காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி ராகுல் காந்தி, `மோடி' சமூகம் குறித்து அவதூறாகப் பேசியதாக சூரத் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதைத் தொடர்ந்து நடந்த விசாரணையில், ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அதையடுத்து, உடனடியாக ராகுல் காந்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியும் பறிக்கப்பட்டது. இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துவருகின்றனர். அந்த வகையில், தேர்தல் வியூகர் பிரசாந்த் கிஷோர், ``நான் ஒரு சட்ட வல்லுநர் அல்ல. சட்டத்தின் செயல்பாட்டுக்கு உரிய மரியாதையளிக்கிறேன். ஆனால், ராகுல் காந்திக்கு வழங்கப்பட்ட தண்டனை மிகையானது. ஏனென்றால், அடிப்படையில் ஓர் அவதூறு வழக்குக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை அதிகமாக இருப்பதாகத் தோன்றுகிறது.

தேர்தல் சூடு பிடிக்கும்போது மக்கள் எல்லாவிதமான நிகழ்வுகளையும் அலசுவார்கள். இது முதல் நிகழ்வு அல்ல, கடைசி நிகழ்வாகவும் இருக்கப்போவதில்லை. எனவே, மத்தியில் ஆட்சியில் இருக்கும் அரசுக்கு, முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் ஒரு பிரபலமான வரியை நினைவூட்ட விரும்புகிறேன். `சிறிய இதயத்துடன் இருக்கும் யாரும் பெரியவர்களாக கருதப்பட மாட்டார்கள்' " எனத் தெரிவித்திருக்கிறார்.