Published:Updated:

`அடுத்த முதல்வராக யார் வர வேண்டும்?!' - எடப்பாடிக்காக எடுக்கப்படும் `ஐபேக்' டீம் சர்வே

ஐபேக் நிறுவனத்தின் தலைமை அதிகாரிகளைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி தரப்பினர், தற்போது புதிய அசைன்மென்ட் ஒன்றைக் கொடுத்துள்ளனர். `இதற்காக, ரூ.5 கோடி ரூபாய் முன்பணம் வழங்கப்பட்டுள்ளது' என்கின்றனர், அ.தி.மு.க நிர்வாகிகள்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

அ.தி.மு.க அரசுக்கு மக்களிடையே இருக்கும் செல்வாக்கு குறித்து ஆய்வு நடத்த இருக்கிறது, பிரசாந்த் கிஷோரின் `ஐபேக்' டீம். `தமிழகம் முழுவதும் இதுதொடர்பாக சர்வே எடுக்கப்பட இருக்கிறது. அடுத்து வரக்கூடிய நாள்களில், 234 தொகுதிகளிலும் ஆய்வு நடத்தப்பட இருக்கிறது' என்கின்றனர், அ.தி.மு.க வட்டாரத்தில்.

அ.தி.மு.க நிர்வாகிகள் கூட்டம்
அ.தி.மு.க நிர்வாகிகள் கூட்டம்

2019 நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க கூட்டணி 37 இடங்களைக் கைப்பற்றியது. சட்டமன்ற இடைத்தேர்தலில் 13 தொகுதிகளையும் வென்றது. அ.தி.மு.க அரசு நீடிப்பதற்குத் தேவையான பெரும்பான்மை எண்ணிக்கையான 9 தொகுதிகளை வென்றதால், எடப்பாடி பழனிசாமி அரசு தப்பியது. இந்தத் தேர்தலில், தேனி நாடாளுமன்றத் தொகுதியில் மட்டுமே அ.தி.மு.க வெற்றிபெற்றது. ஜெயலலிதா இருந்தபோது பெற்ற வாக்கு சதவிகிதமும் குறைந்துவிட்டது. இதனால், மிகுந்த கவலையில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. தற்போது, வேலூர் மக்களவைத் தேர்தலுக்கான பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர் அ.தி.மு.க அமைச்சர்கள்.

`எடப்பாடி பழனிசாமியிடம் பேசுகிறேன்!' - ஆணவக் கொலை புள்ளிவிவரத்தால் ஆதங்கப்பட்ட ஆளுநர்

இந்தத் தேர்தலை மானப் பிரச்னையாகவும் பார்க்கத் தொடங்கிவிட்டனர். வேலூரில் நடைபெற்ற தேர்தல் பணிக்குழு கூட்டத்தில் பேசிய வணிக வரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி, `நமது கூட்டணிக் கட்சி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தின் வெற்றியில்தான் அ.தி.மு.க-வின் எதிர்காலமே அடங்கியிருக்கிறது. இதனை மானப் பிரச்னையாகவும் தொண்டர்கள் உணர்ந்துள்ளனர்' என ஆவேசப்பட்டார். தொடர்ந்து பேசிய வைத்திலிங்கம் எம்.பி-யும், `இது மானத்தைக் காக்கும் தேர்தல். இதை மனத்தில் வைத்துக்கொண்டு செயல்பட வேண்டும். கட்சியைக் காக்கும் தேர்தல் என்பதை நிரூபிக்க வேண்டும்' என்றார் உருக்கமாக.

`முற்பட்ட பிரிவினருக்கு 28.5!'‍- கட்-ஆஃப் சர்ச்சைக்கு ஸ்டேட் வங்கி சொல்வது என்ன?

`வேலூர் தேர்தலில் அ.தி.மு.க நிர்வாகிகள் இந்த அளவுக்கு பேச வேண்டிய அவசியம் என்ன?' என அக்கட்சியின் முன்னணி நிர்வாகிகளிடம் கேட்டோம். "நாடாளுமன்றத் தேர்தலில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கொங்கு மண்டலமும் முதல்வருக்கு கை கொடுக்கவில்லை. அங்குள்ள அட்டவணைப் பிரிவு மக்கள் இந்த முறை ஸ்டாலின் தலைமையை ஆதரித்து வாக்களித்துவிட்டனர். கருணாநிதி முதல்வராக இருந்த காலத்திலேயே அவருக்கு செல்லாத இந்த வாக்குகள், தற்போது தி.மு.க பக்கம் இடம் மாறியதை எடப்பாடி பழனிசாமியால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதன் காரணமாகத்தான் ராஜ்யசபா தேர்தலில் அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த மேட்டூர் சந்திரசேகருக்கு, பதவி கொடுத்தார்.

ஆளும்கட்சி மீதான அதிருப்தி, பா.ஜ.க மீதான எதிர்ப்பு போன்ற காரணங்களால்தான் மக்கள் தி.மு.க-வை ஆதரித்தனர். தற்போது மத்தியில் தொடர்ந்து பா.ஜ.க ஆட்சி நீடிப்பதால், ஏ.சி.சண்முகம் வெற்றிபெறுவார் என உறுதியாக நம்புகிறார் முதல்வர். இந்த முறையும் கோட்டை விட்டுவிட்டால், அ.தி.மு.க பலவீனமடைந்துவிட்டது என்ற எண்ணம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுவிடும் எனவும் அச்சப்படுகிறார். அதன் விளைவாகவே 209 பொறுப்பாளர்களை வேலூர் தொகுதி தேர்தலுக்கென நியமித்திருக்கிறார். இவை ஒருபுறம் இருந்தாலும் மாநிலம் முழுவதும் தனது தலைமைக்கான செல்வாக்கு என்ன என்பதை அறிந்துகொள்வதிலும் அவர் ஆர்வமாக இருக்கிறார்" என விவரித்தவர்கள்,

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

"இந்தியாவில் உள்ள பல அரசியல் கட்சிகள், பிரசாந்த் கிஷோரின் ஐபேக் டீமைத்தான் நம்பியுள்ளனர். 2021 தேர்தலில் அ.தி.மு.க சார்பாக முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி முன்னிறுத்தப்படுவாரா என்ற கேள்வி, கட்சியினர் மத்தியில் வலம்வருகிறது. அதேநேரம், பணபலம் பிளஸ் சொந்தக் கட்சி செல்வாக்கு ஆகியவற்றின் காரணமாக, மீண்டும் எடப்பாடியே முன்னிலைப்படுத்தப்பட வேண்டும் என்பதைப் பற்றியும் சிலர் பேசிவருகின்றனர். இதன் தொடர்ச்சியாக, எடப்பாடி பழனிசாமியின் செல்வாக்கை வளர்த்துக்கொள்வதற்கும் தேர்தல் வெற்றிக்கும் ஐபேக் டீமைச் சந்தித்துப் பேசியுள்ளனர், முதல்வருக்கு வேண்டியவர்கள். `நாம் எவ்வளவோ நல்ல திட்டங்களைச் செயல்படுத்தினாலும் தி.மு.க அளவுக்கு நம்மால் பிரசாரத்தில் ஈடுகொடுக்க முடியவில்லை' என கட்சிக் கூட்டத்திலேயே ஆதங்கப்பட்டார் முதல்வர். இதற்கு விடை சொல்லும் விதமாகவே ஐபேக் குழுவோடு ஒப்பந்தம் போடப்பட்டதாகவும் தகவல் வெளியானது. அ.தி.மு.க-வுக்குத் தேவையான பிரசார யுக்திகள், விளம்பரங்கள் போன்றவற்றை இந்தக் குழுவினர் மேற்கொள்ளவிருக்கின்றனர்.

இந்த நிலையில், ஐபேக் நிறுவனத்தின் தலைமை அதிகாரிகளைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி தரப்பினர், தற்போது புதிய அசைன்மென்ட்டை ஒன்றை வழங்கியுள்ளனர். இதற்காக ரூ.5 கோடி ரூபாய் முன்பணம் வழங்கப்பட்டுள்ளது. `தமிழகம் முழுவதும் அ.தி.மு.க அரசு மீதான மக்களின் பார்வை என்ன?' என்பதை ஆராய்வதுதான் அசைன்மென்ட்டின் நோக்கம். இதன்படி, 234 தொகுதிகளுக்கும் நேரடியாகச் சென்று சர்வே ஒன்றை எடுக்க இருக்கிறார்கள். அதில், `அரசின் செயல்பாடுகளை மக்கள் எப்படிப் பார்க்கிறார்கள். அரசுமீது ஏதேனும் அதிருப்தி இருக்கிறதா... ஆம் என்றால் எந்தெந்த விவகாரங்களில்... முதல்வரின் செயல்பாடுகளை எப்படிப் பார்க்கிறீர்கள், அடுத்த முதல்வராக யார் வர வேண்டும் என விரும்புகிறீர்கள்' என்பன போன்ற கேள்விகளைக் கேட்க இருக்கின்றனர். இதற்காகத் தனியாக ஒரு டீம் களமிறங்கியிருக்கிறது. சர்வே முடிவில், `தனக்கான இமேஜ் எந்த அளவுக்கு இருக்கிறது, அதனை வளர்த்தெடுப்பதற்கு என்ன செய்ய வேண்டும்?' என்பதை ஆலோசிக்க இருக்கிறார் முதல்வர்" என்கின்றனர் இயல்பாக.

பிரசாந்த் கிஷோர்
பிரசாந்த் கிஷோர்

இதே அசைன்மென்ட்டைத்தான் நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்துக்கும் மேற்கொள்ள இருக்கிறது ஐபேக் டீம். அப்படியானால், `இரண்டு அரசியல் கட்சிகளுக்கும் ஒரே சர்வே தானா?' என்ற கமென்ட்டுகளும் அரசியல் வட்டாரத்தில் இருந்து வருகிறது.