Published:Updated:

டெல்லியைத் தொடர்ந்து மும்பையிலும் பிரதமர் மோடிக்கு எதிரான போஸ்டர்கள்! - அதிர்ச்சியில் பா.ஜ.க-வினர்

மும்பையில் வைக்கப்பட்டுள்ள பேனர்
மும்பையில் வைக்கப்பட்டுள்ள பேனர்

டெல்லியைத் தொடர்ந்து மும்பையிலும் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. மும்பையில் காங்கிரஸ் கட்சியினர் ஒட்டிய இந்த போஸ்டர்களை பாஜக-வினர் கிழிப்பதில் தீவிரம்காட்டிவருகின்றனர்.

டெல்லியில் சமீபத்தில் கொரோனாவைத் தடுக்க தவறியது குறித்தும், தடுப்பூசியை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்தது குறித்தும் பிரதமர் நரேந்திர மோடியை விமர்சித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. இது தொடர்பாக ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்தவர்கள் ஏராளமானோர் கைதுசெய்யப்பட்டனர். நாட்டின் பல பகுதிகளில் காங்கிரஸ் கட்சியினர் பிரதமர் நரேந்திர மோடியை விமர்சித்து இது போன்ற பேனர்களை வைத்தனர். அதை காங்கிரஸ் கட்சியினர் தங்களது ட்விட்டர் பக்கத்திலும் வைத்துள்ளனர்.

டெல்லியில் ஒட்டப்பட்ட போஸ்டர்
டெல்லியில் ஒட்டப்பட்ட போஸ்டர்

அதே முறையைப் பின்பற்றி மும்பையில் காங்கிரஸ் கட்சியினர், `முக்கிய இடங்களில் நாட்டில் தடுப்பூசி தேவைப்படும்போது ஏன் பிரதமர் நரேந்திர மோடி தடுப்பூசியை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்ய வேண்டும்?’ என்று கேள்வி எழுப்பி பிரமாண்ட பேனர்கள் வைத்துள்ளனர். காட்கோபரில் வைக்கப்பட்டுள்ள ஒரு பேனரில் `மோடி ஜி நமது குழந்தைகளுக்கான தடுப்பூசியை ஏன் வெளிநாட்டுக்கு கொடுக்கிறீர்கள்?’ என்று இந்தியில் கேட்கப்பட்டிருந்தது. அதில் காங்கிரஸ் கட்சியின் சின்னமும், மும்பை காங்கிரஸ் தலைவர் பாய் ஜக்தாப் உட்பட சிலரின் படங்களும் இடம் பெற்றிருந்தன.

இதைக் கண்ட பா.ஜ.க-வினர் அந்த பேனரை அங்கிருந்து அப்புறப்படுத்திவிட்டு, `பாரத் மாதாகி ஜே!’ என்று கோஷமிட்டனர். அதோடு, ``காங்கிரஸ் கட்சியினர் பிரதமர் நரேந்திர மோடியை அவமானப்படுத்துகின்றனர். மக்களைத் தவறான முறையில் வழிநடத்துகின்றனர். இதை கடுமையாகக் கண்டிக்கிறோம்’’ என்று பேனரைக் கிழித்த பாஜக பிரமுகர் ஒருவர் தெரிவித்தார். சஞ்சய் பாண்டே என்ற மற்றொரு பாஜக பிரமுகர் இது குறித்துக் கூறுகையில், ``இந்தியா காங்கிரஸ் மற்றும் கொரோனா ஆகிய இரண்டு வைரஸ்களுக்கு எதிராகப் போராடிவருகிறது. தடுப்பூசி தயாரிக்கத் தேவையான பொருள்களை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யும்போது, அவர்கள் கேட்கும் சிறிய அளவு தடுப்பூசியை வெளிநாட்டுக்குக் கொடுக்க வேண்டிய சூழ்நிலை வருகிறது” என்று தெரிவித்தார்.

கொரோனா தடுப்பூசி
கொரோனா தடுப்பூசி

இந்தச் சம்பவத்தால் மும்பையில் இது போன்ற பேனர் வைக்கப்பட்டுள்ள இடங்களில் பிரச்னை ஏற்படாமலிருக்க போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிராவில் சிவசேனா தலைமையிலான கூட்டணி அரசில் காங்கிரஸ் கட்சியும் இடம் பெற்றிருப்பதால், இந்த விவகாரத்தில் சிவசேனா அரசால் பேனருக்கு எதிராக நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை.

அடுத்த கட்டுரைக்கு