Published:Updated:

பிரசாந்த் கிஷோரின் வழிகாட்டல்... சித்தாந்தச் சிக்கலில் தி.மு.க!

ஸ்டாலின் - பிரசாந்த் கிஷோர்
News
ஸ்டாலின் - பிரசாந்த் கிஷோர்

பிரசாந்த் கிஷோரின் நிறுவனம்தான் தி.மு.க-வுக்கும் தேர்தல் வேலை செய்கிறது. தமிழகத்திலும் இதேபோன்ற `இந்து' பாணி அரசியலைக் கடைப்பிடித்தால் தி.மு.க-வுக்கு அது எந்தளவுக்கு பயனளிக்கும்... சித்தாந்த ரீதியாக அது சரியாக இருக்குமா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

இந்து தேசியவாதியாக தன்னை மறைமுகமாக அடையாளப் படுத்திக்கொண்டு, நிர்வாக சீர்த்திருத்தங்களை முன்னிறுத்தி மூன்றாவது முறையாக ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருக்கிறார் ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால். பா.ஜ.க-வுக்கு எதிரான அவரின் இந்த வியூகம் அவருக்கு மிகப்பெரிய அளவில் கைகொடுத்திருக்கிறது. கெஜ்ரிவாலின் பிரமாண்ட வெற்றிக்குப் பின்னால் தேர்தல் வல்லுநர் பிரசாந்த் கிஷோரின் ஆலோசனைகளும் வழிகாட்டலும் முக்கியப் பங்காற்றியதாகச் சொல்லப்படுகிறது.

டெல்லி மக்களுக்கும், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் இந்த வியூகம் புதிதானதோ, கசப்பானதோ அல்ல. டெல்லியில் வாழ்கின்ற பெருவாரியான இந்து மக்கள் இந்துக் கலாசாரத்தில் மிகவும் பற்றுதலானவர்கள் என்பது வெளிப்படையான விஷயம். இந்து மதத்துக்கும் இந்தியாவுக்கும் எதிரான ஒரு கருத்தை யாராவது தெரிவித்தால் அதற்கான பலனை தேர்தலில் அறுவடை செய்தே தீரவேண்டுமென்ற சூழல்தான் அங்கிருக்கிறது. அதை உணர்ந்தே ஏ.கே-வும், பி.கே-வும் மிகச்சாதுர்யமாக இந்த விவகாரத்தை அணுகி, அதில் வெற்றியும் கண்டிருக்கிறார்கள். அரவிந்த் கெஜ்ரிவாலும் கருத்தியல்ரீதியாக எப்போதுமே இந்து, இந்திய அடையாளத்துக்கு எதிரானவரில்லை. மதத்தால் தான் ஓர் இந்து, சமூகத்தால் தான் ஒரு பனியா என வெளிப்படுத்திக்கொள்ள அவர் என்றைக்குமே தயங்கியதே இல்லை. அதனால் டெல்லிக்கு, டெல்லி மக்களுக்கு இந்த வியூகம் பிடித்துப்போயிருக்கிறது.

அரவிந்த் கெஜ்ரிவால் - பிரசாந்த் கிஷோர்
அரவிந்த் கெஜ்ரிவால் - பிரசாந்த் கிஷோர்

கெஜ்ரிவால் வெற்றிக்கு உதவிய அதே பிரசாந்த் கிஷோர்தான் தி.மு.க-வுக்கும் தேர்தல் ஆலோசகராக இருக்கிறார். தமிழகத்திலும் இதேபோன்ற `இந்து' பாணி அரசியலைக் கடைப்பிடித்தால் தி.மு.க-வுக்கு அது எந்தளவுக்கு பயனளிக்கும்... சித்தாந்த ரீதியாக அது சரியாக இருக்குமா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
மத்தியில் ஆளும் பா.ஜ.க, தி.மு.க இந்துக்களுக்கு எதிரான கட்சி என தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. இந்து மதம் என்பது பா.ஜ.க-வுக்கு மட்டும் சொந்தமானது அல்ல. கலைஞர் ஆட்சியிலே எத்தனையோ வசதிகள், சலுகைகள், நலத்திட்டங்கள் அறநிலையத்துறைக்கும் இந்து மதத்தினருக்கும் செய்யப்பட்டுள்ளது. பூசாரிகளுக்கு ஓய்வூதியம், அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் எனக் கூறியது, கோயில்களில் அதிக அளவில் குடமுழுக்கு நடத்தியது, கோயில்களில் இலவச திருமணங்கள் ஆகியன கழக ஆட்சியில்தான்.
- மு.க.ஸ்டாலின் (பாளையங்கோட்டை பிரசாரக் கூட்டத்தில்)

