Published:Updated:

`அமைச்சரவைக்கே தெரியாமல் அறிவிப்பு; குடியரசுத் தலைவர் ஆட்சி!' - கொதிக்கும் புதுச்சேரி மக்கள்

``ஆளுநர் அலுவலகத்தின் கடமை எப்போதும் மாறாது. ஏனென்றால் அது சட்டபூர்வமான பொறுப்புணர்வை அடிப்படையாகக் கொண்டதே தவிர, அரசியல் நிலையற்ற தன்மையைப் போல் அல்ல. நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டம், நாடாளுமன்றத்தால் மாற்றியமைத்து அல்லது திருத்தம் செய்யப்படும் வரை அது மாறாது”

புதுச்சேரி
புதுச்சேரி

புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 2006-க்குப் பிறகு உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவில்லை. தற்போது உச்சநீதிமன்ற உத்தரவுப்படி அதற்கான பணிகளைத் தொடங்கியது புதுச்சேரி அரசு. இந்த நிலையில், கடந்த ஆண்டு உள்ளாட்சித் தேர்தல் ஆணையரை நியமிப்பதற்காக செய்தித்தாள்களில் விளம்பரம் வெளியானது. ஆனால், முதல்வர் நாராயணசாமிக்கும் உள்ளாட்சித் துறையின் அமைச்சரான நமச்சிவாயத்துக்கும் அப்படி ஒரு விளம்பரம் வெளியாகப் போகிறது என்பதே தெரிந்திருக்கவில்லை என்பதுதான் இதில் ஹைலைட்.

நாராயணசாமி
நாராயணசாமி

மாநில முதல்வருக்கும் துறையின் அமைச்சருக்கே தெரியாமல் விளம்பரம் வெளியானதற்குப் பின்புலமாக இருந்தவர் கிரண்பேடிதான் என்று சட்டப்பேரவையில் கொந்தளித்த முதல்வர் நாராயணசாமி உள்ளிட்ட அமைச்சர்கள், தொடர்புடைய அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். ஆனால், அப்படி எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் சட்டப்பேரவையைக் கூட்டிய முதல்வர் நாராயணசாமி, உள்ளாட்சித் தேர்தல் நடத்தும் ஆணையராக பாலகிருஷ்ணன் என்பவரை அறிவித்தார்.

ஆனால், கடந்த டிசம்பர் மாதம் 20-ம் தேதி பாலகிருஷ்ணனின் நியமனம் செல்லாது என்று கிரண்பேடி ஒரு ஆணையை வெளியிட்டார். உடனே ``மாநிலத் தேர்தல் ஆணையரை நீக்குவதாக உள்துறை ஏதும் அறிவிக்காத நிலையில், நியமனம் செல்லாது என்று கிரண்பேடி வெளியிட்டிருக்கும் ஆணை சட்டவிரோதம். அதனால் அதைப் பின்பற்றாதீர்கள்” என்று தலைமைச் செயலருக்கும் உள்ளாட்சித்துறைக்கும் உத்தரவிட்டிருந்தார் முதல்வர் நாராயணசாமி.

அமைச்சர் நமசிவாயம்
அமைச்சர் நமசிவாயம்

ஆனால், முதல்வர் நாராயணசாமியின் அந்த உத்தரவு மூலையில் வைக்கப்பட்டதுடன், மாநில தேர்தல் ஆணையரை நியமிப்பதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என்ற விளம்பரம் உள்ளாட்சித்துறையின் மூலம் நேற்று வெளியாகியிருப்பதால் உஷ்ணமானது அமைச்சரவை.

இந்த நிலையில்தான், நேற்று புதுச்சேரி பூரணாங்குப்பத்தில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்துகொண்ட முதல்வர் நாராயணசாமியும் உள்ளாட்சித்துறை அமைச்சர் நமசிவாயமும் கிரண்பேடியை கடுமையாக விமர்சித்தனர். உள்ளாட்சித்துறை அமைச்சர் நமசிவாயம், ``டெல்லியில் பா.ஜ.க சார்பில் முதல்வர் வேட்பாளராக நிறுத்தப்பட்ட கிரண்பேடி டெபாசிட் கூட வாங்கவில்லை. ஆனால், தற்போது அவர் புதுச்சேரி மக்களையும், அரசையும் ஆட்டிப்படைக்க நினைக்கிறார். மக்கள் நலனுக்கு விரோதமாகச் செயல்படும் அவரை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும்” என்றார்.

ஆளுநர் மாளிகை
ஆளுநர் மாளிகை

அவரைத் தொடர்ந்து பேசிய முதல்வர் நாராயணசாமி, ``புதுச்சேரிக்கு மத்திய அரசு எந்த உதவியும் செய்யாத நிலையில், ஆளுநர் கிரண்பேடி தினமும் தொல்லை தருகிறார். நாட்டில் எந்த ஒரு மாநிலத்தின் நிர்வாகத்திலும் ஆளுநர் தலையீடு செய்யவில்லை. ஆனால், மத்திய அரசின் தூண்டுதல் காரணமாக ஆளுநர் கிரண்பேடி புதுச்சேரி அரசுக்குத் தினமும் தொல்லை கொடுத்து வருகிறார். புதுச்சேரிக்குப் பிடித்த சனி வருகின்ற பிப்ரவரி மாதத்துடன் விலகும்” என்றார்.

அதையடுத்து, `அன்றாடம் துணைநிலை ஆளுநரை திரும்பப் பெற வேண்டும் என்ற செய்தியே வருகிறது. இது குறிப்பிட்ட கால இடைவெளியில் மீண்டும் மீண்டும் ஒரே இடத்திலிருந்து வருவதை படிப்பது வழக்கமாகிவிட்டது. ஆனால், ஆளுநர் அலுவலகத்தின் கடமை எப்போதும் மாறாது. ஏனென்றால் அது சட்டபூர்வமான பொறுப்புணர்வை அடிப்படையாகக் கொண்டதே தவிர, அரசியல் நிலையற்ற தன்மையைப் போல் அல்ல. நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டம், நாடாளுமன்றத்தால் மாற்றியமைத்து அல்லது திருத்தம் செய்யப்படும் வரை அது மாறாது.

கிரண் பேடி
கிரண் பேடி

பொதுமக்களின் பணத்தைப் பாதுகாத்து தேவையானவர்களுக்கு வழங்கும் பணியில் ஆளுநர் அலுவலகம் கவனம் செலுத்துகிறது. அத்துடன் மக்களுக்குப் பணியாற்றும் சிறந்த அதிகாரிகளையும் தேர்வு செய்ய முயல்கிறது. இது மக்களுக்கான சேவையே தவிர தனிப்பட்ட அக்கறை இல்லை. நிர்வாகக் கொள்கைகளில் நிலையாக இருப்பதுதான் ஆளுநரைத் திரும்பப் பெற வேண்டும் என்று கேட்பதற்குக் காரணமாக இருக்கிறது” என்று வாட்ஸ்-அப் மூலம் செய்தியை தட்டிவிட்டிருக்கிறார் கிரண்பேடி.

விஸ்வரூபம் எடுக்கும் சூதாட்ட விடுதி விவகாரம்! - முட்டிக்கொள்ளும் கிரண் பேடி, நாராயணசாமி

அதைத் தொடர்ந்து, ``விதிகளை மீறி ஆளுநர் கிரண்பேடி செயல்பட்டிருப்பது தொடர்பாக விரைவில் நீதிமன்றத்தை அணுகுவோம்” என்று வழக்கம்போல ஆரம்பித்திருக்கிறது அமைச்சரவை.``மாநிலத்தின் முதல்வருக்கும், துறை அமைச்சருக்குமே தெரியாமல் ஒரு அறிவிப்பு வெளியாகிறது என்றால் அதிகாரிகள் யார் உத்தரவை செயல்படுத்துகிறார்கள்? மக்களாட்சி என்ற பெயரில் மத்திய அரசு புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சியை நடத்திக்கொண்டிருக்கிறது” என்று கொதிக்கின்றனர் புதுச்சேரி மக்கள்.