காவிரி டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டு புதிய கிணறுகள் தோண்ட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும் 2016 -ம் ஆண்டுக்கு முன் தமிழக அரசால் வழங்கப்பட்ட அனுமதியின் அடிப்படையில் ஓ.என்.ஜி.சி. கச்சா எண்ணெய் எடுக்கும் பணிக்கு கிணறுகள் அமைக்கப்பட்டது. பல இடங்களில் போதுமான அளவிற்கு கச்சா எண்ணெய் கிடைக்காததால் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
ஆனாலும் சில இடங்களில் கச்சா எண்ணெய் எடுக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தற்போது புதிதாக 9 கிணறுகள் ஹைட்ரோகார்பன் எரிவாயு எடுப்பதற்கு அனுமதி கோரி ஓ.என்.ஜி.சி. மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறையிடம் அனுமதி கேட்டு கடிதம் எழுதியுள்ளது.

இதுபற்றி தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுத்தலைவர் பி.ஆர்.பாண்டியனிடம் பேசினோம். ``இச்செய்தி அதிர்ச்சியளிக்கிறது. காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்று அறிவிக்கப்பட்ட பிறகு புதிய கிணறுகள் தமிழக அரசின் அனுமதியின்றி அமைக்க முடியாது. இதனை முழுமையாக அறிந்துள்ள ஓ.என்.ஜி.சி. நிர்வாகம் திட்டமிட்டு மத்திய - மாநில அரசுகளின் உறவுகளை சீர்குலைக்க முயற்சி செய்கிறது என அஞ்சத் தோன்றுகிறது.
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
2019 -ம் ஆண்டு முதல் மத்திய அரசுடன் ஓ.என்.ஜி.சி. தொகுப்பு ஒப்பந்த அடிப்படையில் கச்சா, பாறை எரிவாயு, மீத்தேன், ஹைட்ரோகார்பன் உள்ளிட்ட கனிம வளங்களையும் எடுப்பதற்கு ஒப்பந்தம் பெற்றுள்ளது. இதனைப் பயன்படுத்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கிணறுகளிலிருந்து மறைமுகமாக ஹைட்ரோ கார்பன் பாறை எரிவாயு உள்ளிட்ட எரிவாயு எடுப்பதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதாக தெரிகிறது.
எனவே தமிழக அரசாங்கம் ஏற்கனவே முகமது இஸ்மாயில் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குழுவின் அறிக்கையை உடனே வெளியிட வேண்டும். நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஓ.என்.ஜி.சி .கிணறுகள் மற்றும் கச்சா எண்ணெய் எடுத்து முடிந்த கிணறுகள் அனைத்தையும் பட்டியலிட்டு அடையாளப்படுத்தி அதனை நிரந்தரமாக மூடுவதற்கு முன்வர வேண்டும். புதிய திட்டங்களுக்கு ஒருபோதும் அனுமதி தரக்கூடாது" என்றார்.