Published:Updated:

கடலில் கலைஞருக்கு நினைவுச்சின்னம்; அரசு திட்டத்தை மறுபரிசீலனை செய்யவேண்டும் - பூவுலகின் நண்பர்கள்

கருணாநிதி - பூவுலகின் நண்பர்கள்

``மதுரையில் அமைக்கப்பட்டு வரும் `கலைஞர் நினைவு நூலகம்' போன்று ஆக்கப்பூர்வமான செயல்பாடுகள் மூலம் கலைஞரின் நினைவைப் போற்றலாம்" - பூவுலகின் நண்பர்கள்

கடலில் கலைஞருக்கு நினைவுச்சின்னம்; அரசு திட்டத்தை மறுபரிசீலனை செய்யவேண்டும் - பூவுலகின் நண்பர்கள்

``மதுரையில் அமைக்கப்பட்டு வரும் `கலைஞர் நினைவு நூலகம்' போன்று ஆக்கப்பூர்வமான செயல்பாடுகள் மூலம் கலைஞரின் நினைவைப் போற்றலாம்" - பூவுலகின் நண்பர்கள்

Published:Updated:
கருணாநிதி - பூவுலகின் நண்பர்கள்

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு, கடலுக்கு நடுவே பேனா வடிவில் நினைவுச்சின்னம் எழுப்ப தமிழக அரசின் திட்டமிட்டுள்ளது. சுமார் ரூ.81 கோடி செலவில், கடலுக்கு நடுவில் 134 அடி உயரத்தில் பேனா வடிவில் கருணாநிதிக்கு நினைவுச்சின்னம் அமைப்பதற்கு அனுமதிகோரி சமர்ப்பித்திருந்த விண்ணப்பத்துக்கு தமிழ்நாடு கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது. மேலும் இந்த திட்டத்தில், மெரினாவில் உள்ள கருணாநிதியின் நினைவிடத்திலிருந்து நேராக, இந்த புதிய நினைவுச்சின்னத்துக்குச் செல்லும் வகையில் 650 மீட்டர் தொலைவுக்கு பாலம் கட்டப்படுவதாகவும் கூறப்பட்டிருக்கிறது.

தமிழ்நாடு அரசு
தமிழ்நாடு அரசு

அது மட்டுமல்லாமல், இந்த பேனா வடிவ நினைவுச் சின்னம் அமையவுள்ள பகுதி கடலோர ஒழுங்குமுறை மண்டல அறிக்கை 2011-ன் படி பகுதி IV(A) என வரையறுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழ்நாடு அரசு இந்த திட்டத்தைக் கைவிடுமாறு, பூவுலகின் நண்பர்கள் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக அந்த அமைப்பு, ``15.02.2015 கடலோர ஒழுங்குமுறை மண்டல அறிக்கை 2011-ல் ஒரு திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. அந்தத் திருத்தத்தின்படி CRZ IV(A) என வரையறுக்கப்பட்ட பகுதிகளில் விதிவிலக்கான நேரங்களில் (Exceptional cases) மட்டுமே நினைவிடங்கள்/நினைவுச் சின்னங்கள் அமைக்க அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. இந்த அனுமதியும்கூட பல்வேறு நிபந்தனைகளுடன் மட்டுமே வழங்கப்படும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நினைவிடம்
நினைவிடம்

இந்தத் திட்டத்துக்கு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆய்வு, சுற்றுச்சூழல் மேலாண்மைத் திட்டம், அபாய மதிப்பீடு ஆய்வு, பேரிடர் மேலாண்மைத் திட்டம் மற்றும் அவசரகால செயல்திட்டம் தயாரித்து தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் மூலம் பொது மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டத்தை நடத்திய பின்னரே அனுமதி பெற முடியும். CRZ IV(A) என வரையறுக்கப்பட்ட பகுதிகளில் விதிவிலக்கான நேரங்களில் (Exceptional cases) மட்டுமே நினைவிடங்கள்/ நினைவுச் சின்னங்கள் அமைக்க வேண்டும் என்று சட்டத்தில் கூறப்பட்டிருக்கிறது. ஆனால், கலைஞரின் நினைவாக அமைக்கப்படும் இந்த பேனா வடிவ சிலை Exceptional case இல்லை. ஏற்கெனவே நினைவிடம் அமைந்திருக்கும் வளாகத்துக்குள்ளாகவே பேனா வடிவ நினைவுச் சின்னம் அமைப்பதற்கு போதுமான இடமிருக்கின்ற நிலையில் கடலுக்குள் அமைப்பதை Exceptional case என்று கூற முடியாது.

மெரினா
மெரினா

மேலும், மெரினா கடற்கரை தொடர்ச்சியாக பல்வேறு மாறுதலுக்குட்பட்டு வருகிறது. குறிப்பாக காலநிலை மாற்றம் மற்றும் சென்னையை ஒட்டி கடலுக்குள் எழுப்பப்பட்ட துறைமுகங்கள் உள்ளிட்ட கட்டுமானங்களால் மெரினா கடற்கரையில் அதிகமாக மணல் சேர்ந்து (Accretion) வருகிறது. இந்தத் திட்டம் குறித்து மீனவ சங்கங்கள் எழுப்பியிருக்கும் சில விஷயங்களையும் அரசு தீவிர கருத்தில் கொள்ள வேண்டும். குறிப்பாக ஊரூர்குப்பம் மீன்பிடிப்போர் கூட்டுறவு சங்கமானது மாநில கடற்கரை மண்டல மேலாண்மை ஆணையத்திற்கு இந்தத் திட்டத்தை அரசு கைவிடக்கோரி கடிதம் எழுதியிருக்கிறது. இந்த சங்கம் கூறியதுபோல அருகாமைக் கடற்கரையில் இப்படியான திட்டங்களைச் செயல்படுத்துவது மீனவர்களின் வாழ்வாதாரத்தில் நிச்சயமாகப் பாதிப்பை ஏற்படுத்தும்.

கலைஞர் கருணாநிதி
கலைஞர் கருணாநிதி

தமிழ்நாட்டுக்கும், தமிழ் மொழிக்கும், தமிழ்ச் சமூகத்துக்கும் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் ஆற்றிய பணிகள் போற்றுதலுக்குரியது. அப்படி ஒரு தலைவரின் பெருமையைக் கடலுக்குள் நினைவுச் சின்னம் அமைத்துத்தான் போற்ற வேண்டும் என்பதில்லை. மாறாக மதுரையில் அமைக்கப்பட்டு வரும் `கலைஞர் நினைவு நூலகம்' போன்று ஆக்கப்பூர்வமான செயல்பாடுகள் மூலம் கலைஞரின் நினைவைப் போற்றலாம். எனவே, மேற்கூறிய விஷயங்களைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு இந்த பேனா நினைவுச் சின்னம் அமைக்கும் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டுமென தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களைப் பூவுலகின் நண்பர்கள் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்" என்று தமிழ்நாடு அரசைக் கேட்டுக்கொண்டிருக்கிறது.