Published:Updated:

``என் பிடிவாத குணம் பொட்டம்மானுக்குத் தெரிந்திருக்கிறது!’’ - சீமான் சொல்லும் ரகசியம்

சீமான்

``அண்ணன் பிரபாகரன் எல்லோரையுமே `போங்க... வாங்க...’ என்று மரியாதையோடுதான் பேசுவார். ஆனால், அண்ணன் பொட்டம்மான் என்னைச் செல்லமாக `போடா... வாடா' என்றுதான் பேசுவார்'' என்கிறார் சீமான்.

``என் பிடிவாத குணம் பொட்டம்மானுக்குத் தெரிந்திருக்கிறது!’’ - சீமான் சொல்லும் ரகசியம்

``அண்ணன் பிரபாகரன் எல்லோரையுமே `போங்க... வாங்க...’ என்று மரியாதையோடுதான் பேசுவார். ஆனால், அண்ணன் பொட்டம்மான் என்னைச் செல்லமாக `போடா... வாடா' என்றுதான் பேசுவார்'' என்கிறார் சீமான்.

Published:Updated:
சீமான்

தமிழக அரசியலில், எந்தவொரு கேள்விக்கும் துணிச்சலாகத் தன் கருத்துகளைச் சொல்லிவருபவர் 'நாம் தமிழர் கட்சி'யின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்!

நாம் தமிழர் கட்சி குறித்து அவ்வப்போது எழுந்துவரும் சர்ச்சைகள் குறித்த கேள்விகளோடு சீமானைச் சந்தித்துப் பேசினேன்...

''நாம் தமிழர் கட்சியினர் தங்கள் சகோதர இயக்கங்களான திராவிடக் கட்சிகளோடே தொடர்ந்து சண்டையிட்டுக் கொண்டிருக்கிறீர்களே... ஏன்?''

''தமிழ்நாட்டில் இப்போது திமுக தலைமையிலான ஆட்சி நடைபெறுகிறது. இந்த ஆட்சியில் நல்ல திட்டங்கள் கொண்டுவரப்படும்போது, அதைப் பாராட்டுகிறோம். தவறான திட்டங்கள் என்றால், அதை விமர்சிக்கிறோம். இது இயல்பான அரசியலாகப் போய்க்கொண்டிருக்கிறது.

ஆனால், 'திராவிட மாடல்', 'நான் திராவிட இனம் சார்ந்தவன்' என்றெல்லாம் ஆட்சியாளர்கள் கோட்பாட்டு குறித்துப் பேசும்போதுதான் நமக்கு வெறுப்பு ஏற்படுகிறது; அவர்களோடு முரண்பட்டு வாதம் செய்யவேண்டியிருக்கிறது. ஏனெனில், இங்கே 'திராவிடம்' என்றொரு இனமோ, மொழியோ இல்லை. அதனால்தான் மறைந்த ஐயா கருணாநிதியே இது குறித்தெல்லாம் பேசாமல் தவிர்த்துவிட்டார்.

கருணாநிதி - மு.க.ஸ்டாலின்
கருணாநிதி - மு.க.ஸ்டாலின்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

எங்கள் மண்ணுக்குரிய மொழி, கலை, பண்பாடு, வேளாண்மை, நாகரிகம் அனைத்தையும் மீட்டெடுத்து எங்கள் மக்களின் மேம்பாட்டுக்காக தமிழ்த் தேசிய அரசியலை முன்னெடுக்கிறோம். காரணம் நாங்கள் தமிழர்கள், எங்கள் மொழி தமிழ், எங்கள் நாடு தமிழ்நாடு! இதைச் சொன்னால், 'தமிழ்நாடு' என்ற பெயரே சங்க இலக்கியத்தில் இல்லை என்று எதிர்வாதம் வைக்கின்றனர். 'வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறும் நல்லுலகம்' என்கிறார் தொல்காப்பியர். 'தமிழ்த்திரு நாடுதன்னைப் பெற்ற - எங்கள் தாயென்று கும்பிடடி பாப்பா', 'வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு' என்றெல்லாம் பாடுகிறார் பாரதி. இதெல்லாம் 'தமிழ்நாடு' என்று நீங்கள் பெயர் சூட்டிய பிறகா பாடினார்கள்?

