Published:Updated:

கள்ளக்குறிச்சி: `நிரந்தர பொதுச் செயலாளர்!’ -முன்னாள் அமைச்சர் படத்துடன் சசிகலாவுக்கு ஆதரவாக போஸ்டர்

சசிகலா
சசிகலா

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை முழுவதும் சசிகலாவுக்கு ஆதரவாக அ.தி.மு.க தொண்டர்கள் ஒட்டியிருக்கும் போஸ்டர்கள் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

அ.தி.மு.க தொண்டர்களிடம் சசிகலா பேசிவரும் செல்போன் உரையாடல்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகிவரும் நிலையில், இந்த விவகாரம் அக்கட்சி நிர்வாகிகளிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. சசிகலாவிடம் பேசியதற்காக கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஆனந்தன் கட்சியைவிட்டு நீக்கப்பட்டார்.

சசிகலா
சசிகலா

”தன்னிடம் உள்ள ஒருசிலரை வைத்து சசிகலா அதிமுகவிற்குள் நுழைய முயற்சி செய்கிறார். கழகத்தை கைப்பற்ற நினைக்கும் அவரது எண்ணம் ஒருபோதும் ஈடேறாது” என்று தெரிவித்த அ.தி.மு.கவின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, சசிகலாவிடம் பேசியது அ.தி.முகவினரே கிடையாது என்று தெரிவித்திருந்தார்.

ஆனால் அதன்பிறகுதான் சசிகலாவிடம் போனில் பேசிய கள்ளக்குறிச்சி முன்னாள் அமைச்சர் ஆனந்தன் உள்ளிட்ட 15 பேரை நீக்கம் செய்த அக்கட்சித் தலைமை, கட்சியின் கொள்கைக்கும் கோட்பாட்டிற்கும் முரணாக செயல்பட்டார் என்று கூறி பெங்களூர் புகழேந்தியையும் நீக்கியது. இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டையில் சசிகலாவுக்கு ஆதரவாக அ.தி.மு.க தொண்டர்கள் ஒட்டியிருக்கும் அந்த போஸ்டர்கள் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றன.

சசிகலா ஆடியோ :``ஃபேஸ்புக் பதிவைப் பார்த்து சின்னம்மா போன் செய்தார்" - தச்சநல்லூர் சுந்தரராஜ்!

சசிகலாவின் படத்துடன் உளுந்தூர்பேட்டை நகர கழக அம்மாவின் உண்மை விசுவாசிகள் என்ற பெயரில் இடம்பெற்றிருக்கும் அந்த போஸ்டரில் ’தியாகத் தலைவி சின்னம்மா அவர்கள் அ.இ.அ.தி.மு.கவின் நிரந்தர பொதுச் செயலாளர். தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், மீண்டும் தர்மமே வெல்லும்.. அ.தி.மு.கவை தலைமையேற்று வழிநடத்த வா தாயே..’ என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதேபோல சமீபத்தில் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் ஆனந்தனின் புகைப்படமும் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த கட்டுரைக்கு