Published:Updated:

`நடிகர் விஜய்க்கு 28 பர்சன்ட்!' - ஐபேக்குக்கு `நோ’ சொன்ன ரஜினி #VikatanExclusive

மாற்று சக்திக்குப் போட்டியாக வேறு சிலர் வந்துவிட்டால், வாக்குகள் பிரிவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். விஜய் போன்றவர்கள் களமிறங்கினால், ரஜினி தன்னுடைய முடிவை மாற்றிக்கொள்ளவும் வாய்ப்புகள் இருக்கின்றன.

ரஜினி
ரஜினி

தேர்தல் காலங்கள் தலைதூக்கும்போதெல்லாம் பிரசாந்த் கிஷோரின் பெயரும் வலம் வரத் தொடங்கிவிடும். பல மாநிலங்களில் தேர்தல் வியூகங்களை வகுத்துத் தந்தவருக்குத் தமிழகச் சூழல்கள் சரியாகப் பொருந்தவில்லை. `ரஜினி, விஜய் என அடுத்தகட்டப் பணிகளைத் தொடங்க நினைக்கிறார் பி.கே. இரு தரப்பிலும் உறுதியான பதில் வரவில்லை' என்கின்றனர் அரசியல் வட்டாரத்தில்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, சசிகலா ஆதரவில் முதல்வரானார் எடப்பாடி பழனிசாமி. தற்போதைய ஆட்சி முடிவடைவதற்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகள் இருக்கின்றன. `2021 தேர்தலில் அ.தி.மு.க சார்பாக முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி முன்னிறுத்தப்படுவாரா?' என்ற கேள்வியும் அ.தி.மு.க வட்டாரத்தில் எழுப்பப்படுகிறது. பணபலம், சொந்தக் கட்சி செல்வாக்கு எனத் தன்னை முன்னிறுத்திக் கொள்ளும் வேலைகளில் ஆர்வம் காட்டுகிறார் முதல்வர். இருப்பினும், மக்கள் மத்தியில் செல்வாக்கை வளர்த்தெடுக்கும் வகையில், `தேர்தல் வித்தகர்' பிரசாந்த் கிஷோரைச் சந்தித்துப் பேசினர் முதல்வருக்கு வேண்டியவர்கள்.

இதன் தொடர்ச்சியாக, மக்கள் மத்தியில் எடப்பாடியின் செல்வாக்கை ஆராய்வதற்கான அசைன்மென்ட் ஒன்றை வழங்கினர். இதற்காக ரூ.5 கோடி ரூபாய் வழங்கப்பட்டதாகவும் தகவல் வெளியானது. இதையடுத்து, பி.கே குழுவினர் 234 தொகுதிகளிலும் சர்வே ஒன்றை எடுத்ததாகச் சொல்கின்றனர். அதில், `அரசின் செயல்பாடுகளை எப்படிப் பார்க்கிறீர்கள்... அரசுமீது ஏதேனும் அதிருப்தி இருக்கிறதா... ஆம், என்றால் எந்தெந்த விவகாரங்களில்... முதல்வரின் செயல்பாடுகளை எப்படிப் பார்க்கிறீர்கள், அடுத்த முதல்வராக யார் வர வேண்டும் என விரும்புகிறீர்கள்' என்பன போன்ற கேள்விகளை முன்வைத்ததாகவும் சொல்லப்பட்டது.

ரஜினி - பிரசாந்த் கிஷோர் சந்திப்பு: கூர்ந்து கவனிக்கும் கமல், தி.மு.க தரப்பு!

சர்வே முடிவில் கிடைத்த விவரங்களை எடப்பாடியின் பார்வைக்கு அனுப்பி வைத்தனர். இதன்பிறகு, அ.தி.மு.க தரப்பில் இருந்து எந்தப் பணிகளும் பி.கே குழுவுக்கு வழங்கப்படவில்லை. `நாமே பார்த்துக் கொள்வோம்' என்ற மனநிலைக்கு எடப்பாடி வந்துவிட்டார். அதேபோல், 2019 நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யத்துக்காக சில பணிகளை எடுத்துச் செய்தது பி.கே டீம். ஓரிரு வேட்பாளர்களுக்காகவும் அவர்கள் திட்டங்களை வகுத்துக் கொடுத்தனர். இந்தப் பணிகளிலும் மக்கள் நீதி மய்யத்தின் சில பொறுப்பாளர்களுக்குத் திருப்தியில்லை. இதனால், `பி.கே-வின் ஐபேக் டீமுக்குப் பெரிய அளவில் பணிகளைக் கொடுக்கவில்லை' என்கின்றனர் ம.நீ.ம நிர்வாகிகள். இந்நிலையில், நடிகர் விஜய் தரப்பினரை பி.கே குழுவினர் சந்தித்துப் பேசியுள்ளனர்.

பிரசாந்த் கிஷோர்
பிரசாந்த் கிஷோர்

பிரசாந்த் கிஷோரின் `ஐபேக்' நிறுவனத்தைச் சேர்ந்தவர்களிடம் பேசினோம். ``தமிழக அரசியலின் மீது நடிகர் விஜய்க்கு ஈர்ப்பு இருக்கிறது. இதை அறிந்த பி.கே குழுவினர் அவர் தரப்பைச் சந்தித்துப் பேசியுள்ளனர். இந்தச் சந்திப்பில், `நாங்கள் ஒரு சர்வே எடுத்தோம். அந்த சர்வே முடிவில், 28 சதவித மக்களின் ஆதரவு விஜய்க்கு இருக்கிறது. அவர்தான் அடுத்த முதல்வராக வர வேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள். இதையொட்டி, ஒரு வருடத்துக்கான திட்டங்களை வகுத்துத் தருகிறோம். அதைப் பின்பற்றினாலே போதும். அவர்தான் அடுத்த முதல்வர். களநிலவரமும் விஜய்க்குச் சாதகமாக இருக்கிறது. தைரியமாக அவர் அரசியலுக்கு வரலாம்' எனக் கூறியுள்ளனர்.

`எந்த மாநிலத்திலும் இப்படிக் கூட்டணி அமைத்ததில்லை!' - கமல், எடப்பாடி பணிகளால் காலியாகும் `ஐபேக்?'

இதற்குப் பதில் கொடுத்த விஜய் தரப்பினர், `ரஜினி வருவதற்கே தயக்கம் காட்டுகிறாரே?' எனக் கேட்டுள்ளனர். `அவர் இன்னும் உறுதியான முடிவை எடுக்கவில்லை. தமிழக அரசியலில் வெற்றிடம் இருப்பதால் மாற்று சக்தியாக வருவதற்கு அவர் விரும்புகிறார். ஆனால், மாற்றுச் சக்திக்குப் போட்டியாக வேறு சிலர் வந்துவிட்டால், வாக்குகள் பிரிவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். விஜய் போன்றவர்கள் களமிறங்கினால், அவர் தன்னுடைய முடிவை மாற்றிக்கொள்ளவும் வாய்ப்புகள் இருக்கின்றன. ஆந்திராவில் இளமையான முதல்வராக ஜெகன்மோகன் ரெட்டி இருக்கிறார். அவரது வெற்றிக்காக நாங்கள் வியூகங்களை வகுத்துக் கொடுத்தோம். அவரும் முதல்வராகிவிட்டார். அதேபோல், விஜய்க்கும் வயது இருக்கிறது. தமிழகத்தில் இளம் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகம். அதனால், அவர் வந்தால் சிறப்பான வாய்ப்புகள் இருக்கின்றன' எனக் குறிப்பிட்டுள்ளனர்.

நடிகர் விஜய்
நடிகர் விஜய்

இதற்கு உறுதியான பதில் கொடுக்காத விஜய் தரப்பினர், `கலந்துபேசிவிட்டுச் சொல்கிறோம்' எனக் கூறி அனுப்பி வைத்துவிட்டனர். நடிகர் விஜய் தரப்பினரைச் சந்திப்பதற்கு முன்னதாக, ரஜினி தரப்பையும் பி.கே குழுவினர் சந்தித்துப் பேசியுள்ளனர். `பி.கே குழுவின் முயற்சிகளுக்கு ரஜினி சம்மதம் தெரிவிக்கவில்லை' எனக் கூறப்படுகிறது. `தேவைப்படும்போது தொடர்புகொள்கிறோம்' என்ற தகவல் மட்டுமே கிடைத்தது" என விவரித்து முடித்தனர்.

தெளிவான புரிதலுடன் ரஜினி - கமல்... வீணாகும் பி.ஜே.பி-யின் `விருது' அரசியல்!

சென்னையில் செயல்படும் ஐபேக் நிறுவனத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களின் கைகளில் புதிதாக எந்தப் பணிகளும் இல்லாததால், அரசியல் எண்ணத்தில் இருப்பவர்களைத் தேடிச் செல்லும் பணிகளைச் செய்து வருவதாகச் சொல்கின்றனர். அண்மையில் மகாராஷ்ட்ராவில் நடந்த தேர்தலில் சிவசேனா கட்சிக்காகத் தேர்தல் வேலை பார்த்தது ஐபேக் நிறுவனம். அங்கு எதிர்பார்த்த ரிசல்ட் வரவில்லை.

ரஜினி
ரஜினி

`ஐபேக் டீம் இல்லாமலேயே கடந்த காலங்களில் அதிகப்படியான வெற்றிகளை ஈட்டியிருக்கிறோம்' என சிவசேனா நிர்வாகிகள் பேசி வருகின்றனர். காங்கிரஸ் கட்சிக்காக உ.பி-யில் வேலை பார்த்தது ஐபேக். அங்கும் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கவில்லை. நடிகர் ரஜினியும் ஐபேக் டீம் குறித்து மகாராஷ்ட்ராவில் உள்ள தனது அரசியல் நண்பர்களிடம் விசாரித்திருக்கிறார். `அவருக்கு நல்ல பதில் வராததால்தான், பி.கே குழுவினருக்குச் சரியான பதிலைத் தரவில்லை' என்கின்றனர் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள். `ரஜினியிடமிருந்து பாசிட்டிவ் சிக்னல் வராததால், நடிகர் விஜய் தரப்பினரைச் சந்தித்துப் பேசியது ஐபேக் டீம்' என்ற தகவலும் அரசியல் வட்டாரத்தில் வலம் வருகிறது.