தமிழ்த் தேசிய அரசியலை நாங்கள் முன்னெடுப்பது குற்றம் என்றால், என்.டி.ஆர் 'தெலுங்கு தேசம்' ஆரம்பித்தபோதும் நீங்கள் எதிர்த்திருக்க வேண்டும். ஆனால், அவரோடு கூட்டணிதானே போட்டுக்கொண்டீர்கள். அப்படியென்றால், நான் தமிழ்த் தேசியம் பேசும்போது மட்டும் ஏன் உங்களுக்கு கஷ்டமாக இருக்கிறது? இதையெல்லாம் நாங்கள் எடுத்துப் பேசும்போது அவ்வப்போது சில தர்க்கங்கள் வருகின்றன. மற்றபடி, பாஜக-வுக்கும் எங்களுக்கும் இருப்பதுதான் பகை; திமுக-வுக்கும் எங்களுக்கும் இடையே நடப்பது பங்காளிச் சண்டைதான்!''

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

''கடந்த சில மாதங்களுக்கு முன்புகூட 'திராவிடர் விடுதலைக் கழக'த் தலைவர் கொளத்தூர் மணி பற்றி நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த தம்பிகள் மிகக் கடுமையாக விமர்சனம் செய்தனரே?''

''அதை நான் விரும்புவதில்லை... அண்ணன் கொளத்தூர் மணியே எங்களை விமர்சித்தாலும்கூட, எந்தச் சூழலிலும் அண்ணன் கொளத்தூர் மணியை நான் விட்டுக்கொடுக்க மாட்டேன். அவர் மட்டுமல்ல... அண்ணன் ராமகிருஷ்ணன், மருத்துவர் ஐயா ராமதாஸ், அண்ணன் வைகோ, அண்ணன் திருமாவளவன் என இவர்கள் எல்லோரும் என்னை விமர்சித்தாலும்கூட, நான் பதிலுக்கு எந்தவித விமர்சனத்தையும் முன்வைக்காமல் அதைக் கடந்துசென்றுவிடுவேன். ஏனெனில், எனக்கு எதிரி எங்கள் அண்ணன்கள் அல்ல. எங்கள் எதிரி யார் என்று ஏற்கெனவே நாங்கள் குறித்துக்கொண்டுதான் சண்டையிட்டுவருகிறோம்.

கொளத்தூர் மணி
கொளத்தூர் மணி

ஆனால், இந்த உண்மைகளையெல்லாம் தெரியாத, அறியாத பிள்ளைகள் யாரேனும் தவறான வார்த்தைகளைப் பயன்படுத்தியிருக்கலாம். இவர்களுக்கு அண்ணன் கொளத்தூர் மணி யாரென்றும் தெரியாது, எனக்கும் அண்ணனுக்கும் இடையேயான உறவு பற்றியும் தெரியாது. எனவே, அது போன்று தவறாகப் பேசியிருக்கலாம். இது போன்ற விடயங்கள் என் கவனத்துக்கு வந்துவிட்டால் உடனடியாக அவர்கள்மீது நடவடிக்கை எடுத்திருக்கிறேன். உங்கள் தனிப்பட்ட கருத்து என்றால், கட்சிக்கு வெளியே சென்று எழுதிக்கொள்ளுங்கள் என்று கூறி, நாம் தமிழர் கட்சியைவிட்டேகூட சிலரை நீக்கியும் இருக்கிறேன்.''

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

''அண்மையில்கூட, 'நாம் தமிழர் கட்சி'யின் தடா சந்திரசேகர் ஈழத்தமிழர்கள் குறித்து அவதூறாகப் பேசினார் என்ற சர்ச்சை எழுந்தது. இது குறித்த கேள்விக்கு, 'சீமான் சொல்லித்தான் அப்படிப் பேசினேன்' என அவரே சொல்கிறாரே?''

