Published:Updated:

பழைய பகைக்கு ஆடுகளம் அமைக்கப்போகும் தமிழக தேர்தல்!

கிஷோர் Vs சுனில்

பிரீமியம் ஸ்டோரி
அடுத்த சட்டமன்றத் தேர்தல், அ.தி.மு.க - தி.மு.க ஆகிய இரு கட்சிகளுக்கிடையே நடக்கும் போட்டியாக மட்டும் இருக்காது... தேர்தல் வியூக வல்லுநர்களான சுனில் - பிரஷாந்த் கிஷோர் மோதல் களமாகவும் இருக்கும் எனப் பரபரக்கிறது தமிழக அரசியல் வட்டாரம்.

2014-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் சுனிலும் பிரஷாந்த் கிஷோரும் பா.ஜ.க-வுக்கு தேர்தல் வியூகம் வகுத்துப் பணியாற்றினார்கள். பா.ஜ.க ஆட்சிக்கு வந்த பிறகு, பிரஷாந்த் கிஷோருக்கும் பா.ஜ.க-வுக்கும் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டன. பா.ஜ.க-வுக்குப் பணியாற்றுவதிலிருந்து விலகி, ஐபேக் நிறுவனத்தை ஆரம்பித்தார் கிஷோர். பா.ஜ.க-வுக்கு தொடர்ந்து பணியாற்றிவந்த சுனிலை, சபரீசன் மூலமாக தி.மு.க-வுக்கு அழைத்தனர். ஓ.எம்.ஜி என்ற பெயரில் குழுவை உருவாக்கி, அதன்மூலம் தி.மு.க-வுக்குப் பணியாற்றத் தொடங்கினார் சுனில்.

இந்த நிலையில், ஸ்டாலினின் குடும்ப உறுப்பினர் ஒருவர் பிரஷாந்த் கிஷோரை தி.மு.க-வுக்குக் கொண்டுவருவதற்கான வேலைகளைத் தொடங்கினார். இடைப்பட்ட ஐந்தாண்டுகளாக தி.மு.க-வின் மாஸ்டர் மைண்டாக இருந்த சுனிலால், இதை ஏற்றக்கொள்ள முடியவில்லை. இதனால் ஏற்பட்ட மன உளைச்சலைத் தொடர்ந்து, 2019, நவம்பர் மாதம் தி.மு.க-வுக்குப் பணியாற்று வதிலிருந்து வெளியேறினார் சுனில். இதையடுத்து, சென்னை அண்ணாநகரில் தனி அலுவலகம் அமைத்து தி.மு.க-வுக்கான வேலைகளைச் செய்துவருகிறது ஐபேக் நிறுவனம்.

பழைய பகைக்கு ஆடுகளம் அமைக்கப்போகும் தமிழக தேர்தல்!

தமிழகத்தில் தி.மு.க-வுக்குப் பணியாற்றும் முன்பாக நாடாளுமன்றத் தேர்தல் தோல்வியால் துவண்டு கிடந்த அ.தி.மு.க மீதுதான் பிரஷாந்த் கிஷோரின் கவனம் இருந்ததாகவும் ஒரு தகவல் உண்டு. இடையில், மக்கள் நீதி மய்யம் பக்கம் சென்று அங்கும் சில பணிகளைச் செய்ய ஆரம்பித்தவர், திடீரென தி.மு.க-வுக்குத் தாவினார். ஐபேக் நிறுவனத்தில் இப்போது 200-க்கும் மேற்பட்டோர் தி.மு.க-வுக்காகப் பணியாற்ற களமிறக்கப் பட்டுள்ளனர். கொரோனா நிவாரணப் பணிகளுக்காக தி.மு.க தொடங்கியுள்ள ‘ஒன்றிணைவோம் வா’ என்கிற திட்டமும் ஐபேக் கொடுத்த ஐடியாதான்.

கிஷோரின் நிறுவனத்தில் பணியாற்றுபவர்கள், ‘‘கிஷோருக்கு ராஜ்யசபா சீட் தருவதாக பா.ஜ.க அளித்திருந்த வாக்குறுதியை நிறைவேற்றாமல்போனதால்தான் அவர் அந்தக் கட்சிக்கு எதிராக நாடு முழுவதும் வேலைசெய்து வருகிறார். மத்தியிலும் மாநிலங்களிலும் பா.ஜ.க ஆட்சியை ஓரங்கட்டுவதுதான் அவரின் எண்ணம். தமிழகத்தில் வலியச்சென்று தி.மு.க-வுக்குப் பணிசெய்வதும் அதற்குத்தான்’’ என்கின்றனர்.

தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் பலரும், ஐபேக் நிறுவனம் தி.மு.க-வுக்காகப் பணியாற்றுவதை விரும்பவில்லை. மேற்குவங்கத்தில் மம்தா பானர்ஜிக்கும் பிரஷாந்த் கிஷோர்தான் தேர்தல் ஆலோசகர். தி.மு.க-வைவிட பிரஷாந்த் கிஷோர் மேற்கு வங்கத்துக்குத்தான் அதிக முக்கியத்துவம் தருகிறார் என்ற காரணத்துக்காகவும் அவரருக்கு எதிராக தி.மு.க-வினர் பொங்குகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பிரஷாந்த் கிஷோர் தி.மு.க-வுக்காகப் பணியாற்றுவதால், பல வட இந்திய தேர்தல் வியூக நிறுவனங்களும் அ.தி.மு.க-வுக்குப் பணியாற்ற விரும்புவதாகப் பேசியுள்ளன. இந்த நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமான சில ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் சுனிலைப் பரிந்துரை செய்தனர். ‘சுனில், தி.மு.க-வின் பலம், பலவீனம் அறிந்தவர். ஏற்கெனவே தமிழகத்தின் அரசியல் நிலவரத்தை அறிந்து வைத்திருப்பவர்’ என்று காரணங்களை அடுக்கியுள்ளனர். அதன் பிறகே, சுனில் அ.தி.மு.க பக்கம் கொண்டுவரப்பட்டார்.

ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி
ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி

சுனில் - எடப்பாடி இடையே சில சந்திப்புகளும் நடந்துள்ளன. அம்மா உணவகங்களை அ.தி.மு.க தரப்பு கைப்பற்றி உணவு நிவாரணம் வழங்குவதெல்லாம் சுனில் வழங்கிய ஐடியாதான் என்கின்றனர். ‘‘கட்சியின் கட்டமைப்பை வலுப் படுத்தாமல் தேர்தலில் கரை சேர முடியாது. முதலில் கட்சியில் சில மாற்றங் களைச் செய்ய வேண்டும். பதவி பறிப்பு, மாற்றம் உள்ளிட்ட வற்றை செய்ய ஒப்புக்கொண்டால் மட்டுமே எனது பணிகள் எளிதாகும்’’ என்று சுனில் கேட்டுக் கொண்டதற்கு, எடப்பாடியும் ஒப்புக்கொண்டுள் ளாராம். ஜூன் முதல் வாரம் அ.தி.மு.க-வுக் காக தனது பணியை அதிகாரபூர்வமாக ஆரம்பிக்க உள்ளார் சுனில்.

2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின்போது, ‘‘தமிழகத்தில் மோடி எதிர்ப்பு அலையை கையில் எடுத்தால் மட்டுமே தி.மு.க கரை சேர முடியும் என்ற உத்தியை வகுத்துக் கொடுத்தவர் சுனில்தான்’’ என்கின்றனர். தி.மு.க வெற்றி வாகை சூட அந்த உத்தியும் கைகொடுத்தது.

பழைய பகைக்கு ஆடுகளம் அமைக்கப்போகும் தமிழக தேர்தல்!

கிஷோரின் ஐபேக் நிறுவனம் இந்தியாவில் பல மாநில தேர்தலில் பணியாற்றியதுபோலவே, சுனிலும் பா.ஜ.க-வுக்காக பல மாநிலங்களில் பணியாற்றியுள்ளார். ஒரு காலத்தில் ஒன்றாகப் பணியாற்றி, இடைப்பட்ட காலத்தில் தொழில் போட்டி காரணமாகப் பிரிந்திருந்த பிரஷாந்த் கிஷோரும் சுனிலும் தற்போது தமிழக அரசியல் களத்தில் எதிரும் புதிருமாகக் களமிறங்குகின்றனர். எனவே, பிரஷாந்த் கிஷோர் - சுனில் இடையேயான பகைக்குப் பழி தீர்க்கும் களமாகவும் வரும் தமிழக சட்டமன்றத் தேர்தல் இருக்கப் போகிறது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு