Published:Updated:

``பன்னீர் பாய்ச்சலும்... பகடையாடும் எடப்பாடியும்!”- அ.தி.மு.க. அதிரடிகள்

அ.தி.மு.க தலைமை நிர்வாகிகள்
அ.தி.மு.க தலைமை நிர்வாகிகள்

பன்னீர்- பழனிசாமி இடையேயான பஞ்சாயத்து பா.ஜ.க-வுக்குச் சாதகமாகப் போகிறதா அல்லது அ.தி.மு.க-வை அல்லோலப்பட வைக்கப்போகிறதா என்பதை இன்னும் நில நாள்களில் காலம் நமக்குச் சொல்லிவிடும்.

''பவர் சென்டராக பன்னீர் மாறப்போகிறார் என்கிற செய்திகளுக்குப் பணமுறி வைக்கும் வேலையில் எடப்பாடி வேகமாக இறங்கியுள்ளார்” - வாட்ஸ் அப்பில் அ.தி.மு.க பிரமுகர் நமக்கு அனுப்பிய இந்தச் செய்திக்குப் பின்னால் நடக்கும் அரசியல் ஆட்டங்களை விசாரிக்க ஆரம்பித்தோம். அதில் அடுத்தடுத்த மாதங்களுக்குள் அ.தி.மு.க-வில் பல அரங்கேற்றங்கள் நடக்கப்போவது நன்றாகப் புரிந்தது.

எடப்பாடி பன்னீர் இணைப்பு
எடப்பாடி பன்னீர் இணைப்பு

``துணை முதல்வர் என தன் பெயருக்குப் பின்னால் மட்டுமே இருக்கிறது ஆனால், அதிகாரத்தில் எந்தப் பவரும் இல்லை“ என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் தொடர்ந்து புலம்பி வந்தார் பன்னீர். ஜெயலலிதா இருந்தவரை எடப்பாடியே பன்னீரைப் பார்த்தால் பவ்வியம் காட்டுவார். ஆனால், கடந்த மூன்று ஆண்டுகளில் பழனிசாமியின் அசுரத்தனமான ஆதிக்கத்தினால் பன்னீர் எடப்பாடியிடம் பவ்வியம் காட்டும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார். ``மனக்கசப்பு இருந்தாலும் ஆட்சியும், கட்சியும் குலைந்துவிடக்கூடாது என்று அமைதியாக இருந்தேன். ஆனால், இனிமேலும் அப்படி இருக்க முடியாது. வரும் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக எனது ஆட்டம் ஆரம்பிக்கும்” என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் சொல்லிவந்தார் பன்னீர்.

இந்த மூவ் எடப்பாடிக்கும் தெரிந்துவிட்டது. எனவே பன்னீரின் பயணத்துக்குத் தடைபோடும் வேலையில் சத்தமில்லாமல் இறங்கிவிட்டார் எடப்பாடி என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள். செப்டம்பர் 14-ம் தேதி நாடாளுமன்றத்தில் மாநிலங்களவை துணை சபாநாயகர் தேர்தல் நடக்கிறது. இந்தத் தேர்தலில் பா.ஜ.க, ஐக்கிய ஜனதா தளத்தின் வேட்பாளர் ஹரிவன்ஷ் நாராயண்சிங்கை களத்தில் இறக்க உள்ளது. காங்கிரஸ் கட்சி சார்பில் யாரை வேட்பாளராக நிறுத்துவது என்பதில் இதுவரை முடிவு இறுதி செய்யப்படவில்லை.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

இந்தநிலையில், `பா.ஜ.க சார்பில் போட்டியிடும் வேட்பாளருக்கு ஆதரவாக அ.தி.மு.க-வின் மாநிலங்களவை உறுப்பினர்களும் வாக்களிக்கவேண்டும் என்று பா.ஜ.க டெல்லி தலைமை திட்டமிட்டுள்ளது. இதற்காக பியூஷ்கோயல் தமிழக முதல்வர் எடப்பாடியைத் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது அ.தி.மு.க வில் நடக்கும் விவகாரங்களும் அலசப்பட்டுள்ளது. பா.ஜ.க தரப்பு தனக்கு வரும் சட்டமன்றத் தேர்தலிலும் ஆதரவு தெரிவித்தால் அனைத்து விதங்களிலும் பா.ஜ.க-வுக்கு அணுசரனையாக இருக்கும் என்று அப்போது எடப்பாடி தரப்பில் உறுதி கொடுக்கப்பட்டுள்ளது.

பன்னீர் - தினகரன்... துளிர்க்கும் புது நட்பு!  - எடப்பாடிக்கு எதிரான `மூவ்'!

இதற்கும் பன்னீரின் பாய்ச்சல் திட்டத்துக்கு நெருங்கிய தொடர்பு உள்ளது என்கிறார்கள். பன்னீருக்கு ஆரம்பத்தில் டெல்லி மேலிடத்தின் ஆதரவு இருந்தது. ஆனால், காலப்போக்கில் பன்னீருக்கும் டெல்லி மேலிடத்துக்குமான தொடர்பு குறைந்துவிட்டது. இப்போது எடப்பாடிக்கு எதிராகப் பன்னீர் களத்தில் இறங்கினால், அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் ஆதரவு முக்கியம். அதற்கு டெல்லி மேலிடத்தில் ஆசியும் தேவை. எனவே, டெல்லி மேலிடத்துடன் பழைய உறவைப் புதுப்பிக்க ஆரம்பித்துள்ளார் பன்னீர். இந்தத் தகவல் எடப்பாடிக்குத் தெரிந்து பியூஷ் கோயல் மூலம் முட்டுக்கட்டை போட ஆரம்பித்துள்ளார்.

பியூஷ் கோயல்
பியூஷ் கோயல்

மற்றொருபுறம் பன்னீருக்கு ஆதரவாகக் களத்தில் இறங்கும் முடிவில் தினகரன் இருக்கிறார். பன்னீரை முன்னிலைப்படுத்தினால் கட்சிக்குள்ளும் சலசலப்பு வராது என்று தினகரன் திட்டமிடுகிறார். இதனால் தினகரனுக்கு செக் வைக்க சசிகலாவைத் தன் பக்கம் கொண்டுவரமுடியுமா?... என்றும் எண்ணுகிறார் எடப்பாடி. சசிகலாவை தன் பக்கம் கொண்டுவந்துவிட்டால், தினகரன் தனக்கு எதிராகக் களத்தில் இறங்கமாட்டார் என்று நினைக்கிறார். கடந்த மாதமே தன்னை முதல்வர் வேட்பாளராக முன்மொழியும் வேலையில் எடப்பாடி இறங்கினார். ஆனால்,அதற்கு முன்பாக பன்னீர் தரப்பில் ஒட்டப்பட்ட சுவரொட்டியால் அது தள்ளிப்போனது. இனியும் காலதாமதம் செய்தால் தன் முதல்வர் சிம்மாசனத்துகுச் சிக்கல் வந்துவிடும் என்று முடிவுக்கு வந்துவிட்டார் எடப்பாடி. விரைவில் தனக்கு நெருக்கமான அமைச்சர்கள் மூலம் முதல்வர் வேட்பாளர் குறித்த அறிவிக்கையை ஆரம்பிக்கப்போகிறார்’ என்கிறார்கள் அ.தி.மு.க வட்டாரத்தில்.

அதற்குப் பன்னீர் தரப்பில் எதிர்ப்புக் கிளம்பினால் பொதுக்குழுவைக் கூட்டி முடிவெடுக்கலாம் என்று எடப்பாடி திட்டமிடுகிறார். தற்போது, அ.தி.மு.கவின் வேட்பாளர்கள் அங்கீகாரக் கடிதத்துக்கு பன்னீர் - எடப்பாடி இருவருமே கையெழுத்திட்டால் மட்டுமே அது செல்லும் என்கிற நிலை இருக்கிறது. இந்த அதிகாரத்தையும் பன்னீரிடமிருந்த பறித்துவிட வேண்டும் என்கிற எண்ணம் எடப்பாடியிடம் உள்ளது. அதற்குப் பொதுக்குழுவின் அங்கிகாரம் முக்கியம் என்பதை எடப்பாடி அறிந்துவைத்துள்ளார்.

பொதுக்குழுவில் எடப்பாடிக்கு எப்படி முழு ஆதரவு கிடைக்கும் என்று அ.தி.மு.க வட்டாரத்தில் விசாரித்தால் வேறு சில கணக்குகளையும் சொல்கிறார்கள்.``பொதுக்குழுவில் ஆரம்பத்தில் பன்னீருக்குக் கணிசமான அளவு ஆதரவாளர்கள் இருந்தார்கள். ஆனால், சில காலமாக அவர் தனது ஆதரவாளர்களை கண்டுகொள்ளாமல் போனதால் பலரும் அவர் மீது அதிருப்தியில் இருக்கிறார்கள்.அவர்களுக்கு எடப்பாடி தரப்பு ஆதரவுகளும் நீட்டியுள்ளது. ஏன்? ஓ.பி.எஸ் பின்னால் இருந்த பல நிர்வாகிகள் எடப்பாடி கண் அசைவுக்குச் செயல்பட்டு வருகிறார்கள். இப்போது எடப்பாடி மீது பல அமைச்சர்கள் அதிருப்தியில் இருக்கிறார்கள். அவர்கள் பன்னீரை முன்னிலைப்படுத்த விரும்பினாலும் கடந்த காலத்தில் பன்னீர் நடந்துகொண்ட நடவடிக்கையால், அவர்கள் தயக்கத்தைக் காட்டுகிறார்கள். அந்தத் தயக்கத்தை உடைக்கவே, `நான் பழைய பன்னீர் செல்வமாக மாறிவிட்டேன்’ என்று வலியக் கூறிவருகிறார். இதற்கு சில நல்ல ரியாக்ஷனும் வர ஆரம்பித்துள்ளது. இதைத் தடுக்கவே இப்போது பழனிசாமி சில மூவ்களை செய்யத் திட்டமிடுகிறார்.

சசிகலா - இ.பி.எஸ் - ஓ.பி.எஸ்
சசிகலா - இ.பி.எஸ் - ஓ.பி.எஸ்

ஏற்கெனவே, பொதுக்குழு தனக்குச் சாதகமாக இருக்கும் என்று எடப்பாடி எண்ணுகிறார். சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மூலம் முக்குலத்தோர் நிர்வாகிகளைச் சரிக்கட்டத் திட்டமிடுகிறார். அ.தி.மு.க-வில் ஒன்றியம், மாவட்டங்கள் பிரிக்கப்பட்டுள்ளது. இதனால், பொதுக்குழு உறுப்பினர்கள் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. புதிதாகப் பொறுப்புக்கு வந்தவர்கள் எல்லாம் எடப்பாடி ஆசியில் பதவிக்கு வந்தவர்கள். இன்றைய நிலையில் பொதுக்குழு உறுப்பினர்களில் எழுபது சதவீதம் பேர் தனக்குச் சாதகமாக இருப்பார்கள். அவர்களை வைத்துக் கையெழுத்திடும் அதிகாரத்தை தன் வசமே எடுத்துக்கொள்ள எடப்பாடி திட்டமிடுகிறார். அதே நேரம் டெல்லி தனக்கு எதிராகத் திரும்பிவிடக்கூடாது என்பதாலே இப்போது டெல்லி தலைமையும் சரிக்கட்ட ஆரம்பித்துள்ளார்” என்கிறார்கள்.

"ஆம்புலன்ஸ் வருவது 2 கி.மீ முன்பே தெரியும்!" - எடப்பாடி பாராட்டும் அந்த இரட்டையர்கள் யார்?!

பன்னீர் தரப்பிலோ, ``எடப்பாடியின் மூவ் எல்லாம் எங்களுக்கும் தெரியும். நாங்கள் பதினைந்து அமைச்சர்களை எங்கள் பக்கம் கொண்டுவந்தாலே போதும், தேவையான எண்ணிக்கையிலான பொதுக்குழு உறுப்பினர்களை எங்கள் வசம் கொண்டுவந்துவிடுவோம். இதுதான் இறுதியில் நடக்கப்போகிறது. ஏக தலைவனாகத் தான் மட்டுமே இருக்கவேண்டும் என்கிற எடப்பாடியின் திட்டம் இனியும் ஈடேறாது” என்கிறார்கள்.

பன்னீர்செல்வம்
பன்னீர்செல்வம்

பன்னீர்- பழனிசாமி இடையேயான பஞ்சாயத்து பா.ஜ.கவுக்குச் சாதகமாகப் போகிறதா அல்லது அ.தி.மு.க-வை அல்லோலப்பட வைக்கப்போகிறதா என்பது இன்னும் நில நாள்களில் நமக்குத் தெரிந்துவிடும்.

அடுத்த கட்டுரைக்கு