Published:Updated:

பீகார்: நிதிஷை வாழ்த்திய பிரசாந்த் கிஷோர், தேஜஸ்வி... கடுப்பான ஜே.டி.யு ஆதரவாளர்கள் - காரணம் என்ன?

சிராக் பாஸ்வான், பிரசாந்த் கிஷோர், தேஜஸ்வி யாதவ்
சிராக் பாஸ்வான், பிரசாந்த் கிஷோர், தேஜஸ்வி யாதவ்

2018 செப்டம்பரில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் இணைந்த பிரசாந்த் கிஷோருக்கு அந்தக் கட்சியின் துணைத் தலைவர் பதவி வழங்கப்பட்டது. 2020 ஜனவரி மாதத்தில்...

பீகாரின் முதல்வராக 7-வது முறையாக நேற்று பதவியேற்றுக்கொண்டார் ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ் குமார். தொடர்ச்சியாக நான்கு முறை முதல்வராகப் பதவியேற்ற அவருக்குப் பலரும் வாழ்த்து தெரிவித்தனர். அவர்களில், அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர், ராஷ்டிரிய ஜனதா தளத்தைச் சேர்ந்த தேஜஸ்வி யாதவ், லோக் ஜனசக்தி கட்சித் தலைவர் சிராக் பாஸ்வான் ஆகியோர் நிதிஷ் குமாரை வாழ்த்திப் பதிவிட்ட ட்வீட்கள் ஐக்கிய ஜனதா தள ஆதரவாளர்களைக் கடுப்பேற்றியிருக்கிறது.

நிதிஷ் குமார்
நிதிஷ் குமார்
இந்த மூவரும் நிதிஷ் ஆதரவாளர்களைக் கடுப்பேற்றும்படி, அப்படி என்ன ட்வீட் செய்தார்கள்? வாருங்கள் பார்க்கலாம்!

பிரசாந்த் கிஷோர்

இந்தியாவில் உள்ள பல்வேறு கட்சிகளுக்கு அரசியல் வியூக வல்லுநராகப் பணியாற்றிவரும் பிரசாந்த் கிஷோர் தனது ட்விட்டர் பக்கத்தில்,

பா.ஜ.க-வால் நியமனம் செய்யப்பட்டு முதல்வராகப் பதவியேற்றிருக்கும் நிதிஷ் குமாருக்கு வாழ்த்துகள்.
பிரசாந்த் கிஷோர், அரசியல் ஆலோசகர்

மேலும் அதே பதிவில், ``அரசியல்ரீதியாக அதிகம் குறைகூறப்பட்ட, சோர்வடைந்த ஒரு தலைவருடன் பீகார் மாநிலம் இன்னும் சில ஆண்டுகள் மந்தமான ஆட்சியை எதிர்கொள்ளத் தயாராக வேண்டும்'' என்றும் பதிவிட்டிருந்தார் பிரசாந்த் கிஷோர்.

நிதிஷ் - பிரசாந்த் கிஷோர்
நிதிஷ் - பிரசாந்த் கிஷோர்
twitter
தி.மு.க-வுக்கு பணியாற்ற பிரசாந்த் கிஷோர் அணிக்கு மாதம் எவ்வளவு? பின்னணி விவரங்கள்

2015-ம் ஆண்டு பீகார் சட்டமன்றத் தேர்தலில், நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு வியூகங்களை வகுத்துக் கொடுத்து அரசியல் ஆலோசகராகச் செயல்பட்டவர் பிரசாந்த் கிஷோர். 2018 செப்டம்பரில், ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் இணைந்த பிரசாந்த் கிஷோருக்கு அந்தக் கட்சியின் துணைத் தலைவர் பதவி வழங்கப்பட்டது. 2020 ஜனவரி மாதத்தில் கட்சித் தலைவர் நிதிஷ் குமார் குறித்துத் தவறாகப் பேசிவிட்டார் என்று கூறி ஐக்கிய ஜனதா தளத்திலிருந்து பிரசாந்த் நீக்கப்பட்டார்.

தேஜஸ்வி யாதவ்

பீகாரின் எதிர்க்கட்சித் தலைவரும், ராஷ்டிரிய ஜனதா தளத்தைச் சேர்ந்தவருமான தேஜஸ்வி யாதவ் தனது ட்விட்டர் பக்கத்தில்,

முதலமைச்சராக `நியமிக்கப்பட்டுள்ள' மரியாதைக்குரிய நிதிஷ் குமார் ஜி-க்கு வாழ்த்துகள்!
தேஜஸ்வி யாதவ், பீகார் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர்

மேலும் அந்தப் பதிவில், ``அவருடைய லட்சியங்களை நிறைவேற்றிக்கொள்ளாமல், பொதுமக்களுடைய தேவைகளைப் பூர்த்தி செய்வார் என்று நம்புகிறேன். மேலும், தேசிய ஜனநாயகக் கூட்டணி உறுதியளித்த 19 லட்சம் வேலைவாய்ப்புகள், சுகாதாரம், வருமானம் ஈட்டுதல், நீர்ப்பாசனம் ஆகியவற்றுக்கு முன்னுரிமை வழங்குவார் என்றும் நம்புகிறேன்'' என்று கூறியிருக்கிறார் தேஜஸ்வி.

நிதிஷ் குமார் - தேஜஸ்வி
நிதிஷ் குமார் - தேஜஸ்வி
பீகார்: ஹில்சாவில் 12 வாக்குகள்;  ராம்காரில் 189 வாக்குகள்! - தேர்தல் முடிவுகளில் குளறுபடி நடந்ததா?