''என் மீது இருக்கக்கூடிய பாசத்தால், அண்ணன் அப்படிப் பேசிவிட்டார். மற்றபடி நான் அப்படி எந்த உத்தரவு கொடுப்பதும் கிடையாது.

'எல்லாவற்றையும் விட்டுவிட்டு, உங்களுக்காக தம்பி போராடிக்கொண்டிருக்கிறான். ஆனால், நீங்களோ தம்பிக்கு நெருக்கடி கொடுக்கிறீர்களே, தொல்லைபடுத்துகிறீர்களே' என்ற கோபத்தில், ஆதங்கத்தில், அன்பில் அப்படிப் பேசிவிட்டார்.''

தடா சந்திரசேகர்
தடா சந்திரசேகர்

''சீமான் உள்ளிட்ட நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்தவர்கள் பேசியதான சர்ச்சைக்குரிய ஆடியோக்கள் இணையதளங்களில் உலவுகின்றனவே..?''

''அது ஓர் அநாகரிகம்! உங்களை நம்பித்தானே நான் பேசுகிறேன்... பொதுவெளியில் பேசுவதாக இருந்தால், நானே வெளிப்படையாகப் பேசிவிடுவேன்தானே... தனிப்பட்ட வகையில் உங்களை நம்பி நான் பேசுவதைப் பதிவு செய்து, வேண்டுமென்றே பொதுவெளியில் வெளியிடுகிறீர்கள் என்றால், இதில் யார் செய்தது தவறு? இப்படி சிலர் நாகரிகமற்ற முறையில் செயல்படுவதால்தான், யாரோடும் பேசுவதையே தவிர்த்துவிடும் நிலை, படிப்பினை நமக்கு ஏற்படுகிறது. அதனால்தான் இப்போது நான் யாரோடும் பேசுவதில்லை!

ஆனால், தம்பிக்கு இது போன்று எதிர்ப்புகளெல்லாம் பின்னாளில் வரும் என்று அண்ணன் பொட்டம்மானுக்கு அப்போதே தெரிந்திருக்கிறது. அதனால்தான் 12 வருடங்களுக்கு முன்பே அண்ணன் பொட்டம்மான் எனக்கு விடிய விடிய பாடம் நடத்தியிருக்கிறார். அப்போது என் தம்பி சிரஞ்சீவியும் உடனிருந்தான்.

அண்ணன் பிரபாகரன் எல்லோரையுமே `போங்க... வாங்க' என்று மரியாதையோடுதான் பேசுவார். ஆனால், அண்ணன் பொட்டம்மான் என்னைச் செல்லமாக `போடா... வாடா...' என்றுதான் பேசுவார். அப்போது என் பாதுகாப்பில் அக்கறைகொண்டு பேசிய அண்ணன், 'இத்துணூண்டு ஓரத்தில் இருந்துகொண்டு உலகத்தையே நாம் ஒட்டுக்கேட்கிறோம். எனவே, யாரிடமும் அலைபேசியில் பேசாதே. நேரில் பேசும்போதும்கூட அலைபேசியை உடன்வைத்திருக்க அனுமதிக்காதே...

நீ எட்டடுக்கு பாதுகாப்பில் இருக்க வேண்டும். கூட்டங்களில் நீ பேசிக்கொண்டிருக்கும்போது, உன்னுடைய வாகன ஓட்டுநர் வாகனத்திலேயே இருக்க வேண்டும். அவரும் வாகனத்தைவிட்டு வெளியே வந்துவிட்டால், வாகனத்தின் அடியில் எதிரிகள் வெடிகுண்டு பொருத்திவிடக்கூடிய அபாயம் இருக்கிறது' என்றெல்லாம் என்னை எச்சரித்தவர், வாகனத்தின் அடியில் ஏதேனும் மாற்றங்கள் தெரிகின்றனவா என்பதைக் கண்காணிக்கும் கண்ணாடி போன்ற கருவி ஒன்றையும் எனக்கு அனுப்பிவைத்தார். பழுதாகிப்போன அந்தக் கருவி இப்போதும் என் வீட்டில் இருக்கிறது.''

