பீகார், குஜராத், ஆந்திரா, தமிழ்நாடு, மேற்கு வங்காளம், டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பல்வேறு கட்சிகளுக்காக பணியாற்றிவர் பிரசாந்த் கிஷோர். பிரசாந்த் கிஷோர் காங்கிரஸில் இணையப்போகிறார் எனக் கூறப்பட்டு வந்த நிலையில் அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, `காங்கிரஸுக்கு என்னைவிட, கட்சித் தலைமையே முக்கியம்' எனக் கூறி, காங்கிரஸின் பேச்சுவார்த்தையிலிருந்து விலகினார்.

இந்தநிலையில் வைஷாலி மாவட்டத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பிரசாந்த் கிஷோர், `` நான் 2011 முதல் 2021 வரை 11 தேர்தல்களில் பணியாற்றி இருக்கிறேன். 2017-ம் ஆண்டு நடந்த உத்தரபிரதேச சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்துவிட்டது. முதல் முறையாக என்னுடைய கணிப்பு தவறிவிட்டது. இது என்னுடைய சாதனைகளை முறியடித்திருக்கிறது. எதிர்காலத்தில் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து பணியாற்ற மாட்டேன் என்று முடிவு செய்துள்ளேன்'' என்றார்.
2024 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலுக்காக காங்கிரஸுடன் இணைந்து பணியாற்ற சோனியா காந்தி அழைப்பு விடுத்தபோது, பிரசாந்த் கிஷோர் அதை நிராகரித்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