நடந்து முடிந்த 2020 பீகார் சட்டமன்றத் தேர்தலில், தேசிய ஜனநாயகக் கூட்டணியை எதிர்த்து, காங்கிரஸோடு இணைந்து மெகா கூட்டணியில் போட்டியிட்ட தேஜஸ்வி-யின் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சிதான் 75 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக விளங்குகிறது. கடந்த 2015 சட்டமன்றத் தேர்தலில், நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளத்தோடும், காங்கிரஸோடும் கூட்டணி அமைத்துத் தேர்தலைச் சந்தித்து 80 இடங்களைப் பெற்றிருந்தது. நிதிஷ் குமார் அமைச்சரவையில் துணை முதல்வராகவும் பணியாற்றினார் தேஜஸ்வி. 2017-ம் ஆண்டு தேஜஸ்விமீது ஊழல் குற்றம் உள்ளதாகச் சொல்லி காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம் கூட்டணியிலிருந்து விலகிய ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ.க-வோடு இணைந்து ஆட்சியமைத்தது. அதற்குப் பிறகு, அரசியல் களத்தில் ஐக்கிய ஜனதா தளத்தை எதிர்த்து பணியாற்றிக்கொண்டிருக்கிறது ராஷ்டிரிய ஜனதா தளம்.

சிராக் பாஸ்வான்!

மறைந்த ராம் விலாஸ் பாஸ்வானின் மகனும், லோக் ஜன சக்தி கட்சியின் தலைவருமான சிராக் பாஸ்வான் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்த வாழ்த்து செய்தியில், ``பீகாரின் முதல்வராக மீண்டும் பதவியேற்றதற்கு வாழ்த்துகள் நிதிஷ் குமார். இந்த அரசு, அதன் பதவிக் காலத்தை நிறைவு செய்யும் என நம்புகிறேன். நீங்கள் தொடர்ந்து தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதல்வராக இருப்பீர்கள்'' என்று பதிவிட்டிருந்தார்.

அடுத்த பதிவில், ``4 லட்சம் பீகாரிகளால் உருவாக்கப்பட்ட எல்.ஜே.பி கட்சியின் தேர்தல் வாக்குறுதிகளின் நகலை அனுப்பியிருக்கிறேன். அதிலிருக்கும் எந்தெந்த வேலைகளை உங்களால் செய்ய முடியுமோ அவற்றைச் செய்து முடியுங்கள்'' என்று பாஸ்வான் பதிவிட்டிருந்தார். மேலும், அந்தப் பதிவின் இறுதியில்,

முதலமைச்சராகப் பதவியேற்றதற்கு மீண்டும் எனது வாழ்த்துகள். உங்களை முதலமைச்சர் ஆக்கிய பாரதிய ஜனதா கட்சிக்கும் வாழ்த்துகள்.
சிராக் பஸ்வான், எல்ஜேபி தலைவர்
நிதீஷ்குமார் , சிராக் பாஸ்வான்
நிதீஷ்குமார் , சிராக் பாஸ்வான்
பீகார் தேர்தல்: சிராக் பாஸ்வான் மூலம் நிதிஷ் குமார் கட்சியை காலி செய்ததா பா.ஜ.க?

கடந்த 2015 சட்டமன்றத் தேர்தலில், லோக் ஜனசக்தி கட்சி பா.ஜ.க-வுடன் இணைந்து தேசிய ஜனநாயகக் கூட்டணியில் போட்டியிட்டது. இந்தத் தேர்தலில், தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து வெளியேறித் தனித்துப் போட்டியிட்டது. ``எப்போதுமே நிதிஷ் குமாரை வீழ்த்துவதுதான் லோக் ஜன சக்தியின் குறிக்கோள்'' என்று தொடர்ச்சியாகப் பேசிவந்தார் சிராக் பாஸ்வான். நிதிஷ் குமாரை எதிர்த்தாலும், அவருடன் கூட்டணியிலிருக்கும் பா.ஜ.க-வுக்கு ஆதரவான கருத்துகளை சிராக் பேசிவருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிரசாந்த் கிஷோர், தேஜஸ்வி, சிராக் மட்டுமல்லாமல் சமூக வலைதளங்களிலுள்ள பீகார் நெட்டிசன்கள் பலரும், `பா.ஜ.க-வின் தயவில் முதல்வராகியிருக்கும் நிதிஷுக்கு வாழ்த்துகள்' என்றும் `எங்கள் முதல்வர் தேர்ந்தெடுக்கப்பட்டவர் அல்ல... பா.ஜ.க-வால் நியமிக்கப்பட்டவர்' என்றும் பதிவுகளைத் தட்டி ஐக்கிய ஜனதா தள ஆதரவாளர்களைக் கடுப்பேற்றிவருகின்றனர்.

மோடி - நிதிஷ்
மோடி - நிதிஷ்
பீகார்: 2 துணை முதல்வர்கள்... பா.ஜ.க-வின் மேற்குவங்க டார்கெட்  - 5 ஆண்டுகள் நீடிப்பாரா நிதிஷ்?
`இதுக்கு நீங்க வாழ்த்து சொல்லாமலே இருக்கலாம்' என்று நிதிஷ் ஆதரவாளர்கள் புலம்பிக்கொண்டிருக்கிறார்களாம்.
அடுத்த கட்டுரைக்கு