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

2014-ம் ஆண்டு மத்தியில் பா.ஜ.க ஆட்சிக்கு வந்ததில் இருந்து தமிழகத்தில் தி.மு.க-வின் அணுகுமுறையில் சில மாற்றங்கள் தெரிந்தன. அதுவரை மதம் சார்ந்து பெரிதாக எந்தக் கருத்தும் தெரிவிக்காத தி.மு.க, `இந்துக்களுக்கு எதிரான கட்சி இல்லை’ என்று தொடங்கி, `தி.மு.க-வில் இருப்பவர்களில் 90 சதவிகிதத்தினர் இந்துக்கள்தான்!’ என்பதுவரை கருத்து தெரிவித்தது. இந்தக் கருத்தைத் தெரிவிப்பது தி.மு.க-வின் அடிமட்டத் தொண்டனோ, மூன்றாம் கட்ட பேச்சாளர்களோ அல்ல. தி.மு.க தலைவர் ஸ்டாலின். அப்போது அவரின் அந்தக் கருத்துத்துக்கு முற்போக்கு சக்திகளிடமிருந்து கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. தி.மு.க இந்துக்களுக்கு எதிரான கட்சி என்கிற பா.ஜ.க-வினரின் விமர்சனத்துக்குப் பதிலாகவே ஸ்டாலின் அந்தக் கருத்தை தெரிவித்திருந்தாலும் சித்தாந்தரீதியாக அது தி.மு.க-வுக்கு எழுந்த சவாலாகவே கருதப்படுகிறது. தி.மு.க-வில் இருப்பவர்கள் யாரும் இதுவரை தங்களை இந்து என காட்டிக்கொள்ளத் தயங்கியதில்லை. அதேநேரத்தில் இந்துத்துவ சித்தாந்தத்துக்குள் தங்களை நுழைத்துக்கொண்டதில்லை. அதனால்தான், ஸ்டாலினின் இந்தக் கருத்தை, தங்கள் கட்சி உறுப்பினர்களையே இந்துக்கள், முஸ்லிம்கள் என பிரிப்பது என்பது தி.மு.க-வுக்கு வேண்டாதவேலை எனவும் பலரும் எதிர்வினையாக கருத்து தெரிவித்தனர்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

இந்த நிலையில், பிரசாந்த் கிஷோர் தி.மு.க-வின் அரசியல் ஆலோசகராக செயல்பட ஆரம்பித்த பிறகு மதம் சார்ந்த அரசியல் சித்தாந்தத்துக்குள் தி.மு.க இன்னும் அழுத்தமாகப் பாதம் பதிக்கிறதோ என்ற சந்தேகம் பல தரப்பிலும் எழுந்திருக்கிறது. குடியுரிமைச் சட்டத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தி ராமநாதபுரம் சந்தைத் திடலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் நடத்தப்பட்ட கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய தி.மு.க மகளிரணிச் செயலாளர் கனிமொழி ``பெரும்பான்மை இந்துக்கள் கோயிலுக்கு உள்ளே செல்ல முடியாது வெளியிலே நிறுத்தப்படுகிறார்கள் என்று அவர்களுக்காக குரல் கொடுத்த இயக்கம் திராவிட இயக்கம். இந்துக்களின் பாதுகாவலர் பெரியார்தான் '' எனப் பேசினார். பா.ஜ.க-வினருக்கான பதிலடியாக இந்தக் கருத்துகளை கனிமொழி கூறியிருந்தாலும், பெரியாரை இந்துக்களின் காவலர் என்கிற வகைமைக்குள் கொண்டு வருவதெல்லாம், பெரியாரின், திராவிட இயக்கத்தின் கொள்கைக்கே நேர் எதிரானது என்கிறார்கள் பெரியார் கொள்கையைத் தீவிரமாகக் கடைப்பிடிக்கும் பகுத்தறிவாளர்கள்.

பெரும்பான்மையான இந்துக்களுக்கு பா.ஜ.க ஆட்சி என்ன செய்தது? வேலையில்லாத் திண்டாட்டம், இருக்கக் கூடிய வேலைகளும் இல்லை, விவசாயிகளின் தற்கொலை, இதைத் தவிர இந்த ஆட்சி இந்த நாட்டிலே இருக்கக் கூடிய பெரும்பான்மை இந்துக்களுக்கு இதைத்தவிர வேறு எதையும் பரிசாகத் தரவில்லை.
கனிமொழி எம்.பி

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பெரியார் சாதி ரீதியாக வழிபாட்டு உரிமை மறுக்கப்படுவதற்கு எதிராகப் போராடினாரே தவிர, அவர்கள் இந்துக்கள் என்பதற்காகப் போராடவில்லை. அதை நன்றாக உணர்ந்தவர்தான் கனிமொழியும். ஆனால், மக்களுக்காக, தேர்தல் அரசியலுக்காக இப்படிப் பேச வேண்டிய தேவை இருக்கிறது என்றால், மக்களின் போக்குக்குச் செல்வதா பெரியார் வழிவந்த கட்சி செய்யவேண்டிய வேலை என்று கேட்கின்றனர் பெரியாரியவாதிகள். மாறாக மக்களைச் சீர்திருத்தி அதன் மூலம் ஒரு வெற்றியைப் பெறுவதுதான் தேர்தல் வெற்றியைத் தாண்டி சித்தாந்த ரீதியாக தி.மு.க-வுக்கு வெற்றியாக இருக்கமுடியும். என்பதும் அவர்களின் கருத்தாக இருக்கிறது. அதுமட்டுமல்ல, வட இந்திய மக்களைப் போல, மத ரீதியாக கருத்துகளுக்கோ பிரசாரங்களுக்கோ தூண்டுதலுக்கோ எளிதில் உணர்ச்சிவசப்படக் கூடியவர்கள் அல்ல தமிழக மக்கள், இங்கே சித்தர்கள் காலம் தொட்டே வள்ளலார், வைகுண்டர் ஆகியவர்களின் ஆன்மிக வழி சமுதாயப் புரட்சியும் பெரியார் போன்ற தலைவர்களின் அரசியல் வழி சமூகப் புரட்சியின் மூலமாகவும் மிக முதிர்ச்சியான நிலையில் தமிழக மக்கள் இருக்கிறார்கள்.

கனிமொழி
கனிமொழி

இப்போது மட்டுமல்ல, கருணாநிதியின் காலத்திலேயே இதுபோன்ற விமர்சனங்கள் எல்லாம் ஏன் இதைவிடக் கடுமையான விமர்சன அம்புகள் எல்லாம் தி.மு.க-வை நோக்கியும், கருணாநிதியை நோக்கியும் எய்தப்பட்டிருக்கின்றன. அப்போதெல்லாம் அவர் அதை எப்படிக் கையாண்டார் என்பதை தற்போதைய தி.மு.க தலைமை ஒருமுறை திரும்பிப் பார்க்கவேண்டிய தேவை இருப்பதாகவும் பகுத்தறிவு இயக்கத்தினர் சுட்டிக்காட்டுகின்றனர்.

தி.மு.க தலைவர்களே இப்படிக் கருத்துகளை வெளியிடுவதால்தான், அந்தக் கட்சியின் செய்தித் தொடர்பாளர்கள் இன்னும் ஒருபடி மேலே போய் ``கடந்த நாடாளுமன்றத்தில் லட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க வெற்றிபெற்றது. அந்த வாக்குகளை அளித்தவர்களில் பெரும்பாலோர் இந்துக்கள். தி.மு.க என்பது அதிகமான இந்துக்களால் ஆதரிக்கப்படும் கட்சி'' என்று தொலைக்காட்சி விவாதங்களிலும் பத்திரிகைப் பேட்டிகளிலும் பேசி வருகிறார்கள். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க-வுக்கு மக்கள் வாக்களிக்கக் காரணம், இந்து அடையாளத்தை தூக்கிப் பிடித்த பா.ஜ.க-வுக்கு எதிராகத்தானே தவிர தாங்கள் இந்துக்கள் என்று உணர்ந்து அல்ல. அப்படி அவர்கள் ஒருவேளை நினைத்து வாக்களித்திருந்தால் பா.ஜ.க-தான் தமிழகத்தில் அதிக இடங்களைப் பிடித்திருக்கும் என்பதும் தி.மு.க-வின் இந்த நிலைப்பாட்டை எதிர்ப்பவர்களின் கருத்தாக இருக்கிறது.

எனவே, பா.ஜ.க-வின் விமர்சனங்களை எதிர்கொள்கிறோம் என திராவிட இயக்கக் கொள்கையின் பெரியார் கொள்கையின் அடி நாதத்தையே சிதைத்துக்கொள்வது என்பது தற்போது தேர்தல் அரசியலில் தி.மு.க-வுக்கு வெற்றியைப் பெற்றுத் தந்தாலும் எதிர்காலத்தில் சித்தாந்த ரீதியாக தி.மு.க-வுக்குப் பெரும் பின்னடைவாகவே அமையும். தேர்தல் யுக்தி என யாரோ வட நாட்டு வல்லுநர்கள் பேச்சையும், தன் வீட்டு உறுப்பினர்கள் பேச்சையும் கேட்பதை விட்டுவிட்டு தி.மு.க தலைவர் கருணாநிதி, இதுபோன்ற விமர்சனங்களை எப்படி எதிர்கொண்டார் என தி.மு.க-வின் மூத்த தலைவர்களிடமும் கேட்டுத் தெரிந்துகொள்வது நல்லது. ``என்ன கொள்கையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதை நாங்கள்தான் முடிவெடுப்போம்'' என தி.மு.க சொன்னால் இத்தனை ஆண்டுக்காலமாக இங்கே கட்டியெழுப்பப்பட்ட ஒரு மத சமத்துவத்தை சிதைப்பதற்கு தி.மு.க துணைபோகிறது என்றே பொருள் எனவும் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.

பெரியார்
பெரியார்

தி.மு.க போன்ற ஒரு மக்கள் ஆதரவு பெற்ற கட்சி இந்து, இந்துக்கள் ஆகிய சொற்றொடரை வெகுஜனப்படுத்துவதன் மூலம், வெறும் சான்றிதழ் வழி இந்துக்களாக உள்ள தமிழக மக்களிடத்தே கலாசார ரீதியாகவும் அது தாக்கத்தை உண்டாக்கும். அந்த வார்த்தைகளை வைத்து மக்களைப் பிளவுபடுத்தும் சக்திகளுக்கு அது சாதகமாகவே இருக்கும். பா.ஜ.க-வின் இந்து ராஷ்டிரக் கனவுக்கு தமிழகத்திலிருந்து ஒரு செங்கல் எடுத்துக்கொடுக்கும் வரலாற்றுப் பிழையை தி.மு.க ஒருபோதும் செய்துவிடக் கூடாது என்பதே பகுத்தறிவுக் கொள்கையில் பற்றோடு இருக்கும் திராவிட இயக்கத்தவர்களின் தீவிரமான கவலையாக இருக்கிறது.