Published:Updated:

பி.ஜே.பி-யின் ‘பி’ டீமா ஐபேக்? - குமுறும் தி.மு.க தொண்டர்கள்

பிரசாந்த் கிஷோர்
பிரீமியம் ஸ்டோரி
பிரசாந்த் கிஷோர்

தமிழகத்தில் திராவிடக் கட்சிகளை ஒழித்துக்கட்டும் நோக்கத்தில் 2016-ம் ஆண்டிலேயே ‘ஆபரேஷன் திராவிடா’ தொடங்கப்பட்டுவிட்டது

பி.ஜே.பி-யின் ‘பி’ டீமா ஐபேக்? - குமுறும் தி.மு.க தொண்டர்கள்

தமிழகத்தில் திராவிடக் கட்சிகளை ஒழித்துக்கட்டும் நோக்கத்தில் 2016-ம் ஆண்டிலேயே ‘ஆபரேஷன் திராவிடா’ தொடங்கப்பட்டுவிட்டது

Published:Updated:
பிரசாந்த் கிஷோர்
பிரீமியம் ஸ்டோரி
பிரசாந்த் கிஷோர்

“புதுச்சேரிக்கு ஏற்பட்ட நிலைதான் நாளை தமிழகத்துக்கும்!” என உற்சாகமாகச் சொல்லத் தொடங்கிவிட்டனர் பி.ஜே.பி-யினர். ‘‘அதற்கு அடித்தளம் அமைத்துக்கொடுக்கும் வகையில்தான் ஐபேக் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறது. பி.ஜே.பி-யின் ‘பி’ டீம்தான் ஐபேக்’’ என்று கதறுகிறார்கள் தி.மு.க உடன்பிறப்புகள்!

ஐபேக் பற்றி, தோண்டத் தோண்ட பூதங்களாகக் கிளம்பிக்கொண்டிருக்கின்றன. ‘ஐபேக் வந்தாரு... அட்ராசிட்டி பண்றாரு!’ என்ற தலைப்பில் (28.02.2021 தேதியிட்ட இதழில்) கவர் ஸ்டோரி வெளியிட்டிருந்தோம். கட்டுரையை வாசித்துவிட்டுத் தொடர்ச்சியாக நமக்கு அழைத்த தி.மு.க தொண்டர்கள் மற்றும் முக்கியப் புள்ளிகளின் ஆதங்கங்களையும் கோபங்களையும் அப்படியே பதிவுசெய்திருக்கிறோம்...

ஐபேக் வந்த நோக்கம்!

``தி.மு.க-வுக்குத் தேர்தல் பணியாற்ற 350 கோடி ரூபாய் கொடுத்து பிரசாந்த் கிஷோருடன் ஒப்பந்தம் போட்டார் தி.மு.க தலைவர் ஸ்டாலின். டேட்டா அனாலிசிஸ், மாநிலம் தழுவிய மேக்ரோ அனாலிசிஸ், தொகுதிவாரியான மைக்ரோ அனாலிசிஸ், பர்சனாலிட்டி டெவலப்மென்ட், ஸ்ட்ராட்டஜி உள்ளிட்ட பணிகளுக்காக மட்டுமே ஐபேக் ஒப்பந்தமானது. ஆனால், வந்ததும் வராததுமாக எடுத்த எடுப்பிலேயே தி.மு.க-வின் மாவட்டச் செயலாளர்கள்மீது அதிகாரத் தோரணையைச் செலுத்திச் சீண்டியது. அதிரடிக்குப் பெயர்போன மறைந்த மா.செ ஜெ.அன்பழகன் உடனே பொங்கியெழுந்தார். அப்போதே ஸ்டாலின் ஐபேக்கைக் கண்டிக்காமல் விட்டதுதான் மிகப்பெரிய தவறு என்பதை இப்போது உணர்ந்திருக்கிறார். ‘அன்னிக்கே அன்பு சொன்னான். நாமதான் விட்டுட்டோம்’ என்று துரைமுருகன், கே.என்.நேரு உள்ளிட்ட சீனியர்களிடம் இப்போது வெளிப்படையாகவே சொல்லியிருக்கிறார் ஸ்டாலின்.

ஆபரேஷன் திராவிடா!

மத்தியில் ஆளும் பி.ஜே.பி., இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும் தனது ஆட்சியைக் கொண்டுவர விதவிதமான ஸ்ட்ராட்டஜிகளோடு பல ஆபரேஷன்களை மேற்கொண்டுவருகிறது. தமிழகத்தில் திராவிடக் கட்சிகளை ஒழித்துக்கட்டும் நோக்கத்தில் 2016-ம் ஆண்டிலேயே ‘ஆபரேஷன் திராவிடா’ தொடங்கப்பட்டுவிட்டது. கமல்ஹாசன், மு.க.அழகிரி, சசிகலா, டி.டி.வி.தினகரன், எஸ்.ஏ.சி., அர்ஜுனமூர்த்தி, சரத்குமார் என ஒவ்வொருவரும் தி.மு.க - அ.தி.மு.க-வுக்கு மாற்றாகத் தனித்துக் களம் காண்பதன் பின்னணியிலும் இந்த ஆபரேஷன் திராவிடாவுக்குப் பங்கு உண்டு. இவர்களால் பிரிக்கப்படும் வாக்குகள் இரு திராவிடக் கட்சிகளுக்குமே சிக்கலை உருவாக்கும். அதைவைத்து புதுச்சேரிபோல ‘குதிரைப் பேர’த்தின் மூலம் திராவிடக் கட்சிகளிடமிருந்து ஆட்சியைத் தட்டிப் பறித்துவிடலாம் என்கிற திட்டமே இந்த ஆபரேஷனின் முதன்மையான அம்சம். ‘இதற்குப் பழைய பாசத்தில் பி.கே-வும் மறைமுகமாக உதவுகிறாரோ’ என்று இப்போது எண்ணத் தோன்றுகிறது.

பட்டியல் குளறுபடி!

ஐபேக் கொடுத்திருக்கும் உத்தேச வேட்பாளர் பட்டியலில் மிகப்பெரிய குளறுபடிகள் நடந்திருக்கின்றன. வெற்றிக்கான வியூகங்களை வகுக்கிறோம் என்ற பெயரில் ‘ஐவர் பட்டியல்’, ‘மூவர் பட்டியல்’ என வேட்பாளர் தேர்விலும் நுழைந்து அட்ராசிட்டியை ஆரம்பித்தபோது, தங்களின் அதிகாரத்தில் தலையிடுவதாக மாவட்டச் செயலாளர்கள் கொதிப்படைந்தார்கள். ஆனால், ஐபேக்கின் அதிகாரத்தோடு மோத முடியாமல் பின்வாங்கி, ஐபேக் ஊழியர்களை ‘கவர்’ கொடுத்து கவர் செய்யத் தொடங்கினார்கள். அதன் விளைவு, நிலைமை மோசமாகிக்கொண்டே போகிறது.

வெற்றி நிச்சயம் என்கிற மனப்பான்மையில், ஏராளமான கட்சி நிர்வாகிகள் இந்தமுறை போட்டியிட முட்டிமோதுகிறார்கள். அவர்களிடமிருந்து ‘பெற வேண்டியதை’ப் பெற்றுக்கொண்டு சீனியாரிட்டி தகுதி, களநிலவரம், செல்வாக்கு என எதையுமே கணக்கில்கொள்ளாமல் தங்களை ‘கவனித்த’வர்களை மட்டும் பட்டியலில் இணைத்து, தலைமைக்குக் கொடுத்துவருகிறார்கள்.

பிரசாந்த் கிஷோர்
பிரசாந்த் கிஷோர்

சமீபத்திய சம்பவம்!

