தஞ்சாவூர் அருகே களிமேடு கிராமத்தில் கடந்த 26-ம் தேதி இரவு நடைபெற்ற தேர்த் திருவிழாவில் மின்சாரம் தாக்கி 11 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. காயம்பட்ட 17 பேர் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். முதலமைச்சர் ஸ்டாலின் உயிரிழந்த குடும்பத்தினருக்கு அரசு சார்பில் ரூ.5 லட்சம் நிவாரண உதவி வழங்கியதுடன், விபத்து குறித்து விசாரணை மேற்கொள்ள ஒரு நபர் குழு அமைத்து உத்தரவிட்டார்.

வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மை முதன்மை செயலாளர் குமார் ஜெயந்த் தலைமையில், ஒரு நபர் குழு களிமேடு கிராமத்தில் இரண்டு தினங்களாக ஆய்வு மேற்கொண்டது. பலியான குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்ல அரசியல் கட்சித் தலைவர்கள், தனியார் அமைப்புகள் என வந்த வண்ணமாக இருந்து வருகின்றனர்.
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இந்த நிலையில், தஞ்சாவூர் சென்ற தே.மு.தி.க பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் களிமேடு கிராமத்துக்குச் சென்று உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். மேலும் தே.மு.தி.க சார்பில் தலா ரூ.10,000 நிவாரணம் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து அவர், ``94 ஆண்டுகளாக தேர்த் திருவிழா நடந்து வருகிறது. சாலை உயர்த்தப்பட்டதாலும், உயரழுத்த மின்கம்பி சென்றதாலும்தான் விபத்து ஏற்பட்டதாக கிராம மக்கள் கூறுகின்றனர்.

இந்த விபத்துக்கு அரசு அதிகாரிகள்தான் காரணம். ஆனால், எங்களிடம் யாரும் அனுமதி வாங்கவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விபத்தை மக்கள் மீது திசை திருப்புகிறார்கள். இதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஒரு கட்சி சார்பில் கொடி ஏற்ற, பேனர் வைக்க வேண்டும் என அனுமதி கேட்டால், ஆயிரத்தெட்டு ரூல்ஸ் பேசி, அதை அதிகாரிகள் தடுக்கிறார்கள். ஆனால், விடிய விடிய ஒரு திருவிழா நடக்கிறது. இது எப்படி போலீஸாருக்குத் தெரியாமல் போகும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
பாதுகாப்பு கொடுக்க வேண்டியது அரசு மற்றும் அதிகாரிகளின் கடமை. அமைச்சர்கள், முதல்வர் வந்ததால் ரோட்டில் பல மணி நேரமாக போலீஸார் நின்று பாதுகாப்பு அளிக்கிறார்கள். எனவே, அஜாக்கிரதையாக இருந்த அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்ய வேண்டும். ஒரு நபர் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்துவது எல்லாம் கண்துடைப்பு.

என்ன செய்தாலும் 11 உயிர்களை திரும்பப் பெற முடியாது. இனி வரும்காலங்களில், இது போன்ற விபத்து நடக்கக் கூடாது என்றால், அரசு அதிகாரிகளுக்கும், போலீஸாருக்கும் நிச்சயம் தண்டனை வழங்க வேண்டும். அப்படி தண்டனை கொடுத்தால்தான் அடுத்த முறை மக்களை பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் வரும். இறந்தவர்களின் குடும்பங்களில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்" என்றார்.