Published:Updated:

முதியோருக்கு தபால் வாக்கு : எதிர்க்கும் எதிர்க்கட்சிகள்... என்ன காரணம்?

வாக்குச்சாவடி
வாக்குச்சாவடி

எண்பது வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களும் மாற்றுத்திறனாளிகளும் தபால் வாக்குகள் மூலம் வாக்களிப்பதற்கான `விரிவுபடுத்தப்பட்ட தபால் வாக்குமுறை’யால் கள்ள வாக்குகள் அதிகரிக்கும் என்று தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றன.

கொரோனா அச்சம் தொடரும் சூழலில், 80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும் தபால் மூலம் வாக்களிக்க வாய்ப்பு ஏற்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை சில தரப்பினரால் முன்வைக்கப்படுகிறது. இந்தநிலையில், தமிழகம் வந்த இந்தியத் தேர்தல் ஆணையத்தின் பொதுச்செயலாளர் உமேஷ் சின்கா, `வயதானவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தபால் வாக்கு அளிக்க சிறப்பு வசதி செய்யப்படும்’ என்று தெரிவித்திருக்கிறார்.

வாக்குப்பெட்டி
வாக்குப்பெட்டி

உமேஷ் சின்கா தலைமையிலான ஆறு பேர்கொண்ட உயர்நிலைக்குழு சென்னை வந்து, தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை ஆய்வு செய்தது. அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் உட்பட பல்வேறு தரப்பினரிடம் அந்தக் குழு ஆலோசனை நடத்தியது. பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த உமேஷ் சின்கா, ``வாக்குச்சாவடிக்கு வர இயலாதவர்களுக்கு, குறிப்பாக உடல்நிலை பாதிக்கப்பட்டவர்களுக்கு தபால் வாக்கு என்கிற வசதி அளிக்கப்படுகிறது. அதேநேரம் அவர்கள் தபால் வாக்கு அளிப்பதற்கு நிர்ப்பந்திக்கப்பட மாட்டார்கள். இது சிறப்பு வசதி மட்டுமே. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படும். தபால் வாக்கு நடைமுறை வெளிப்படையாக இருக்கும். வாக்காளர்கள் ரகசியம் காக்கப்படும். அரசியல் கட்சிகளும் முகவர்களும் அனுமதிக்கப்படுவார்கள்” என்று கூறினார்.

ஏற்கெனவே, அரசு ஊழியர்களுக்கு மட்டும் தபால் மூலம் வாக்களிக்கும் வசதி இருந்துவருகிறது. அதை, முதியோர் உள்ளிடோருக்கு விரிவுபடுத்துவதற்கான முயற்சியை தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்க்கின்றன. `விரிவுபடுத்தப்பட்ட தபால் வாக்குமுறையை நடைமுறைப்படுத்துவதற்கான திட்டத்தைக் கைவிட வேண்டும்’ என்று தி.மு.க சார்பில் அதன் நாடாளுமன்றக் குழுத் தலைவரான டி.ஆர்.பாலு இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்திடம் புகார் மனு அளித்தார்.

அதில், ``ராணுவ வீரர்கள், மாற்றுத்திறனாளிகள், முதியோர், கொரோனா தொற்றாளர்கள் உள்ளிட்டோர் தபால் மூலம் வாக்களிப்பதற்கு பீகாரில் தேர்தல் ஆணையம் வாய்ப்பு வழங்கியிருந்தது. இதை அனைத்துச் சட்டமன்றத் தேர்தல்களிலும் பின்பற்றுவதற்கு தேர்தல் ஆணையம் அக்டோபர் 3-ம் தேதி சுற்றறிக்கை அனுப்பியிருக்கிறது. தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கையால் 15 சதவிகித அளவுக்கு முறைகேடு நடக்க வாய்ப்பிருக்கிறது. எனவே, சுற்றறிக்கையை உடனடியாகத் திரும்பப் பெறுவதுடன், நாட்டிலுள்ள அனைத்து அரசியல் கட்சிகள், சம்பந்தப்பட்ட அமைப்புகளுடன் ஆலோசனை நடத்தி நியாயமான மற்றும் ஒளிவுமறைவற்ற தேர்தல் முறையை உறுதிப்படுத்த வேண்டும்’’ என்று டி.ஆர்.பாலு வலியுறுத்தினார்.

டி.ஆர்.பாலு
டி.ஆர்.பாலு

மேலும் அவர், ``தபால் வாக்கைப் பெறுவதற்கு வாக்குச்சாவடி அதிகாரி நேரில் சென்று விண்ணப்பத்தை வாக்காளர்களிடம் வழங்க வேண்டும் என்பது தேர்தல் விதியாக இருக்கிறது. அவ்வாறு செய்யும்பட்சத்தில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதற்கு வாய்ப்பு அதிகம். எனவே, அந்த முறையைத் திரும்பப் பெற வேண்டும். அதே போன்று 80 வயது நிறைந்த மூத்த குடிமக்களுக்கு என்று தனியாக சிறப்பு வாக்குச்சாவடிகளை அமைத்திட வேண்டும். வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு வாக்குரிமை இருக்கிறதா என்பதைத் தேர்தல் ஆணையத்தின் தரப்பில்தான் சரிபார்க்க வேண்டும். தபால் வாக்கு முறையால் நூறு வாக்குகளில், மூன்று வாக்குகள் கள்ள வாக்குகளாக மாறும் என்பதில் சந்தேகமில்லை. கடந்த காலத்தில் நடைபெற்ற தேர்தலில் இது போன்ற பிரச்னை நிகழ்ந்திருக்கிறது.

80 வயதுக்கு மேற்பட்டவர்கள் உள்ளிட்டோருக்கு தபால் மூலம் வாக்களிக்கும் முறையைக் கொண்டுவருவது தொடர்பான விவகாரத்தில் தலைமைத் தேர்தல் ஆணையத்தின் நிலைப்பாடு சரியல்ல. எனவே, விரிவுபடுத்தப்பட்ட தபால் வாக்கு திட்டத்தை உடனடியாகக் கைவிட வேண்டும்” என்று டி.ஆர்.பாலு கூறினார்.

நாராயணன்
நாராயணன்

மத்தியில் ஆளும் பா.ஜ.க-வைப் பொறுத்தவரை 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும் தபால் வாக்கு முறை கொண்டு வர வேண்டும் என்று கூறுகிறது. இது குறித்து பா.ஜ.க-வின் மாநில செய்தித் தொடர்பாளரான திருப்பதி நாராயணனிடம் பேசியபோது, ``வயது முதிர்ந்தவர்களுக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும் தபால் வாக்கு முறை கொண்டுவருவது அவசியமானது. அவர்களால் வாக்குச்சாவடிகளுக்கு சென்று வாக்களிப்பது பெரும் சிரமம். மேலும், கொரோனாவால் அதிக எண்ணிக்கையில் உயிரிழந்தவர்களாக, பாதிக்கப்பட்டவர்களாக 60 வயது, 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் இருக்கிறார்கள். எனவே, அவர்களுக்கான உரிமையை வழங்க வேண்டும். அவர்களுக்கு தபால் வாக்கு முறை கொண்டுவரப்பட வேண்டும். இதை எதிர்ப்பது மிகவும் தவறானது” என்றார்.

இது குறித்து தி.மு.க-வின் செய்தித் தொடர்பாளரும் வழக்கறிஞருமான கண்ணதாசனிடம் பேசினோம்.

