அலசல்
அரசியல்
Published:Updated:

உஜ்வாலா திட்டம் தோல்வி ஏன்?

உஜ்வாலா திட்டம்
பிரீமியம் ஸ்டோரி
News
உஜ்வாலா திட்டம்

பா.ஜ.க அரசு பிரதம மந்திரி `உஜ்வாலா யோஜனா’ (PMUY) என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தினார்

இரண்டு மாதங்களுக்கு முன்பு, உஜ்வாலா திட்டத்தின்கீழ் எட்டு கோடி எரிவாயு இணைப்புகளைப் பயனாளிகளுக்கு அளித்து, திட்டம் மாபெரும் வெற்றிபெற்றதாக அறிவித்தார் பிரதமர் மோடி. வழக்கம்போல் வடநாட்டு ஊடகங்களும் ‘இதோ பாரீர்...இந்தத் திட்டம் வெற்றிபெற்றுவிட்டது!’ எனக் கொண்டாடித் தீர்த்தன. இதுபோதாதென காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர்கள் சிலரே, `இந்தத் திட்டம் கொண்டுவந்ததால் மோடி சிறப்பாகச் செயல்படுகிறார்’ எனக் குறிப்பிட்டனர். ஆனால், திட்டத்தின் உண்மையான நிலை என்ன?

உஜ்வாலா திட்டம் தோல்வி ஏன்?

2011-ம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பு, இந்தியாவில் சுமார் 65 சதவிகித வீடுகளில் திட எரிபொருள் பயன்பாட்டில் இருப்பதாகத் தெரிவிக்கிறது. இதனால் ஏற்படும் மாசால் சுமார் ஐந்து லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாகவும், விறகைப் பயன்படுத்தி அடுப்பு எரிப்பதன்மூலம் சுமார் 400 சிகரெட் பிடிப்பதற்குச் சமமான நச்சுப்புகையை ஒரு மணி நேரத்தில் சுவாசிப்பதாகவும் ஆய்வுகள் தெரிவித்தன. இதை கவனத்தில்கொண்ட பா.ஜ.க அரசு பிரதம மந்திரி `உஜ்வாலா யோஜனா’ (PMUY) என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இந்தத் திட்டம் இந்தியாவில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் காஸ் சிலிண்டர் கொண்டுசேர்க்கும் என்றும், முதற்கட்டமாக ஐந்து கோடி குடும்பங்களுக்கு இது வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. 2016, ஏப்ரல் 1-ம் தேதி பிரதமர் மோடி இதைத் தொடங்கிவைத்தார்.

இந்தத் திட்டம் ஆலோசனை அளவில் இருந்த போதே, 2015 அக்டோபரில் இந்தத் திட்டம் குறித்த ஆய்வுகளை மேற்கொள்ள ‘கிரிசில்’ (CRISIL) நிறுவனத்தை மத்திய அரசு பணித்தது. ஆனால், ஆய்வு அறிக்கை வருவதற்கு முன்பே, அவசர அவசரமாக திட்டம் தொடங்கப்பட்டது. திட்டம் தொடங்கி ஒரு மாதம் கழித்து வெளிவந்த ஆய்வறிக்கை, இந்தத் திட்டத்தில் உள்ள பல போதாமைகளை எடுத்துவைத்தது.

உஜ்வாலா திட்டம் தோல்வி ஏன்?

இந்தத் திட்டத்தின்கீழ், காஸ் இணைப்பு இல்லாத வீடுகளுக்கு இணைப்பு வழங்கப்படும். காஸ் அடுப்பு, ஒரு சிலிண்டர் இணைப்பு, காஸ் டியூப் எல்லாமும் சேர்த்த ஓர் இணைப்பின் விலை 4,300 ரூபாய். கோடிக்கணக்கான இணைப்புகள் என்பதால், 3,600 ரூபாய்க்கு ஓர் இணைப்பு வழங்க எண்ணெய் நிறுவனங்கள் ஒப்புக் கொண்டுள்ளன. காஸ் இணைப்பு இல்லாத குடும்பங்களுக்கு இந்தத் திட்டத்தின்கீழ் காஸ் இணைப்பு வழங்கப்படும். இதில், இணைப்புக்குக் கட்டவேண்டிய வைப்புத் தொகை மற்றும் நிர்மாணிக்கும் செலவுகள் என மொத்தமாக ஓர் இணைப்புக்கு 1,600 ரூபாயை மத்திய அரசு மானியமாக வழங்கும். மீதம் உள்ள 2,000 ரூபாயை பயனாளர் கட்டவேண்டும். ஒருவேளை அவர்களால் மீதித்தொகையைக் கட்ட இயலாவிட்டால், அதை நிறுவனங்கள் கடனாக வழங்கும். அந்தப் பணத்தை, பயனாளர்கள் மாதத் தவணையாகத் திருப்பிக் கட்ட வேண்டும்.

திட்டம் தொடங்கப்பட்ட உடனேயே பிரச்னைகளும் தொடங்கின. குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் இணைப்புகளை வழங்க முடிந்த அரசால், மக்களை அந்த காஸைப் பயன்படுத்தி சமையல் செய்யவைக்க முடியவில்லை. இந்தத் திட்டம் தோல்வி யடைவதற்கு பண்பாடு சார்ந்த காரணங்கள் இருந்தாலும், பொருளாதார காரணமே முதன்மையானது. இந்தத் திட்டத்தின்கீழ் அடுப்புக்கும் முதல்முறையாக சிலிண்டர் மாற்றுவதற்கும் தேவைப்படும் பணத்தை மாதத்தவணையாகக் கட்டலாம். ஆனால், அதன் பிறகு அவர்கள் வாங்கக்கூடிய சிலிண்டர்களுக்கு அந்த மக்கள்தான் பணம் கட்டவேண்டும். இங்குதான் பிரச்னையே.

இந்தத் திட்டம் ஆரம்பிக்கப்பட்ட பிறகு, காஸ் இணைப்பு வாங்குவது சுமார் 17 சதவிகிதம் அதிகரித்துள்ளது. ஆனால், சிலிண்டர்களின் பயன்பாடு வெறும் 9.83 சதவிகிதம் மட்டுமே அதிகரித்துள்ளது. இந்த சிலிண்டர் பயன்பாட்டு அளவு, திட்டம் செயல்படுத்தப்படாமல் இருந்த 2014-15ம் ஆண்டைவிட குறைவானது என்கிறது பெட்ரோலிய திட்டமிடல் மற்றும் ஆய்வக நிறுவனம். இந்தத் திட்டத்தில் இணைபவர்கள், முதல்முறைக்குப் பிறகு புதிய சிலிண்டர்களை வாங்குவ தில்லை என்பதை, இணைப்பு களின் எண்ணிக்கைக்கும் சிலிண்டர்களின் விற்பனைக் கும் இடையே உள்ள இடைவெளி தெளிவாக எடுத்துவைக்கிறது,

சி.ஏ.ஜி அறிக்கையின்படி 2015-16ம் ஆண்டுகளில் இணைப்பு வைத்திருக்கக் கூடிய வீடுகளில் சிலிண்டர் களின் பயன்பாடு ஆண்டுக்கு சராசரியாக 6.27 ஆக இருந்தது. ஆனால், உஜ்வாலா திட்டம் நிறைவேற்றப்பட்ட பிறகு அந்தச் சராசரி 5.6 ஆக குறைந்துள்ளது. இந்தத் திட்டம் அதன் குறிக்கோளை எட்ட முடியாது என்பதை, அரசு நியமித்த ‘கிரிசில்’ குழு ஒரே மாதத்தில் திட்டவட்டமாகத் தெரிவித்தது.

திட்டம் துவங்குவதற்கு முன்பாக, 2015, அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரையிலான காலகட்டத்தில், 120 மாவட்டங்களில் சுமார் ஒரு லட்சம் பேரை ஆய்வுக்காக கிரிசில் குழு சந்தித்திருந்தது. காஸ் இணைப்புகளை மக்கள் ஏன் தவிர்க்கிறார்கள் எனக் கணக்கெடுத்தது. குறிப்பாக, விறகு போன்ற திட எரிபொருளை மக்கள் ஏன் பயன்படுத்துகிறார்கள் என்ற கேள்வியை முன்வைத்தது. அதற்கு 86 சதவிகிதம் பேர் காஸ் இணைப்புக்கான விலை மிக அதிகமாக இருப்பதாகத் தெரிவித்தார்கள். 83 சதவிகிதம் பேர் சிலிண்டரின் விலை மிக அதிகமாக இருப்பதாகத் தெரிவித்தனர். அவர்கள் சொன்ன மற்றொரு காரணம், பதிவுசெய்தால் சிலிண்டர் வருவதற்கு அதிக காலம் ஆகிறது. அதாவது, கிராமப்புறங்களில் சிலிண்டர் வருவதற்கு குறைந்தது 15-40 நாள்கள் ஆகின்றன என்றார்கள்.

உஜ்வாலா திட்டம்
உஜ்வாலா திட்டம்

‘கிரிசில்’ குழுவின் அறிக்கையின்படி கிராமப்புறங்களில் உள்ள 37 சதவிகிதக் குடும்பங்களுக்கு சமையல் செய்வதற்கான எரிபொருள் இலவசமாகவே கிடைத்துவிடுகிறது. இந்த ஆய்வு நடைபெற்ற மாநிலங்களில் சுமார் 35 சதவிகித வீடுகளுக்கு விறகு இலவசமாகக் கிடைக்கிறது. 76 சதவிகித வீடுகளுக்கு வறட்டி கிடைக்கிறது. இன்னும் 88 சதவிகிதம் பேருக்கு பிற உயிரி எரிபொருள் கிடைத்துவிடுகிறது. ஆனால், அரசு அளிக்கும் மானியத்தைக் கழித்த பிறகும்கூட எரிவாயு சிலிண்டர்களின் விலை 500 ரூபாய் முதல் 800 ரூபாய் வரை ஆகிறது. எனவே, ஏற்கெனவே விலை கொடுத்து எரிபொருள் வாங்குவோர் மட்டுமே அதிக மானியமில்லாமல் காஸ் சிலிண்டர்களை வாங்குவார்கள் என்று அந்த அறிக்கை தெரிவித்தது. இந்த அறிக்கை கைகளுக்கு வருவதற்கு முன்னரே திட்டத்தை மத்திய அரசு துவக்கியதுதான் பிரச்னையே!

அதன் பின்னரும்கூட, சிலிண்டர்களை மறுபடியும் நிரப்ப ஆகும் தொகையில், அரசு மானியத்தை அதிகரித்து வழங்குவதற்குப் பதிலாக குறைத்திருக்கிறது அல்லது மானியத்தை எண்ணெய் நிறுவனங்களின் தலையில் கட்டிவிடுகிறது. இது, ஒருபோதும் இந்தத் திட்டத்தை வெற்றியடையச் செய்யாது. அதுவும் பயன்பாட்டாளர்கள் வங்கிக் கணக்குக்கு அனுப்பப்படும் தொகை கிராமத்தில் உள்ள ஆண்களின் கட்டுப்பாட்டில் உள்ளதால், பிரதானமாக அந்தப் பணம் ‘வேறு பயன்பாடுகளுக்கு’ச் சென்றுவிடுகிறது.

மத்திய அரசின் உஜ்வாலா திட்டம் தோல்வியடைய வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. ஆனால், இதற்கு பத்து ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்தில் நடைமுறைப் படுத்தப்பட்ட இதேபோன்ற ஒரு திட்டம் பெருமளவில் வெற்றி பெற்றுள்ளது. 2007-ம் ஆண்டு அன்றைய தமிழக முதல்வர் மு.கருணாநிதி இலவச எரிவாயுத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். அந்தத் திட்டத்தின்கீழ், காஸ் அடுப்பு இல்லாத வீடுகளுக்கு இலவசமாக காஸ் அடுப்பு வழங்கப்பட்டது. காஸ் இணைப்புக்குத் தேவைப்பட்ட வைப்புத் தொகை அரசால் செலுத்தப்பட்டது. இன்றைக்கு தமிழகத்தில் பெருமளவுக்கு கிராமப்புற வீடுகளில் காஸ் அடுப்பு பயன்படுத்தப்படுவதற்கு இந்தத் திட்டமே முக்கிய காரணம்.

அந்தக் காலகட்டத்தில் நேரடி மானிய விலையில் காஸ் சிலிண்டர் கிடைத்ததால், மக்களும் அதிக அளவில் வாங்கிப் பயன்படுத்தினர். ஆனால், இப்போது வங்கிக்கணக்கில் மானியம் செலுத்தப்படும் திட்டமும் பிரதமரின் உஜ்வாலா திட்டமும் நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகு, தமிழகத்திலும் சிலிண்டர்களின் பயன்பாடு குறைந்துவருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தமிழகம் பத்து ஆண்டுகளுக்கு முன்னர் நடைமுறைப்படுத்திய திட்டத்தை மத்திய அரசால் ஒழுங்காக நடைமுறைப்படுத்த முடியவில்லை என்பது மட்டுமல்ல... அதன் எதிர்மறை விளைவுகளும் தமிழகத்தில் எதிரொலிப்பதுதான் வேதனை.

உஜ்வாலா திட்டத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருக்கின்றன என்றும், வெறும் இணைப்புகள் கொடுப்பதாலேயே இந்தத் திட்டம் வெற்றிபெற்றுவிட்டதாகச் சொல்ல முடியாது என்றும் சில தினங்களுக்கு முன்னர் வெளிவந்த மத்திய தணிக்கைத் துறையின் (CAG) அறிக்கை தெரிவித்திருப்பது, இந்தத் திட்டம் தோல்வியடைந்துள்ளது என்பதை உறுதிப்படுத்துகிறது.