சீமான் - பிரபாகரன்
சீமான் - பிரபாகரன்

''நாம் தமிழர் கட்சியை ஆரம்பிக்கும் முன்னரே தமிழ்நாட்டில் உங்களுக்கு எதிரிகள் என்று யாரும் இருந்தனரா?''

''ஈழத்துக்கு நான் சென்றிருந்தபோதே, 'நீ ஏதாவது செய்தே ஆக வேண்டும். ஐந்தாயிரம் பேரைத் திரட்டிக் கூடவா உன்னால் போராட முடியாது?' என்றெல்லாம் அண்ணன் பொட்டம்மான் என்னிடம் கேட்டார். பின்னர், 'ஈழத்தமிழில் பேசிவிட்டாலே நம்மாள் என்று நினைக்கிற போக்கு உன்னிடம் இருக்கிறது. அதை நீ மாற்றிக்கொள்ள வேண்டும். ஏனெனில், சிங்களன்கூட ஈழத்தமிழில் பேசலாம்' என்றெல்லாம் எச்சரித்தார்.

ஆனால், அப்போதும்கூட நான், அண்ணன் கூறியதை ஏற்கத் தயங்கி, 'நான் அண்ணன் திருமாவோடு இணைந்து செயல்படுகிறேனே அண்ணா' என்று சொன்னேன். உடனே கொஞ்ச நேரம் மௌனமாக இருந்த அண்ணன், 'இல்லப்பா... நீ ஏதாவது செய்தே ஆக வேண்டும்' என்று அழுத்தமாக சொன்னார்.

12 ஆண்டுகளுக்கு முன்பு நான் நான் சிறிய ஆள்தானே... இன்றைய முதிர்ச்சி அன்றைக்கு இல்லையே... தலைவர் பிரபாகரனை நேரில் பார்த்த பிரமிப்பிலிருந்தே நான் விலக முடியாமல் நின்றிருந்தேன்.... 'நான் போய் என்ன செய்வது... நம்மிடம் ஏன் இந்த வேலையை ஒப்படைக்கிறார்' என்று குழம்பிப்போன நான் 'நான் ஊர் திரும்பவில்லை... எனக்கென்று மனைவி, குழந்தை என குடும்பமும் இல்லை. நான் இங்கேயே இருந்துவிடுகிறேன்' என சொல்லிக் கெஞ்சினேன். கண்களிலிருந்து கண்ணீர் வழிகிறது.

ஆனால், 'நீங்கள் இங்கிருந்து அண்ணனுக்கு என்னென்ன செய்ய விரும்புகிறீர்களோ அதையெல்லாம் செய்வதற்கு இங்கே எத்தனை பேர் இருக்கிறார்கள் பாருங்கள். ஆனால், நீங்கள் அங்கே போய் செய்யக்கூடிய வேலையைச் செய்வதற்கென்று இங்கே யாருமே இல்லை பார்த்தீர்களா? எனவே, நீங்கள் முதலில் தமிழ்நாட்டில் போய் இறங்குங்கள். அடுத்தடுத்து நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்று தானாகவே தெரியவரும்' என்று சொல்லி அனுப்பினார் அண்ணன் பொட்டம்மான்.

பொட்டம்மான்
பொட்டம்மான்

அவர் சொன்னதுபோலவே, இங்கே வந்து இறங்கிய பிறகு, நான் என்ன செய்ய வேண்டும் எனத் தெரியவந்தது... அதைத்தான் இப்போது செய்துகொண்டிருக்கிறேன்.

என்னிடம் உள்ள பிடிவாத குணத்தை அண்ணன் பொட்டம்மான் கவனித்திருக்கிறார். 'எந்தக் காரணத்துக்காகவும் சமரசம் செய்துகொள்ள மாட்டான். அதனால் இந்தப் பணியை இவனிடம்தான் ஒப்படைக்க வேண்டும்' என்று உணர்ந்து என்னிடம் ஒப்படைத்திருக்கிறார் என்பதைப் பின்னர்தான் அறிந்துகொண்டேன்.''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism