Published:Updated:

`பிரிக்கப்படும் மாவட்டங்கள் பின்னணியில் பிரசாந்த் கிஷோர்' - தி.மு.க-வில் நடக்கும் உள்கட்சி அரசியல்!

தி.மு.க தலைமை அலுவலகம்-அண்ணா அறிவாலயம்
தி.மு.க தலைமை அலுவலகம்-அண்ணா அறிவாலயம்

"தி.மு.க-வில் நடக்கும் இந்த புதிய மாற்றங்களும், புதிய பதவிகளும், கட்சிக்குப் புத்துணர்ச்சியைக் கொடுத்தால் மகிழ்ச்சியே!" என்கிறார்கள் கழக உடன்பிறப்புகள்.

சட்டமன்றத் தேர்தலுக்கு தி.மு.க தரப்பு சுறுசுறுப்புடன் தயாராகிவருகிறது. அந்தக் கட்சியின் மாவட்டங்களைப் பிரித்து அறிவாலயத்திலிருந்து அடுத்தடுத்து வரும் அறிவிப்புகளைக் கண்டு ஆடிப் போயுள்ளனர் உடன்பிறப்புகள்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

தி.மு.க தலைமைக் கழகத்தின் சார்பில் இன்று அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், "கழகத்தின் நிர்வாக வளர்ச்சிக்காகவும், கழகத்தின் பணிகள் செவ்வனவே நடைபெற்றிடவும் விழுப்புரம் தெற்கு மாவட்டம் (கள்ளக்குறிச்சி மாவட்டம்), கள்ளக்குறிச்சி தெற்கு, கள்ளக்குறிச்சி வடக்கு என்று பிரிக்கப்படுகிறது. புதிய மாவட்டங்களுக்கான பொறுப்பாளர் மற்றும் பொறுப்புக்குழுவும் அறிவிக்கப்படுகிறது" என்று வெளியாகியுள்ளது.

அதன்படி கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்டத்தின் பொறுப்பாளராக உதயசூரியனும், கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்டப் பொறுப்பாளராக வசந்தம் கார்த்திகேயனும் நியமிக்கப்பட்டுள்ளார்கள். மூன்று தினங்களுக்கு முன்பாக கோவை மாவட்ட தி.மு.க, நிர்வாக வசதிக்காக ஐந்து மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டது. இந்த நிலையில் அடுத்த சில நாள்களில் கள்ளக்குறிச்சி மாவட்டம் பிரிக்கப்பட்டுள்ளது. இதே நிலை அடுத்தடுத்த மாவட்டங்களிலும் தொடரும் என்கிறார்கள் அறிவாலயத்துக்கு நெருக்கமானவர்கள்.

தி.மு,க அறிவிப்பு
தி.மு,க அறிவிப்பு

“தி.மு.கவின் தேர்தல் பிரச்சார ஆலோசகராக பிரசாந்த் கிஷோர் நியமிக்கப்பட்ட பிறகு அவரது ஆலோசனையில் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கட்சியின் தலைமை 'ஐபேக் நிறுவனத்தைத் தேர்தல் பணிக்கு மட்டுமே பயன்படுத்துகிறோம்' என்று சொல்லியிருந்தாலும் அந்த நிறுவனம் கட்சியில் செய்யவேண்டிய மாற்றங்களையும் அப்டேட் செய்துவருகிறது. அவர்கள் சொன்ன முக்கிய மாற்றங்களில் ஒன்று கட்சிக்குள் இளம் ரத்தம் பாயவேண்டும் என்பது. தி.மு.க-வின் பல மாவட்டச்செயலாளர்கள் அறுபது வயதைக் கடந்தவர்கள். பல ஆண்டுகளாக மாவட்டச் செயலாளர்களாகக் கோலோச்சி வருபவர்கள்.

அதேநேரம் உதயநிதி தரப்பு கட்சிக்குள் என்ட்ரி கொடுத்தபிறகு தனது ஆதரவாளர்களையும் மாவட்ட பொறுப்புக்குக் கொண்டுவர விரும்பினார்கள். ஐபேக் நிறுவனம் அதற்குத் தோதாகக் கட்சிக்குள் இளம் ரத்தம் பாய வேண்டும் என்று சொன்னதை தங்களுக்குச் சாதகமாக எடுத்துக் கொண்டுவிட்டார்கள். மற்றொருபுறம் அ.தி.மு.க தரப்பில் மாவட்டங்களைப் பிரித்து அதிகமான நிர்வாகிகளுக்கு பதவிகளைக் கொடுத்துள்ளனர். தி.மு.க-வில் ஒரே மாவட்டச் செயலாளர் பல ஆண்டுகளாக இருப்பதால் அவருக்குக் கீழ் உள்ள நிர்வாகிகள் அடுத்த பதவிக்கு வரமுடியாத நிலை இருந்தது.

இதற்கு எல்லாம் தீர்வு தேடியபோது அ.தி.மு,.க பாணியில் மாவட்டங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கலாம் என்று ஐபேக் ஆலோசனை கொடுத்துள்ளது. இதற்குக் கட்சியின் சீனியர்களும் ஓகே சொல்லிவிட்டார்கள். இதன்பிறகு தி.மு.க தலைவர் ஸ்டாலின் முதலில் ஒவ்வொரு மாவட்டத்தையும் கள ஆய்வு செய்து அதற்குப் பிறகு மாவட்டங்களைப் பிரிக்கலாம் என்று முடிவு செய்தார். இந்த பொறுப்பை தி.மு.க-வின் முதன்மைச் செயலாளர் நேரு வசம் ஒப்படைத்தார்.

கொரோனா நேரத்தில் அனைவரையும் நேரில் சந்தித்துப் பேசமுடியாத நிலை இருப்பதால், ஒவ்வொரு மாவட்டமாக ஆன்லைன் மூலம் ஸ்டாலினும் சந்திப்புகளை நடத்தினார். அவர் சந்திப்பு நடத்திய பிறகு அந்த மாவட்டங்களுக்கு நேருவை அனுப்பி மாவட்ட நிர்வாகிகளிடம் ஆலோசனை செய்யச் சொல்லியிருக்கிறார். அதன்படி கன்னியாகுமரி, திருநெல்வேலி, கோயம்புத்துார், கள்ளக்குறிச்சி எனப் பல மாவட்டங்களுக்குத் தொடர்ந்து சுற்றுப்பயணம் செய்துவருகிறார்.

கே.என்.நேரு
கே.என்.நேரு

ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள நிர்வாகிகளிடம் அந்த மாவட்டத்தை எத்தனையாக பிரிக்கலாம் யாரைப் பொறுப்பாளராகப் போடலாம் என்று முதலில் கருத்து கேட்கிறார். தி.மு.க தலைமையின் யோசனை இரண்டு தொகுதிக்கு ஒரு மாவட்டச்செயலாளர் என்று முடிவுசெய்துள்ளார்கள். அந்த அடிப்படையில் எந்தெந்த தொகுதிகளை எந்த மாவட்டத்துடன் இணைக்கலாம் என்பதை நேரு கலந்தாய்வு செய்து தலைமைக்கு அனுப்புகிறார். மேலும் அந்த மாவட்டத்துக்கு யாரைப் பொறுப்பாளராக நியமிக்கலாம் என்றும் கருத்துக் கேட்டுவருகிறார்.

`எதனால் விட்டேன்னு சொல்லவா?!' - ஸ்டாலினைக் கொதிக்கவைத்த கே.கே.நகர் தனசேகரன்

அதன் அடிப்படையில் ஒரு பட்டியலைத் தயார் செய்து தலைமைக்கு அளிக்கிறார். ஸ்டாலின் அந்தப் பட்டியலை மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்து புதிய மாவட்டத்துக்கான பொறுப்பாளர்களை அறிவிக்கிறார். இப்போது பொதுச்செயலாளர் அதிகாரத்தையும் ஸ்டாலினே வைத்திருப்பதால் யாரையும் எந்தப் பதவிக்கும் எளிதாக நியமித்து அறிவிப்பு வெளியிட ஸ்டாலினால் முடிகிறது. ஆனால் ஸ்டாலினுக்கு நெருக்கமான ஏ.வ.வேலு, ஆ.ராசா உள்ளிட்டவர்கள் இந்த மாவட்டங்களுக்கான பொறுப்பாளர்கள் நியமனத்தில் தங்கள் ஆதரவாளர்களும் இடம்பெற விரும்புகிறார்கள்.

கடைசியாகக் கோவை மாவட்டத்தினை ஐந்தாகப் பிரித்தபோது அதில் ஏ.வ.வேலுவின் ஆதரவாளர் ஒருவரும், ஆ.ராசாவின் ஆதரவாளர் ஒருவரும் நியமிக்கப்பட்டுள்ளார்கள். அதே போல் கள்ளக்குறிச்சி மாவட்டம் ஏற்கனவே விழுப்புரம் மாவட்டத்தில் இருந்தது. அந்த மாவட்டத்தைச் சேர்ந்த அங்கயற்கண்ணி மாவட்டச் செயலாளர் பதவியலிருந்து விடுவிக்கப்பட்டு மகளிரணி மாநிலத் துணைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இப்போது அறிவிக்கப்பட்ட இருவருமே ஒரு காலத்தில் பொன்முடிக்கு நெருக்கமானவர்களாக இருந்தவர்கள். கடந்த வாரம் கள்ளக்குறிச்சியில் நேரு ஆய்வு முடித்த பிறகு இந்த மாவட்டத்துக்கான பொறுப்பாளர்கள் பட்டியலைத் தலைமைக்கு அளித்துள்ளார்.

 எ.வ.வேலு, பொன்முடி, ஆ.ராசா,
எ.வ.வேலு, பொன்முடி, ஆ.ராசா,

அந்தப் பட்டியலை ஏ.வ.வேலு, பொன்முடி உள்ளிட்ட சில மூத்த நிர்வாகிகளிடம் கேட்டு ஒப்புதல் பெற்று இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார்கள். இதே போல் இன்னும் சில தினங்களில் புதிய மாவட்டங்களைப் பிரித்தும் ஏற்கனவே குளறுபடியில் உள்ள மாவட்டங்களின் நிர்வாகிகளை மாற்றியும் அறிவிப்பு வரப்போகிறது என்கிறார்கள். இந்த மாற்றங்களை ஐபேக் நிறுவனமும் ஒப்புதல் செய்த பிறகே அறிவிப்பாக வெளிவருகிறது. எனவே பல நிர்வாகிகள் ஐபேக் தரப்புடன் தொடர்வை ஏற்படுத்தி தங்களுக்குப் பதவி வாங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்கள்.

“புதிய மாற்றங்களும், புதிய பதவிகளும், கட்சிக்குப் புத்துணர்ச்சியைக் கொடுத்தால் மகிழ்ச்சியே!" என்கிறார்கள் கழக உடன்பிறப்புகள்.

அடுத்த கட்டுரைக்கு