அதிமுக-வில் ஒற்றைத் தலைமை விவகாரம் நாளுக்கு நாள் பூதாகரமாகிவருகிறது. ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் ஒற்றைத் தலைமை ஏற்பது தொடர்பாக போஸ்டர் யுத்தம் செய்துவருகின்றனர்.
அதன்படி சில தினங்களுக்கு முன்பு ராமநாதபுரத்தில் ஓ.பன்னீர்செல்வம் அ.தி.மு.க-வைத் தலைமை ஏற்று நடத்த அழைப்புவிடுத்து போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது. அதைத் தொடர்ந்து அன்றே பரமக்குடியில் அவசர அவசரமாக எடப்பாடி பழனிசாமியை அதிமுக தலைமை ஏற்க வேண்டுமென வலியுறுத்தி போஸ்டர்கள் ஒட்டினர் அவரின் ஆதரவாளர்கள். இருவரின் ஆதரவாளர்களின் இந்த போஸ்டர் யுத்தம் ராமநாதபுரம் மாவட்டத்தையே பரபரப்புக்குள்ளாக்கியது.

இந்நிலையில் இன்று காலை பரமக்குடி பகுதியில் சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் படத்துடன் போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது. அதில் `எம்.ஆர்.சிவாத்தேவன், அதிமுக நகர் மாணவர் அணி இணைச் செயலாளர், பரமக்குடி நகர கழகம், ராமநாதபுரம் மாவட்டம்’ என்று அச்சிடப்பட்டிருந்தது.
`தாய் வழி வந்த தங்கத் தாரகை’, தியாகத் தங்கையே... ஒன்றரைக் கோடி தொண்டர்களின் எதிர்பார்ப்பே’, `அம்மா அவர்கள் அடையாளம் காட்டிய தர்ம தலைவரே ஒன்றுகூடி ஒற்றைத் தலைமையேற்க வாருங்கள். அனைத்து கடைக்கோடி தொண்டனின் விருப்பம்’ என அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
தமிழ்நாடு முழுவதும் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் ஒற்றைத் தலைமை ஏற்க வலியுறுத்தி போஸ்டர்கள் ஒட்டிவருகின்றனர். ஆனால் சசிகலாவை மீண்டும் கட்சிக்குள் இணைப்பது தொடர்பாகத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில், ஓ.பன்னீர்செல்வமும் சசிகலாவும் இணைந்து கட்சியை வழிநடத்த வேண்டும் என அ.தி.மு.க நிர்வாகி போஸ்டர் ஒட்டியிருப்பது எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இது குறித்து போஸ்டர் ஒட்டிய எம்.ஆர்.சிவாத்தேவனிடம் பேசினோம். ``அ.தி.மு.க-வில் அம்மாவால் (ஜெயலலிதா) கை காட்டப்பட்டு இடைக்கால முதல்வராகச் செயல்பட்டு வந்தவர் ஓ.பன்னீர்செல்வம். அம்மாவின் மறைவுக்குப் பிறகு சில மனவருத்தங்கள் காரணமாக சின்னம்மா (சசிகலா) எடப்பாடி பழனிசாமியை முதல்வராக அறிவித்து சிறைக்குச் சென்றார். ஆனால் அவர் திரும்பி வருவதற்குள் கட்சியைச் சின்னா பின்னம் ஆக்கிவிட்டார். ஊருக்கே தெரியும்... இவர் தவழ்ந்துபோய் பதவி பெற்றது. நான்காண்டுகள் அ.தி.மு.க-வை அவருக்கு சின்னம்மா குத்தகைக்குவிட்டுச் சென்றார். தற்போது அதை அவர் சொந்தமாக்கிக்கொள்ள முயன்று வருகிறார். எடப்பாடி பழனிசாமியால் அ.தி.மு.க அழிந்துகொண்டிருக்கிறது.
அவருக்கு ஆதரவாளர்கள் யாருமே கிடையாது. அது போன்ற மாயையை உண்டாக்கிவருகிறார். எனக்குப் பிறகும் இன்னும் நூறாண்டுகள் அ.தி.மு.க நிலைக்கும் என அம்மா சூளுரைத்துவிட்டுச் சென்றார். ஆனால் எடப்பாடி தலைமை ஏற்றால் அ.தி.மு.க அழிவது உறுதி” என ஆதங்கத்துடன் குமுறினார்.