சமீபத்தில் நடந்த சம்பவம் ஒன்று... வடக்கு மண்டலத்தைச் சேர்ந்த மா.செ-வும் முன்னாள் அமைச்சருமான ஒருவர், புதுக்கோட்டை மாவட்டத்தில் மூன்று தொகுதிகளுக்கு வேட்பாளர்களை இணைக்கப் பேரம் பேசியிருக்கிறார். அந்த மாவட்டத்தில் மணல் தொழிலில் கொடிகட்டிப் பறக்கும் ஒருவர்தான், மேற்குறிப்பிட்ட மா.செ-விடம் டீல் பேசியவர். மூன்று தொகுதிகளில் ஒன்றைத் தனக்கும், மீதி இரண்டை தான் சொல்பவர்களுக்கும் கொடுக்க வேண்டும் என்று 150 சி வரை பேரம் பேசியிருக்கிறார். ஆரம்பத்தில் அதிர்ந்த அந்த வட மாவட்ட மா.செ., பின்னர் ஓ.கே சொல்லி, புதுக்கோட்டை நிர்வாகிகளைப் பேசிச் சரிக்கட்டியிருக்கிறார். அதுமட்டுமன்றி, ஐபேக் ஊழியர்களையும் கரெக்ட் செய்து மூன்று தொகுதிகளுக்குமான புதிய வேட்பாளர் பட்டியலைக் கொடுக்க, ‘பணம் கிடைத்தால் போதும்’ என ஐபேக் ஊழியர்களும் லிஸ்ட்டை மாற்றி, தலைமைக்கு அனுப்பிவிட்டார்கள்.

இதேபோல், தென்மாவட்டம் ஒன்றில் கோலோச்சும் இனிஷியலையே பெயராகக்கொண்ட ஒரு மூத்த மா.செ., பி.ஜே.பி-யிலிருக்கும் தன் உறவினருக்காக, தன் மாவட்டத்திலுள்ள இரு தொகுதிகளுக்கு கட்சிக்குத் தொடர்பே இல்லாத இருவரை ரெகமெண்ட் செய்திருக்கிறார். அதில் ஒருவரின் தங்கை, ராஜ்நாத் சிங் அமைச்சரவையில் வேலை பார்த்தவர். இன்னொருவர், மோசடிப் புகாரில் சிக்கியவர்.

தி.மு.க-வுக்கு எதிரான மறைமுகப் போர்!

தமிழகம் முழுவதும் இத்தகையவர்கள்தான் ஐபேக்கின் ‘உத்தேச வேட்பாளர்கள் பட்டியலில்’ அதிகம் இடம்பெற்றிருக்கிறார்கள். இப்படிப்பட்டவர்களுக்குத் தலைமை சீட் கொடுத்தால் அவ்வளவுதான். ஒருவேளை தொங்கு சட்டமன்றம் அமைந்தால், இப்படியான நபர்களுக்கு பி.ஜே.பி அள்ளிக் கொடுத்து தங்கள் பக்கம் இழுத்துக்கொள்ளும். சுமார் 10 ஆண்டுகள் காத்திருப்புக்குப் பிறகு, ஆட்சி அமைக்க வாய்ப்பிருக்கும் நேரத்தில் எம்.எல்.ஏ-க்கள் கட்சி மாறினால் பெரிய சிக்கல் ஏற்படும். முதல்வராவதை இதுவரை கனவாகவே கண்டுவரும் ஸ்டாலினுக்கு, அதை நனவாக்க இதுதான் சரியான நேரம். இந்த நேரத்தில் ஆட்சி கையைவிட்டுப் போனால், ரொம்பவும் நொந்துபோய்விடுவார். பணத்துக்கு ஆசைப்பட்டு சில மாவட்டச் செயலாளர்களும், ஐபேக்கும் ஸ்டாலினுக்கு எதிராக நடத்தும் மறைமுகப் போர் இது!

‘ஆபரேஷன் திராவிடா’ மூலம் தி.மு.க-வை காலிசெய்ய நினைக்கும் பி.ஜே.பி-க்கு, உள்ளே இருந்துகொண்டே ஐபேக் சப்போர்ட் செய்வது முதுகில் குத்துவது போன்றதுதான். ஐபேக்கூட பணத்துக்காகச் செய்கிறது. ஆனால், கட்சியில் இருந்துகொண்டே மா.செ-க்களும் இதற்குத் துணைபோவதுதான் மன்னிக்க முடியாத குற்றம். எனவே, கட்சித் தலைமை ஐபேக் விவகாரத்தில் இன்னும் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டியது அவசியம்’’ என்று பெருமூச்சுவிட்டார்கள்.

‘இனியாவது ஸ்டாலின் விழித்துக்கொள்ள வேண்டும்’ என்பதே தி.மு.க தொண்டர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது!