Published:Updated:

`கே.என்.நேரு vs அன்பில் மகேஷ்' - போஸ்டர் அரசியல்; திருச்சி தி.மு.க-வில் புதிய கலகம்?

தி.மு.க முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு - அன்பில் மகேஷ்
தி.மு.க முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு - அன்பில் மகேஷ்

இது மகேஷ் கவனத்துக்குச் சென்றதும் சம்பந்தப்பட்ட பகுதிச் செயலாளரை அழைத்து கடுமையாகத் திட்டியிருக்கிறார். அதன் பிறகு, இரண்டு மணி நேரத்தில் மீண்டும் கே.என்.நேருவின் புகைப்படத்தைப் போட்டு போஸ்டர் அடித்தனர்.

ரயில்வே வேலை வாய்ப்புகளில் தமிழக இளைஞர்களுக்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும் என்கிற கோரிக்கையை வலியுறுத்தி திருச்சி பொன்மலை பணிமனையை முற்றுகையிட்டு மகேஷ் பொய்யாமொழி தலைமையில் போராட்டம் நடைபெற்றது. இந்த முறையும் போஸ்டர் விவகாரத்தில் கே.என்.நேருவை ஒதுக்கி வைத்ததற்காகவும் பின்பு மகேஷ் பொய்யாமொழி தலையிட்டு இவ்விவகாரத்தைத் தீர்த்ததாகவும் சொல்கிறார்கள் தி.மு.க-வினர். இருவருக்குள் என்னதான் நடக்கிறது என்று விசாரித்தோம்.

பொன்மலை பணிமனை முற்றுகைப் போராட்டம்
பொன்மலை பணிமனை முற்றுகைப் போராட்டம்

திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனை தொழில்நுட்பப் பிரிவில் பல்வேறு பணியிடங்களுக்கு 2018-ம் ஆண்டு நடைபெற்ற ஆர்.ஆர்.பி தேர்வில் தொழில்நுட்பப் பிரிவில் பீகார், ராஜஸ்தான், ஒடிசா உள்ளிட்ட வட மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 588 பேர் புதிதாகப் பணி நியமனத்துக்குத் தேர்வாகியுள்ளனர். இவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்புப் பணி பொன்மலையில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

கொரோனா பொது முடக்கக் காலத்தில் திடீரென நடைபெறும் நியமனத்தில் முறைகேடு இருப்பதாகக் கூறி அப்ரண்டீஸ் பயிற்சி பெற்றோர் மற்றும் தமிழ் அமைப்புகள் போராட்டம் நடத்திய பிறகு, சான்றிதழ் சரிபார்ப்புப் பணி நிறுத்தப்பட்டது. தமிழ் அமைப்பினர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ஐ.பெரியசாமி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி
ஐ.பெரியசாமி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி

இந்நிலையில் தமிழ்நாட்டில் மத்திய அரசுப் பணியிடங்களில் 90 சதவிகித பணியிடங்களைத் தமிழர்களுக்கு வழங்க வேண்டும், தென்னக ரயில்வே தொடர்வண்டி பணியில் பயிற்சி முடித்த இளைஞர்களுக்கு உடனடியாக வேலை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தி.மு.க-வின் திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினரும் திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் 300-க்கும் மேற்பட்ட தி.மு.க-வினர் பொன்மலை ரயில்வே பணிமனையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கே.என்.நேரு புகைப்படம் இல்லாத போஸ்டர்
கே.என்.நேரு புகைப்படம் இல்லாத போஸ்டர்

பின்பு ரயில்வேயில் தமிழக இளைஞர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்ற கடிதத்தை பணிமனை மேலாளரைச் சந்தித்து வழங்கினர். இதில் என்ன உள்கட்சி விவகாரம் நடந்தது என்று விசாரித்தோம்.

என்ன நடந்தது என்று கட்சி உள்விவகாரம் அறிந்தவர்களிடம் பேசினோம். ``திருச்சி தி.மு.க-வில் 25 ஆண்டுக்காலம் கோலோச்சியவர் கே.என்.நேரு. ஆனால், இன்று அவரது ஆதரவாளர் பலர் மெல்ல மெல்ல அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் அணியில் இணையத் தொடங்கியிருக்கிறார்கள். நேருவின் எதிரணியினர் மற்றும் அவரால் பாதிக்கப்பட்டோர்களால்தான் பிரச்னைகளே எழுகின்றன.

தி.மு.க முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு - அன்பில் மகேஷ்
தி.மு.க முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு - அன்பில் மகேஷ்

கே.என்.நேருவுக்கும் அன்பில் மகேஷுக்கும் பெரிதாகப் பிரச்னைகள் இல்லை. ஆனால், இங்குள்ள தி.மு.க-வினர்தான் அவர்களுக்குப் பிரச்னை ஏற்படுத்த நினைக்கிறார்கள். உதாரணமாக, தெற்கு மாவட்ட மகளிரணிச் செயலாளராக லீலா வேலு மூன்றாவது முறையாகத் தேர்வு செய்யப்பட்டார். கடந்த 2 முறையும் லீலா வேலு பொறுப்பில் இருக்கும்போது அவரை தேர்ந்தெடுக்கப் பரிந்துரை செய்தவர் கே.என்.நேரு. இந்தமுறை இவர் தேர்வு செய்யப்பட்டபோது லீலா வேலு, அன்பில் மகேஷை புகழ்ந்தும் போஸ்டர் அடித்தார். அதில் கே.என்.நேருவின் புகைப்படம் இல்லை. அது பெரிய சர்ச்சையாக உருவெடுத்த நிலையில், மீண்டும் மண்ணின் மக்களுக்கு வேலை வழங்க வேண்டும் என்று அன்பில் மகேஷ் தலைமையில் பொன்மலை பணிமனை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்போகிறோம் என்று பகுதிச் செயலாளர் தர்மராஜன் என்பவர் போஸ்டர்கள் அடித்தார்.

கே.என்.நேருவின் புகைப்படத்தை போட்டு உருவான போஸ்டர்
கே.என்.நேருவின் புகைப்படத்தை போட்டு உருவான போஸ்டர்

அதில் இம்முறையும் நேருவின் புகைப்படத்தைப் போடாமல் தவிர்த்தனர். இது அன்பில் மகேஷ் கவனத்துக்குச் சென்றதும் சம்பந்தப்பட்ட பகுதிச் செயலாளர் தர்மராஜனை அழைத்து கடுமையாகத் திட்டியிருக்கிறார். அதன் பிறகு, இரண்டு மணி நேரத்தில் மீண்டும் கே.என்.நேருவின் புகைப்படத்தைப் போட்டு போஸ்டர் அடித்தனர். நல்லா இருக்கும் இருவருக்குள் கலகத்தை ஏற்படுத்த கட்சிக்காரர்கள் நினைக்கிறார்கள்" என்று முடித்துக்கொண்டனர்.

அடுத்த கட்டுரைக்கு