Published:Updated:

``கட்சித் தாவலை விஞ்சும் கம்பெனி தாவல்” - பிரசாந்த் கிஷோர் தி.மு.க-வுக்குள் என்ட்ரி!

பிரசாந்த் கிஷோர்

கிஷோரின் பாலிஸியே எந்த மாநிலத்தில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வரும் என்ற நிலை இருக்கிறதோ, அந்தக் கட்சிக்கு இவரே வலியச்சென்று தேர்தல் பணியாற்றுவதுதான்.

Published:Updated:

``கட்சித் தாவலை விஞ்சும் கம்பெனி தாவல்” - பிரசாந்த் கிஷோர் தி.மு.க-வுக்குள் என்ட்ரி!

கிஷோரின் பாலிஸியே எந்த மாநிலத்தில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வரும் என்ற நிலை இருக்கிறதோ, அந்தக் கட்சிக்கு இவரே வலியச்சென்று தேர்தல் பணியாற்றுவதுதான்.

பிரசாந்த் கிஷோர்

`ஐ -பேக்'என்கிற நிறுவனத்தை வைத்துக்கொண்டு, அகில இந்திய அளவில் உள்ள அனைத்துக் கட்சிகளுக்கும் தேர்தல் வேலை செய்துவருகிறார், பிரசாத் கிஷோர். கடந்த ஓர் ஆண்டாக தமிழகத்தைக் குறிவைத்து களத்தில் இறங்கிய பிரசாந்த் கிஷோர், இப்போது தி.மு.க-வுக்கு வேலைபார்க்கத் தயாராகிவிட்டார் என்கிறார்கள், அறிவாலயம் தரப்பினர்.

மோடியுடன் பிரசாந்த் கிஷோர்
மோடியுடன் பிரசாந்த் கிஷோர்

2014-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் முடிவடைந்தபோது, பி.ஜே.பி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்தது. அப்போது, டெல்லியில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த பிரசாந்த் கிஷோர், ``பி.ஜே.பி-யின் இந்த மாபெரும் வெற்றிக்கு சூத்திரதாரியாக இருந்ததே நான்தான்” என்று தடாலடியாக அறிவித்தார். அப்போதுதான், ஒட்டுமொத்த இந்தியாவும் அவரை உற்றுநோக்கியது. அதுவரை அரசியல்வாதிகளை மட்டுமே நம்பி அரசியல் செய்து பழக்கப்பட்ட இந்தியத் தலைவர்களுக்கு, நிறுவன அரசியல் கைகொடுக்கும் என்கிற நம்பிக்கையை ஏற்படுத்தியது அந்தத் தேர்தல் முடிவுகள்தான். அதற்குப் பிறகு இந்தியா முழுவதும் இருந்த பிராந்தியக் கட்சிகள், பிரசாந்த் கிஷோரை வளைக்க முயற்சி எடுத்தன.

அதே நேரம், பிரசாந்த் கிஷோரிடம் வேறு ஒரு திட்டம் இருந்தது. அதை நிறைவேற்ற, பி.ஜே.பி தலைமையிடம் நேரடியாகச் சென்ற பிரசாந்த் ``என்னால்தான் நீங்கள் வெற்றிபெற்றீர்கள். அதற்குப் பரிகாரமாக, ராஜ்யசபா சீட் வேண்டும்” என்று சொல்ல, அதிர்ந்த பி.ஜே.பி தலைமை, எங்கள் கட்சியில் எந்த முடிவும் ஆர்.எஸ்.எஸ் மூலமே எடுக்கமுடியும். எனவே, உங்களுக்கு இப்போது எங்களால் வாய்ப்பு தரமுடியாது'' என்று கைவிரித்தது. உடனே கொதித்தெழுந்த கிஷோர், ``இனி உங்களுக்கு எதிராகவே நான் தேர்தல் பணியாற்றுவேன்'' என்று சபதமிட்டார். அப்போது, பி.ஜே.பி-க்கு எதிராக களத்தில் நின்ற நிதிஷ்குமார் பக்கம் சென்றார். பீகாரில் நிதிஷ்குமார் ஆட்சியைப் பிடித்தார். ஐக்கிய ஜனதா தளத்தின் துணைத் தலைவர் பதவியைப் பெற்றார் கிஷோர். ஆனால் அங்கிருந்துகொண்டே மற்ற மாநிலங்களில் தனது வேலையை ஆரம்பித்தார்.

பிரசாந்த் கிஷோர் மற்றும் நிதீஷ் குமார்
பிரசாந்த் கிஷோர் மற்றும் நிதீஷ் குமார்
Photo: PTI

மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜிக்கு ஆதரவாகத் தேர்தல் வேலை செய்ய களத்தில் இறங்கினார். ஒருகட்டத்தில் நிதிஷ்குமாரும் கிஷோரை கழற்றிவிடும் முடிவுக்கு வந்தார். மற்றொருபுறம், ஆந்திராவில் தனது வேலையை ஆரம்பித்தார் பிரசாந்த். ஆந்திர தேர்தலுக்கு முன்பாக ஜெகன்மோகன் ரெட்டிக்கு அரசியல் ஆலோசனை வழங்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். ஜெகன்மோகன் ரெட்டியின் வெற்றிக்குப் பிறகு, அவரும் கிஷோரைக் கழற்றிவிட, தமிழகத்தின் பக்கம் தன் பார்வையைத் திருப்பியுள்ளார் கிஷோர்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தல் முடிந்த பிறகு, தமிழகத்தில் தனது கிளையைத் தொடங்கும் முடிவுக்கு வந்த கிஷோர், முதலில் குறிவைத்தது அ.தி.மு.க-வைத்தான். அந்தக் கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவரின் கல்லுாரியில் முதல்கட்ட பேச்சுவார்த்தை நடந்தது. மூத்த அமைச்சர் ஒருவர், முதல் ரவுண்டாக பத்து கோடி ரூபாயை கிஷோர் நிறுவனத்திற்கு வழங்கியுள்ளார். அ.தி.மு.க வின் வெற்றிவாய்ப்பு குறித்து தமிழகம் முழுவதும் சர்வே நடத்தியது பிரசாந்த் கிஷோர் குழு. அதே நேரம், கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்திற்குப் பணியாற்ற மற்றொரு நபர்மூலம் ஒப்பந்தம் செய்தார் கிஷோர். ஒரே மாநிலத்தில் இரண்டு கட்சிக்கு ஒரே நேரத்தில் எப்படி வேலை செய்கிறார் கிஷோர் என்கிற கேள்வி எழுந்தது. ஒரு கட்டத்தில் கிஷோர் மீது நம்பிக்கையிழந்த அ.தி.மு.க, அவரைக் கழற்றிவிட்டது.

கமலுக்கும் ஒரு கட்டத்தில் நம்பிக்கையற்றுப்போகவே, அவரும் கிஷோரை ஒதுக்கிவைத்தார். கமல் ஒதுக்கிவைக்கக் காரணம், மும்பையில் ரஜினியைச் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார் கிஷோர். நிலையான ஒரு முடிவு இல்லாமல், அனைத்துக் கட்சிகளுக்கும் தூதுவிட்ட கிஷோரின் நடவடிக்கை விமர்சனத்துக்கு உள்ளானது. இந்த நிலையில், தி.மு.க-வின் ஆஸ்தான நிறுவனமாகச் செயல்பட்டுவந்த ஓ.எம்.ஜி குழுமத்தின் தலைவர் பதவியிலிருந்து சுனில் ராஜினாமா செய்துள்ளார். கிஷோர் நிறுவனம் தி.மு.க-வுக்கு வேலை செய்யப்போவதுதான் இதற்கு காரணமாகச் சொல்கிறார்கள்.

ஓ.எம்.ஜி நிறுவனத்தின் தலைவர் பொறுப்புக்கு சுனில் வந்தபிறகு தான் நமக்கு நாமே பயணம், மக்கள் சந்திப்பு, மாவட்ட வாரியாக நிர்வாகிகள் சந்திப்பு என்று புதிய யுக்திகளை தி.மு.க-வுக்குள் கொண்டுவந்தனர். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மோடிக்கு எதிரான எதிர்ப்பு அலையை தமிழகத்தில் ஏற்படுத்தியதில் தி.மு.க-வின் ஐ.டி விங் பங்கு மிகமுக்கியமானது. அதற்கு மூளையாகச் செயல்பட்டவர், சுனில். மேலும், குஜராத் மாநில சட்டமன்றத் தேர்தலில், பிரசாந்த் கிஷோருக்கு எதிராக பி.ஜே.பி -க்கு பணியாற்றினார் சுனில். இந்த நிலையில், கிஷோரை தி.மு.க கையில் எடுத்திருக்கிறது. ஏற்கெனவே, இத்தனை கட்சிகளுக்கு வேலை பார்ப்பதாகச் சொல்லி ஓர் ஆண்டாக தமிழகத்தில் களமாடி வந்த கிஷோரை இப்போது தி.மு.க கையில் எடுத்திருப்பது எந்த வகையில் கைகொடுக்கும் என்கிற கேள்வியும் கூடவே எழுகிறது.

சுனில் -ஸ்டாலின்
சுனில் -ஸ்டாலின்

அதைத்தாண்டி, கிஷோரின் பாலிஸியே எந்த மாநிலத்தில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வரும் என்ற நிலை இருக்கிறதோ, அந்தக் கட்சிக்கு இவரே வலியச்சென்று தேர்தல் பணியாற்றுவதுதான். அந்தக் கட்சி வெற்றிபெற்றதும், அந்த வெற்றி தன்னுடைய யுக்தியால்தான் ஏற்பட்டது என்று லாபி செய்வது கிஷோரின் பாலிஸி. அந்த பாலிஸிக்காகவே இப்போது பணம்கூட வாங்காமல் பணியாற்றத் துணிந்திருக்கிறார் கிஷோர் என்கிறார்கள் விபரம் தெரிந்தவர்கள். அரசியலில் எதுவும் நிரந்தரம் இல்லை என்பதற்கு இதுவும் ஓர் உதாரணம்.