Published:Updated:

இந்தியா முழுமைக்கும் தேசிய குடிமக்கள் பதிவேடு தேவையா... சாத்தியமா?

அசாம் என்.ஆர்.சி
அசாம் என்.ஆர்.சி

இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அசாமில் நீறுபூத்த நெருப்பாக இருந்துவருகிற விஷயம் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்.ஆர்.சி).

எல்லை மாநிலமான அசாம், பல ஆண்டுகளாக வெளிநாட்டவர் குடியேற்றத்தால் பிரச்னைகளைச் சந்தித்து வந்தது. இதையடுத்து நீண்ட போராட்டங்களுக்குப் பிறகு 1985-ம் ஆண்டு அசாம் போராட்டக் குழுவினருக்கும் இந்திய அரசுக்கும் இடையே `அசாம் ஒப்பந்தம்’ கையெழுத்தானது. அதன்படி இந்தியாவில் சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் கண்டறியப்பட்டு குடிபெயர்க்கப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டது. இதன் அடிப்படையில்தான் உச்சநீதிமன்றத்தின் மேற்பார்வையில் அசாம் மாநிலத்தில் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்.ஆர்.சி) மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அஸ்ஸாம் என்.ஆர்.சி
அஸ்ஸாம் என்.ஆர்.சி
Vikatan

தற்போது வரை 50,000-க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் மூலம் ரூ.1,220 கோடி வரை இதற்காக செலவு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் 31-ம் தேதிதான் என்.ஆர்.சியின் இறுதி வரைவுப் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் 19,09,657 நபர்களின் பெயர் விடுபட்டுப்போனது. பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டுள்ள இந்த நடவடிக்கையில் இன்று வரை ஒரு தெளிவான திசை தெரியவில்லை. இந்தக் குழப்பங்கள் ஒருபுறமிருக்கட்டும்; உள்துறை அமைச்சர் அமித்ஷா உட்பட பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த பலரும் இந்தியா முழுவதும் என்.ஆர்.சி கொண்டு வரப்படும் என்றும் 2024-ம் ஆண்டுக்குள் வெளிநாட்டவர்கள் கண்டறியப்பட்டு நாடு கடத்தப்படுவார்கள் என்றும் கூறிவருகின்றனர். புதிதாக ஆட்சியில் அமர்ந்த பிறகு மத்திய உள்துறை அமைச்சகம் மாநில அரசுகள் மூலம், அனைத்து மாவட்ட நிர்வாகத்துக்கும் வெளிநாட்டவர் தீர்ப்பாயத்தை அமைப்பதற்கான அதிகாரத்தை வழங்கி சட்டத்தை திருத்தியது.

டெல்லி பல்கலைக்கழகப் பேராசிரியர் அபூர்வானந்த் இதைப் பற்றி நம்மிடம் பேசுகையில், ``பதற்றமான வரலாறும் பின்னணியும் கொண்ட அசாம் மாநிலத்தில், என்.ஆர்.சி என்பது தர்க்கப்படி ஒப்புக்கொள்ளக்கூடிய ஒன்று. ஆனால், இதே தர்க்கம் மற்ற மாநிலங்களுக்கும் எவ்வாறு பொருந்தும் என்பது புரியவில்லை. அசாம் ஒப்பந்தமே சரியாக வரையறுக்கப்பட்ட ஒன்று கிடையாது. அப்போதைய பதற்றத்தைத் தணிப்பதற்காகக் கொண்டுவரப்பட்ட ஒரு ஏற்பாடே. என்.ஆர்.சி மூலம் தற்போது அசாமில் ஏற்பட்டு வருகிற குளறுபடிகளை நாம் கண்முன்னே பார்த்து வருகிறோம். வந்தேறிகளால் பாதுகாப்பற்ற நிலை என்பது போன்ற ஒரு சந்தேக நிலையை உருவாக்கி, அதன்மூலம் அரசியல் ஆதாயத்தை அறுவடை செய்வதற்காகவே பா.ஜ.க இதைச் செய்துவருகிறது. இது இவர்களின் அரசியல் செயல்திட்டத்தின் ஓர் அங்கமே.

