Published:Updated:

'எடுபடவில்லையா விஜயகாந்த் பாசம்! விருத்தாசலத்தில் டெபாசிட் இழந்த பிரேமலதா!' #TNelections2021

பிரேமலதா
பிரேமலதா

தேமுதிகவை விட்டு கட்சியினர் ஓட்டமெடுக்கும் சூழலில், விஜயகாந்த் சென்டிமென்ட்டை நம்பி விருத்தாசலம் தொகுதியில் போட்டியிட்டார் பிரேமலதா.

தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடல்நிலை பாதிப்பு, தேய்ந்து போன கட்சியின் வாக்கு வங்கி, இரண்டு பெரிய திராவிட கட்சிகளும் கூட்டணியில் சேர்த்துக்கொள்ள ஆர்வம் காட்டாத நிலை என மிகச் சோதனையான காலகட்டத்தில்,விருத்தாசலம் தொகுதி வேட்பாளராக இந்தத் தேர்தலில் களமிறங்கினார் பிரேமலதா. தே.மு.தி.க-வை விஜயகாந்த் தொடங்கிய பிறகு, அவர் சந்தித்த முதல் தேர்தல் களம் விருத்தாசலம். ‘வன்னியர்களின் கோட்டை’ என்று வர்ணிக்கப்பட்ட விருத்தாசலம் தொகுதியில், 2006 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தனது ரசிகர் மன்றங்களை மட்டும் நம்பி களம்கண்ட விஜயகாந்த், 61,337 வாக்குகளுடன் பெற்ற வெற்றி, தமிழகத்தையே திரும்பி பார்க்க வைத்தது. அந்தத் தேர்தலில் தனித்து நின்று விருத்தாசலத்தில் 40.49 சதவிகித வாக்குகளைப் பெற்ற தே.மு.தி.க., அடுத்துவந்த 2011 சட்டமன்றத் தேர்தலிலும் அ.தி.மு.க கூட்டணியில் நின்று தொகுதியைத் தக்கவைத்துக்கொண்டது.ஆனால், அடுத்து வந்த நாட்களில் கூட்டணி நிலைப்பாட்டில் எடுத்த குழப்பமான முடிவுகள், விஜயகாந்தின் உடல்நலம் பாதிக்கப்பட்டதால், கட்சியின் நிர்வாக பொறுப்பைக் கையிலெடுத்த தேமுதிக பொருளாளர் பிரேமலதாவின் வாய்த்துடுக்கான பேச்சு, 2019 நாடாளுமன்ற தேர்தலின்போது திமுக, அதிமுக என மாறி மாறி கூட்டணிக்காக நடத்திய பேரத்தினால் ஏற்பட்ட அவப்பெயர், 'கூட்டணிக்காக மற்ற கட்சிகள்தான் எங்களிடம் மண்டியிடுகின்றன' என்ற விஜயகாந்தின் மகன் பிரபாகரனின் சர்ச்சைக்குரிய பேச்சு போன்றவற்றால், தேமுதிகவை விட்டு கட்சியினர் ஓட்டமெடுக்கும் சூழலில், விஜயகாந்த் சென்டிமென்ட்டை நம்பி விருத்தாசலம் தொகுதியில் போட்டியிட்டார் பிரேமலதா.விருத்தாசலம் சட்டமன்ற தொகுதியில் 1952 ஆம் ஆண்டு முதல் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 4 முறையும், தி.மு.க தலா 3 முறையும், அ.தி.மு.க., தே.மு.தி.க. 2 முறையும், உழவர் உழைப்பாளர் கட்சி, ஜனதா தளம், பா.ம.க., சுயேட்சை ஆகியவை தலா ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன. கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அதிமுக வேட்பாளர் வி.டி.கலைச்செல்வன்,திமுக வேட்பாளர் கோவிந்தசாமியை 13,777 வாக்கு வித்தியாசத்தில் வென்றிருந்தார். இந்த முறை நடைபெற்ற தேர்தலில் ஸ்டார் வேட்பாளரான பிரேமலதாவை எதிர்த்து திமுக கூட்டணியில் இடம்பெற்ற காங்கிரஸ் சார்பில் எம்.ஆர்.ஆர்.ராதாகிருஷ்ணன், அதிமுக கூட்டணியில் இடம்பெற்ற பாமக சார்பில் ஜே கார்த்திகேயன், ஐஜேகே சார்பில் மகாவீர் சந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் அமுதா உள்ளிட்டோர் முக்கிய வேட்பாளர்களாக போட்டியிட்டனர். பெரிய கட்சிகளின் கூட்டணி பலம் இல்லாத பிரேமலதாவுக்கு, கூட்டணி கட்சியான அமமுக மற்றும் இன்னமும் விஜயகாந்த் மீது பாசம் கொண்டிருக்கும் மிச்சமிருக்கும் கட்சித்தொண்டர்களின் ஆதரவு மட்டுமே பலம். கூடவே, தொகுதியை பாமகவுக்கு விட்டுக்கொடுத்ததால் அதிமுகவினரில் ஒரு தரப்பினரிடையே காணப்பட்ட அதிருப்தி, பாமக வேட்பாளர் கார்த்திகேயன் மக்களுக்கு பரவலாக அறிமுகமில்லாதவர் என்பதும் பிரேமலதாவுக்குச் சாதகமான அம்சமாக பார்க்கப்பட்டது. அதே சமயம், விருத்தாச்சலம் தொகுதி வன்னியர்களின் கோட்டை என்பதும், வன்னியர்களுக்கான 10.5 சதவிகித உள் ஒதுக்கீட்டைப் பெற்றுக்கொடுத்ததும், அதிமுக ஆதரவும் பா.ம.கவுக்கான பலமாக பார்க்கப்பட்டதால், இந்தத் தேர்தலில் பிரேமலதாவுக்குப் போட்டி கடுமையாகவே காணப்பட்டது.

இதற்கிடையில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வந்தபோது தே.மு.தி.க தொண்டர்களுக்கும், பிரேமலதாவுக்கும் அதிர்ச்சிகரமாகவே இருந்தது. போட்டி காங்கிரஸ் வேட்பாளரான ராதாகிருஷ்ணனுக்கும், பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளரான கார்த்திகேயனுக்கும் இடையேதான் நிலவியது. பிரேமலதாவுக்கு தொடர்ந்து இறங்கு முகமே காணப்பட்டது. விஜயகாந்த் முதன்முதலாக போட்டியிட்டு வென்ற விருதாச்சலத்தில் பிரேமலதா முன்னிலைகூட வகிக்காதது பலருக்கும் அதிர்ச்சியளித்தது.

தொடர்ச்சியாக அனைத்து சுற்று வாக்குகளும் எண்ணப்பட்டு முடிவில் ராதாகிருஷ்ணன் 77,064 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். பாட்டாளி மக்கள் கட்சியின் கார்த்திகேயன் 76,202 வாக்குகள் பெற்று இரண்டாம் இடம் பிடித்தார்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பிரேமலதா 25,908 வாக்குகள் மட்டுமே பெற்று டெபாசிட் இழந்தார்.

அடுத்த கட்டுரைக்கு