Published:Updated:

‘வறுமை‘, ‘வேலையின்மை’ - மோடி அரசை விமர்சிக்கும் ஆர்.எஸ்.எஸ்... பின்னணி என்ன?!

மோகன் பகவத்

இந்தியாவில் வறுமையும் வேலையின்மையும் நிலவுவதாக ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பொதுச்செயலாளர் தத்தாத்ரேயா ஹோசபலே விமர்சனம் செய்திருக்கிறார்.

‘வறுமை‘, ‘வேலையின்மை’ - மோடி அரசை விமர்சிக்கும் ஆர்.எஸ்.எஸ்... பின்னணி என்ன?!

இந்தியாவில் வறுமையும் வேலையின்மையும் நிலவுவதாக ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பொதுச்செயலாளர் தத்தாத்ரேயா ஹோசபலே விமர்சனம் செய்திருக்கிறார்.

Published:Updated:
மோகன் பகவத்

வழக்கமாக, அரசின் கொள்கைகளை எதிர்க்கட்சியினர் தான் விமர்சனம் செய்வார்கள். அந்த வகையில், மத்தியில் இருக்கும் பா.ஜ.க அரசை, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்துவருகின்றன. குறிப்பாக, பா.ஜ.க அரசின் பொருளாதாரக் கொள்கைகள் எதிர்க்கட்சிகளால் கடுமையாக விமர்சிக்கப்படுகின்றன. இந்த நேரத்தில், பா.ஜ.க-வின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ்ஸின் பொதுச்செயலாளரும் பா.ஜ.க அரசு தொடர்பாக விமர்சனங்களை முன்வைத்திருக்கிறார்.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

சங் பரிவார் அமைப்புகளில் ஒன்றான சுதேசி ஜாக்ரான் மன்ச், பொருளாதார விவகாரங்களைக் கவனிக்கக்கூடிய அமைப்பாக செயல்பட்டுவருகிறது. அந்த அமைப்பு சமீபத்தில் நடத்திய ஒரு நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ் பொதுச்செயலாளர் தத்தாத்ரேயா ஹோசபலே கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது, அரசின் கொள்கைகள் குறித்து சில விமர்சனங்களை முன்வைத்தார்.

அப்போது, ``உலகில் ஆறு பெரும் பொருளாதார நாடுகளில் ஒன்றாக இந்தியா வளர்ந்திருக்கிறது. அதே நேரத்தில், இந்தியாவில் 20 கோடிப் பேருக்கு மேல் வறுமைக்கோட்டுக்கு கீழே இருக்கிறார்கள் என்ற புள்ளிவிவரத்தை வருத்தத்துடன் பார்க்கிறேன். இந்தியாவில் 23 கோடி பேர் நாளொன்றுக்கு ரூ. 375-க்கும் குறைவாகவே சம்பாதிக்கிறார்கள். கிராமங்களில் வேலைவாய்ப்புகள் இல்லை. பொருளாதாரக் காரணங்களுக்காக மக்கள் புலம்பெயர்கிறார்கள். இந்தியாவில் 7.6 சதவிகிதம் வேலையின்மை இருக்கிறது. வறுமை, சமத்துவமின்மை ஆகிய பெரும் சவால்களை எதிர்கொள்ள கூர்மையான, பரவலாக்கப்பட்ட கொள்கை தேவைப்படுகிறது” என்று தத்தாத்ரேயா பேசியிருக்கிறார்.

நிர்மலா சீதாராமன்
நிர்மலா சீதாராமன்

எதிர்க்கட்சிகளாலும் சில பொருளாதார நிபுணர்களாலும் மட்டுமே முன்வைக்கப்படும் விமர்சனத்தை, பா.ஜ.க-வின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ்ஸின் பொதுச்செயலாளர் முன்வைத்திருப்பது பலருக்கும் ஆச்சர்யத்தை அளித்திருக்கிறது. இதற்கு முன்பாக, ஆர்.எஸ்.எஸ் மட்டுமல்லாமல், பி.எம்.எஸ்.,  சுதேசி ஜாக்ரான் மன்ச் போன்ற ஆர்.எஸ்.எஸ்ஸின் துணை அமைப்புகளும் பா.ஜ.க அரசின் கொள்கைகளை விமர்சித்திருக்கின்றன.

2017-ம் ஆண்டு விஜயதசமி நாளில் உரையாற்றிய ஆர்.எஸ்.எஸ்  தலைவர் மோகன் பகவத், “வேளாண் விளைபொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்கப்பட வேண்டும், சிறு குறு நடுத்தர தொழில்களைப் பாதுகாக்க வேண்டும்” என்று பேசினார். அதற்கு பிறகு, ஓராண்டு காலத்துக்கு மேலாக ஆயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லியில் முகாமிட்டு போராட்டம் நடத்தினர். ஆனால், குறைந்தபட்ச ஆதரவு விலை குறித்த விவசாயிகளின் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி அமலாக்கம், கொரோனா ஊரடங்கு போன்றவை காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளிலிருந்து சிறு, குறு தொழில்களை மீட்டெடுக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்கிற விமர்சனமும் தொடர்கிறது.

இந்த நிலையில், ஆர்.எஸ்.எஸ் பொதுச்செயலாளர் முன்வைத்திருக்கும் விமர்சனங்கள் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கின்றன. இது குறித்து பா.ஜ.க-வின் மாநிலப் பொருளாளர் எஸ்.ஆர்.சேகரிடம் பேசினோம்.

எஸ்.ஆர்.சேகர்
எஸ்.ஆர்.சேகர்

ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க-வின் தாய் அமைப்பு. அந்த வகையில், ஒரு தாய் தன் பிள்ளையின் வளர்ச்சியில் அக்கறை கொண்டு சில கருத்துக்களைத் தெரிவித்திருப்பதாகப் பார்க்கிறேன். உலகில் ஆறாவது பெரிய பெருளாதாரமாக இந்தியா முன்னேறியிருக்கிறது. அது குறித்து பெருமைப்பட்டுக் கொண்டிருக்காமல், வேலைவாய்ப்பு, பொருளாதாரத் ஏற்றத்தாழ்வு, வறுமை ஆகிய பிரச்னைகளில் இன்னும் நாம் முன்னேறிச் செல்வதற்கான ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் ஆர்.எஸ்.எஸ் பொதுச்செயலாளர் வழங்கியிருக்கிறார்.

தேசத்தின் வளர்ச்சியில் எந்த இடத்தில் தொய்வு இருக்கிறது என்பதை ஆர்.எஸ்.எஸ் குடும்பத்தின் அமைப்புகள் வெளிப்படையாகச் சுட்டிக்காட்டுகின்றன. வளர்ந்த நாடுகளிலும்கூட வறுமையும் வேலையின்மையும் சமூக ஏற்றத்தாழ்வுகளும் இருக்கின்றன. அத்தகைய அவலங்கள் ஏதுமற்ற ஒரு தேசமாக இந்தியாவை முன்னேற்ற வேண்டும் என்றுதான் ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் அக்கறையுடன் பேசுகிறார்கள். இது ஆக்கப்பூர்வமான அணுகுமுறை” என்றார் எஸ்.ஆர்.சேகர்.  

இந்த விவகாரம் குறித்து அரசியல் விமர்சகர் ஸ்ரீராமிடம் பேசினோம். ``ஆர்.எஸ்.எஸ் பொதுச்செயலாளர் தனக்கு சரியென்று பட்டதைப் பேசியிருக்கிறார். இதன் மூலம், ‘மத்திய அரசை ஆர்.எஸ்.எஸ் இயக்குகிறது’ என்ற விமர்சனம் தவறு என்பது உறுதியாகிறது. 60 ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சியில் மேற்கொள்ளப்படாத எத்தனையோ திட்டங்களை, பா.ஜ.க அரசு தற்போது செய்ய ஆரம்பித்திருக்கிறது. ஆனால், எல்லாவற்றையும் ஒரே இரவில் செய்து முடித்துவிட முடியாது என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும்.

ஸ்ரீராம்
ஸ்ரீராம்

வறுமை ஒழிப்பைப் பொறுத்தவரையில், மாநில அரசுக்கும் சம பங்கு இருக்கிறது. மத்திய அரசின் திட்டங்களை எந்த இடைவெளியும் இல்லாமல் மாநில அரசுகள் முறையாக நிறைவேற்ற வேண்டும். மத்திய அரசை குறை மட்டுமே கூறிக்கொண்டிருப்பது நியாயமல்ல” என்கிறார் ஸ்ரீராம்.

இந்த விவகாரம் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த தொழிற்சங்கத் தலைவர் ஆர்.இளங்கோவனிடம் பேசினோம்.

“பா.ஜ.க அரசின் பொருளாதாரக் கொள்கைகளை ஆர்.எஸ்.எஸ்ஸும், அதன் துணை அமைப்புகளும் விமர்சனம் செய்வது வழக்கமான ஒன்றுதான். ஆர்.எஸ்.எஸ்ஸின் தொழிற்சங்கப் பிரிவான பி.எம்.எஸ் எனப்படும் பாரதிய மஸ்தூர் யூனியனின் தலைவர்கள், மத்திய அரசின் தனியார்மய நடவடிக்கைகளையும் புதிய பென்ஷன் திட்டம் போன்றவற்றையும் எதிர்ப்பதாகக் கூறுவார்கள். ஆனால், தனியார்மயத்தையும் புதிய பென்ஷன் திட்டத்தையும் எதிர்த்து அனைத்துத் தொழிற்சங்களும் போராட்டம் நடத்தினால், அவர்கள் பங்கேற்க மாட்டார்கள்.

ஆர்.இளங்கோவன்
ஆர்.இளங்கோவன்

அதேபோல, ஆர்.எஸ்.எஸ் குடும்ப அமைப்புகளில் ஒன்றான சுதேசி ஜாக்ரான் மன்ச், அந்நிய நேரடி முதலீட்டை எதிர்ப்பதாகக் கூறும். ஆனால், அந்தக் கொள்கைகளைத் தடுக்கவோ, மாற்றவோ ஆக்கப்பூர்வமாக நடவடிக்கைகளில் அவர்கள் இறங்குவதில்லை. மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கைகளை ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட அமைப்புகள் எதிர்ப்பதற்கு ஓர் உள்நோக்கம் இருக்கிறது. இந்த அமைப்புகளை ஆதரிக்கக்கூடிய பலர், பா.ஜ.க அரசின் பொருளாதாரக் கொள்கைகளை கடுமையாக எதிர்க்கிறார்கள். அவர்களைத் திருப்திபடுத்தவும், சமாதானப்படுத்தவும் அவ்வபோது இதுபோல அவர்கள் பேசுவது உண்டு.

சில ஆண்டுகளில் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தை தொழிலதிபர் கௌதம் அதானி பிடித்திருக்கிறார். அது எப்படி நிகழ்ந்தது? இந்தக் கேள்விக்குள், இந்தியாவில் வறுமையும் வேலையின்மையும் ஏன் இன்னும் தீர்க்கப்படவில்லை என்பதற்கான பதில் அடங்கியிருக்கிறது. அது பற்றி ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் யாரும் ஏன் பேசுவதில்லை?” என்கிறார் ஆர்.இளங்கோவன்.