பேராசிரியர் அபூர்வானந்த்
பேராசிரியர் அபூர்வானந்த்

அசாம் மாநில பா.ஜ.க-வே என்.ஆர்.சியை எதிர்க்கிறது. இது முஸ்லிம்களைக் குறிவைத்து அவர்கள் மத்தியில் ஒரு அச்ச உணர்வை உருவாக்க வேண்டும் என்பதற்காகவே திட்டமிட்டுச் செய்யப்படுவது. வங்கதேசப் பிரதமர் ஷேக் ஹசினா இந்தியா வந்து பிரதமர் மோடியைச் சந்தித்தபோது என்.ஆர்.சி மூலம் வங்கதேசத்துக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்று இந்திய அரசு திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டது. பிறகு, வெளிநாட்டினர் என அடையாளம் காணப்பட்டவர்களை எங்கு நாடுகடத்தப் போகிறார்கள் என்பதும் தெரியாது. அசாமில் வெளிநாட்டினர் என அறிவிக்கப்பட்ட 19 லட்சம் பேரை அடைத்து வைப்பதற்கான தடுப்பு மையங்கள் கிடையாது. இதில் நாடு முழுவதும் என்.ஆர்.சி-யை அமல்படுத்துவோம் என்பது நடைமுறைச் சாத்தியமற்ற ஒன்று. தேர்தல் ஆதாயத்துக்காக பிரசார உத்தியாக இதைப் பயன்படுத்துகின்றனர். வெளிநாட்டினரை அடையாளம் காணவேண்டும் என்கிற நோக்கத்தோடு, இருக்கிற அனைவரையும் இந்தியர் என்பதை நிரூபிக்கச் சொல்வது அபத்தமன்றி வேறில்லை” என்றார்.

இதற்கிடையில் கடந்த ஆட்சிக் காலத்தில் கொண்டு வர முயன்று முடியாமல் போன குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவையும் மீண்டும் கொண்டு வரும் முனைப்பில் பா.ஜ.க உள்ளது. குடியுரிமைச் சட்டத்திருத்த மசோதா, அண்டை நாடுகளைச் சேர்ந்த இஸ்லாமியர்கள் அல்லாத மற்ற மதத்தினர் அனைவருக்கும் குடியுரிமை கிடைக்க வழிவகை செய்யக்கூடியது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “என்.ஆர்.சி பற்றி இந்துக்கள், பௌத்தர்கள், சீக்கியர்கள் கவலைப்பட வேண்டாம். என்.ஆர்.சி-யை செயல்படுத்துவதற்கு முன்பாகக் குடியுரிமைச் சட்டத்திருத்தத்தைக் கொண்டுவந்து இவர்கள் அனைவருக்கும் குடியுரிமை கிடைக்கச் செய்துவிடுவோம்” எனப் பல இடங்களில் வெளிப்படையாகவே தெரிவித்திருக்கிறார். இதன்மூலம் என்.ஆர்.சி - குடியுரிமைச் சட்டத்திருத்தம் தொடர்பான யூகங்களை உறுதிப்படுத்தியிருக்கிறார்.

உள்துறை அமைச்சர் அமித் ஷா
உள்துறை அமைச்சர் அமித் ஷா
370 முதல் 371 வரை: இந்திய அரசியலமைப்பின் சிறப்பு அந்தஸ்து மாநிலங்கள் ஒரு பார்வை!

மதத்தின் அடிப்படையில் குடியுரிமை வழங்குவதை இந்திய அரசியலமைப்புச் சட்டம் அனுமதிக்கவில்லை என்பதே குடியுரிமைச் சட்டத்திருத்தத்துக்கு எதிராக வைக்கப்படக்கூடிய கருத்து. மதத்தால் தேசம் சந்தித்த வன்முறை கண்ணெதிரே உணர்ந்ததால்தான் இந்திய அரசியலமைப்புச் சட்டம் மதச்சார்பற்ற ஒன்றாக உருவாக்கப்பட்டது. அரசியலில் மதம் ஏற்படுத்திய பேரழிவை இந்தத் தேசம் பலமுறை சந்தித்திருக்கிறது. மீண்டும் ஒருமுறை சந்திக்கத் தயாராக இருக்கிறதா என்பதே தற்போதைய கேள்வி?

அடுத்த கட்டுரைக்கு