ராணுவப் பயிற்சி பள்ளி” இருப்பதைத் தடையாகக் கருதும் அரசு, 3,000 ஏக்கர் விளைநிலங்கள், 1,000 ஏக்கர் நீர்நிலைகளைப் பற்றிக் கவலைப்படாமல் இருப்பது ஆச்சர்யமாகவிருக்கிறது.

பரந்தூர் விமான நிலையம் வளர்ச்சியா... வீழ்ச்சியா?
பரந்தூர் விமான நிலையம் வளர்ச்சியா... வீழ்ச்சியா?

பரந்தூர் விமான நிலையம் தொடர்பாக இதுவரை பொதுவெளியில் வைக்கப்பட்ட எந்தக் கேள்விக்கும் விடையளிக்காமல், ஏகானாபுரம் உள்ளிட்ட மூன்று கிராமங்கள் இந்திய வருவாய் வரைபடத்திலிருந்து தூக்கி எறியப்படும் என்று தெரிந்தும், 100 நாள்களைக் கடந்தும் அந்த மக்கள் நடத்தும் போராட்டங்களை, உணர்வுகளை மதிக்காமல் செயல்படுவதுதான் ஜனநாயகமா... பரந்தூர் விமான நிலையம் குறித்து அரசு வெளிப்படைத்தன்மையோடு செயல்படுமெனில், முதலில் அந்த pre-feasibility அறிக்கையை வெளியிடட்டும். அடுத்து, டிட்கோ அறிக்கையை வெளியிடட்டும். வெறும் அறிக்கைகள் உதவாது என்பதைத் தமிழக அரசு புரிந்துகொள்ள வேண்டும்" என்று கூறப்பட்டிருக்கிறது.