``மாற்றுத்திறனாளிகள் மற்றும் 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் தபால் மூலம் வாக்களிக்கும் முறையை வரக்கூடிய தமிழக சட்டமன்றத் தேர்தலில் கொண்டுவர முயற்சி நடக்கிறது. இந்த முறையால் நிறைய தவறுகள் நடப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. அரசு ஊழியர்கள் தபால் வாக்கு செலுத்த வேண்டுமென்றால், அவர்களின் மேலதிகாரிகள் கையெழுத்து அவசியம் என்கிற விதி இருக்கிறது. வயதானவர்களும் மாற்றுத்திறனாளிகளும் தபால் வாக்கு செலுத்த அரசு அதிகாரியிடம் கையெழுத்து வாங்க வேண்டுமென்றால், யாரிடம் போய் அவர்கள் கையெழுத்து வாங்குவார்கள், அதற்கான நடைமுறைகள் என்னென்ன... இந்த முறையால் நிறைய தவறுகளும் முறைகேடுகளும் நடப்பதற்கு வாய்ப்பிருக்கிறது. எனவேதான், தி.மு.க உட்பட பல அரசியல் கட்சிகளும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றன.

கண்ணதாசன்
கண்ணதாசன்

வயதானவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வாக்குகள் சுமார் பத்து சதவிகிதம் என்று வைத்துக்கொள்வோம். அந்த பத்து சதவிகித வாக்குகள் என்பது தேர்தல் முடிவுகளையே மாற்றிவிடக் கூடியவை. எனவே, இதை அனுமதிக்கக் கூடாது என்பது எங்கள் வாதம். தபால் வாக்கு என்ற முறைக்கு பதிலாக, வாக்குச்சாவடிகளில் வயதானவர்களுக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும் முன்னுரிமை அளிக்கலாம். வாக்குச்சாவடிக்கு வருவதற்கு அவர்களுக்கு வாகன ஏற்பாடுகளை ஆணையம் செய்யலாம். அமெரிக்கா போன்ற நாடுகளிலேயே தபால் வாக்குகள் குறித்து புகார் எழுந்திருக்கும் நிலையில், இங்கு தபால் வாக்குகளை அனுமதிக்கக் கூடாது” என்றார்.

வங்கத்தை வளைக்கக் களமிறங்கிய அமித் ஷா... குடும்பங்களைப் பிரிக்கும் கட்சி அரசியல்!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினரான ஆறுமுக நயினாரிடம் பேசினோம்.

``முதியவர்கள் வாக்குச்சாவடிக்கு வந்துதான் இதுவரை வாக்களித்திருக்கிறார்கள். கொரோனா போன்ற காரணத்தை வைத்து அவர்களுக்கு தபால் வாக்கு என்கிற முறையைக் கொண்டுவர முயற்சி நடக்கிறது. கொரோனா காலத்தில் இந்த ஏற்பாடு நியாயமானதுதானே என்று தோன்றினாலும், அந்த முறை சரியானது அல்ல. அதில் நிறைய முறைகேடுகள் நடப்பதற்கு வாய்ப்பிருக்கிறது. தமிழகத்தில் 234 தொகுதிகளில் தேர்தல் நடக்கவிருக்கிறது. இத்தனை தொகுதிகளுக்கு எப்படி வாக்குச்சீட்டுகளை அனுப்புவார்கள்... எந்த வாக்குப்பெட்டியில் அவர்கள் வாக்குகளைச் செலுத்துவார்கள்... ஆன்லைன் மூலம் வாக்களிப்பார்களா... என விவாதிக்கக்கூடிய பிரச்னைகள் இதில் நிறைய இருக்கின்றன.

ஆறுமுக நயினார்
ஆறுமுக நயினார்

தி.மு.க., காங்கிரஸ் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உட்பட பல கட்சிகளும் தபால் வாக்கு முறைக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்திருக்கின்றன” என்றார் ஆறுமுக நயினார்.

விரிவுபடுத்தப்பட்ட தபால் வாக்கு முறைக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் தி.மு.க வழக்கு தொடர்ந்திருக்கிறது. தி.மு.க-வின் மனுவை விசாரணைக்கு ஏற்ற உயர் நீதிமன்றம், விசாரணையை ஜனவரி 7-ம் தேதிக்கு ஒத்திவைத்திருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு