Election bannerElection banner
Published:Updated:

BARC முன்னாள் சி.இ.ஓ உடனான உரையாடல்; வெளியான 500 பக்க வாட்ஸ்அப் சாட்! - புதிய சிக்கலில் அர்னாப்

அர்னாப்
அர்னாப்

அர்னாப் கோஸ்வாமி தனது நிறுவனத்தின் வளர்ச்சிக்காக மத்திய அரசாங்கத்தின் உதவியை அதிகமாக எதிர்பார்த்து செயல்பட்டு வருவதாகவும், இது தொடர்பாக பிரதமர் அலுவலகத்தின் முக்கியப் புள்ளிகள் சிலரிடம் பேசியிருப்பதும் தெரியவந்திருக்கிறது.

அர்னாப் கோஸ்வாமியின் `ரிபப்ளிக் டி.வி’ டி.ஆர்.பி வழக்கில் சர்ச்சையானது அனைவரும் அறிந்ததே. தற்போது அர்னாப் கோஸ்வாமிக்கும், BARC நிறுவனத்தின் முன்னாள் சி.இ.ஓ-வான பார்த்தோ தாஸ் குப்தாவுக்கும் இடையே நடைபெற்ற வாட்ஸ்அப் உரையாடல் தொடர்பான 500 பக்கங்கள்கொண்ட ஆவணங்கள் இணையத்தில் கசிந்து பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றன. இதையடுத்து, நெட்டிசன்கள் அர்னாப் கோஸ்வாமியை கடுமையாக விமர்சித்துவருகின்றனர்.

`The Nation wants to know’- என்னும் வாக்கியத்தின் மூலம் சர்வேதேச ஊடகத்தில் அர்னாப் ஏற்படுத்திய தாக்கம் அளப்பரியது. `என்.டி.டிவி’, `டெலிகிராப்’, `டைம்ஸ் நவ்’ போன்ற செய்தி சேனல்களில் வேலை பார்த்தவர். இப்போது `ரிபப்ளிக் டி.வி’ என்னும் சொந்தமாக ஒரு செய்தி சேனலை நடத்திவருகிறார்.

BARC முன்னாள் சி.இ.ஓ உடனான உரையாடல்; வெளியான 500 பக்க வாட்ஸ்அப் சாட்! - புதிய சிக்கலில் அர்னாப்

மற்ற செய்தி ஊடகங்களில் வேலை பார்த்துக்கொண்டிருந்தபோதே அர்னாப் மீதான சர்ச்சைகள் பெருமளவில் வந்த நிலையில், அவர் ரிபப்ளிக் டி.வி தொடங்கியபோது, அர்னாப் சாட்சியங்களின்றி குற்றம்சுமத்துகிறார். மத்திய பா.ஜ.க அரசுக்குத் துணை நிற்கிறார் என்ற குற்றச்சாட்டுகள் அதிகப்படியாக எழுந்தன.

இந்தநிலையில்தான் அர்னாப் கோஸ்வாமி தனது ரிபப்ளிக் டி.வி-க்காக டி.ஆர்.பி மோசடியில் ஈடுபட்டிருப்பதாகப் புகார் எழுந்தது. ஆனால், அர்னாப் இதனை முற்றிலுமாக மறுத்தார். இந்த விவகாரம் ஊடக உலகில் பூதாகரமாக வெடித்தது. பின்னர், இந்தச் சர்ச்சையின் தொடர்ச்சியாக, ரிபப்ளிக் டி.வி-யின் சி.இ.ஓ.வான விகாஸ் கைதுசெய்யப்பட்டார்.

இந்நிலையில், தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதலின் கீழ் இயங்கிவரும் BARC (Broadcast Audience Research Council) நிறுவனத்தின் முன்னாள் சி.இ.ஓ-வான பார்த்தோ தாஸ் குப்தாவிடம் தனது சேனலுக்கான டி.ஆர்.பி முன்னேற்றம் குறித்துப் பேசிய 500 பக்கங்கள்கொண்ட வாட்ஸ்அப் உரையாடல்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கின்றன.

அதில், கோஸ்வாமி தனது நிறுவனத்தின் வளர்ச்சிக்காக மத்திய அரசாங்கத்தின் உதவியை அதிகமாக எதிர்பார்த்து செயல்பட்டு வருவதாகவும், இது தொடர்பாக பிரதமர் அலுவலகத்தின் முக்கியப்புள்ளிகள் சிலரிடம் பேசியிருப்பதும் தெரியவந்திருக்கிறது.

தொலைக்காட்சி பார்வையாளர்களை மதிப்பிட ட்ராய் புதிய சீர்த்திருத்தங்களை மேற்கொள்ளவிருப்பதாகவும், அவை ரிபப்ளிக் சேனலை பாதிக்கும் என்றும் தாஸ் குப்தா அர்னாபிடம் தெரிவித்ததாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. இதையடுத்து, அர்னாப்பின் செயலை நெட்டிசன்கள் பலரும் கடுமையாக விமர்சித்துவருகின்றனர்.

இந்தச் சூழலில் அர்னாபின் டி.ஆர்.பி மோசடி வழக்கை மும்பை உயர் நீதிமன்றம் வரும் ஜனவரி 29-ம் தேதிக்கு ஒத்திவைத்திருக்கிறது. அதுவரை, அர்னாப் கோஸ்வாமி கைதுசெய்யப்பட மாட்டார் என்றும் கூறப்படுகிறது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு