Election bannerElection banner
Published:Updated:

ஸ்டார் தொகுதிகள்: விருத்தாசலத்தை மீட்பாரா பிரேமலதா?

பிரேமலதா
பிரேமலதா

தொடங்கிய இடத்துக்கே மீண்டும் வந்திருக்கிறது தே.மு.தி.க. அந்தக் கட்சியின் பொருளாளரும், விஜயகாந்தின் மனைவியுமான பிரேமலதா அ.ம.மு.க கூட்டணியுடன் விருத்தாசலத்தில் களமிறங்கியிருக்கிறார்

தே.மு.தி.க-வை விஜயகாந்த் தொடங்கிய பிறகு, அவர் சந்தித்த முதல் தேர்தல் களம் விருத்தாசலம். ‘வன்னியர்களின் கோட்டை’ என்று வர்ணிக்கப்பட்ட விருத்தாசலம் தொகுதியில், 2006 சட்டமன்றத் தேர்தலில் தனது ரசிகர் மன்றங்களை மட்டும் நம்பி களம்கண்ட விஜயகாந்த், 61,337 வாக்குகள் பெற்று வென்றார். தனித்து நின்று விருத்தாசலத்தில் 40.49 சதவிகித வாக்குகளைப் பெற்ற தே.மு.தி.க., அடுத்துவந்த 2011 சட்டமன்றத் தேர்தலிலும் அ.தி.மு.க கூட்டணியில் நின்று தொகுதியைத் தக்கவைத்துக்கொண்டது.

இன்று, விஜயகாந்த் உடல்நிலை பாதிப்பு, வாக்குவங்கி தேக்கநிலை உள்ளிட்டவற்றால் கட்சி தேய்பிறையாகியிருக்கும் நிலையில், தொடங்கிய இடத்துக்கே மீண்டும் வந்திருக்கிறது தே.மு.தி.க. அந்தக் கட்சியின் பொருளாளரும், விஜயகாந்தின் மனைவியுமான பிரேமலதா அ.ம.மு.க கூட்டணியுடன் விருத்தாசலத்தில் களமிறங்கியிருக்கிறார். தி.மு.க கூட்டணியில் காங்கிரஸும், அ.தி.மு.க கூட்டணியில் பா.ம.க-வும் விருத்தாசலத்தில் போட்டியிடுகின்றன.

பிரேமலதா
பிரேமலதா

வன்னியர்கள் கணிசமாக வசிக்கும் இந்தத் தொகுதியை தி.மு.க-தான் முதலில் குறிவைத்தது. ஆனால், தன் ஆதரவாளரான கடலூர் மேற்கு மாவட்டச் செயலாளர் முத்தாண்டிக்குப்பம் ராதாகிருஷ்ணனுக்காக, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தொகுதியைக் கேட்டு விடாப்பிடியாக நின்றதால், காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. வன்னியரான ராதாகிருஷ்ணனை முன்னிறுத்துவதன் மூலம் வன்னியர் வாக்குகளும், பா.ஜ.க எதிர்ப்பு சிறுபான்மையினர் வாக்குகளும் தங்களுக்கு ஆதரவாகத் திரளும் என்று நம்புகிறது காங்கிரஸ். வி.சி.க., கம்யூனிஸ்ட்களின் வாக்குகளும் உடனிருப்பதால் கதர்கள் தெம்பாக இருக்கிறார்கள்.

ராதாகிருஷ்ணன், ஜே.கார்த்திகேயன்
ராதாகிருஷ்ணன், ஜே.கார்த்திகேயன்

அ.தி.மு.க கூட்டணியில், பா.ம.க-வின் கடலூர் மேற்கு மாவட்டச் செயலாளரான ஜே.கார்த்திகேயன் களமிறக்கப்பட்டுள்ளார். வன்னியர்களுக்கு 10.5 சதவிகித உள் ஒதுக்கீட்டைப் பெற்றுக்கொடுத்திருப்பதை பலமாகக் கருதும் பா.ம.க., அ.தி.மு.க-வின் வாக்குகளை வளைத்துவிட்டாலே ஈஸியாக வெற்றிபெற்றுவிடலாம் என்று கணக்கு போடுகிறது.

இதையெல்லாம் எதிர்கொள்ளவே, விஜயகாந்த் சென்டிமென்ட்டை கையிலெடுத்திருக்கிறாராம் பிரேமலதா. ‘‘இந்தத் தொகுதியில்தான் தே.மு.தி.க தனது முதல் வெற்றியைப் பெற்றது. என் கணவர் போட்டியிட்ட இடத்தில் இன்று நான் நிற்கிறேன். அவருக்கு அளித்த ஆதரவை எனக்கும் தாருங்கள்’’ என்று எமோஷனலாகப் பேசவிருக்கிறாராம் பிரேமலதா.

ஸ்டார் தொகுதிகள்: விருத்தாசலத்தை மீட்பாரா பிரேமலதா?

தொகுதியில் 40 சதவிகிதம் வன்னியர்களும், 60 சதவிகிதம் பிற சமூகத்தினரும் இருக்கிறார்கள். பா.ம.க., அ.தி.மு.க எதிர்ப்பு வாக்குகள், சிறுபான்மையினர் உள்ளிட்ட பிற சமூகத்தினரின் வாக்குகளை மொத்தமாக அள்ளிவிட்டால், வெற்றிபெற்றுவிடலாம் என்று திட்டமிடுகிறார் பிரேமலதா. பா.ம.க-வுக்கு விருத்தாசலம் ஒதுக்கப்பட்டதால் சிட்டிங் அ.தி.மு.க எம்.எல்.ஏ கலைச்செல்வன் தரப்பு அப்செட் என்கிறார்கள். இந்த அதிருப்தி தனக்குக் கைகொடுக்கும் என்பதும் பிரேமலதாவின் கணக்கு. பா.ம.க வேட்பாளரான கார்த்திகேயன் மக்களுக்கு அறிமுகமில்லாதவர் என்பதைத் தங்களுக்குச் சாதகமாக நினைக்கிறது தே.மு.தி.க தரப்பு. பத்து ஆண்டுகள் தொகுதி தே.மு.தி.க வசமிருந்தபோது எதுவுமே வளர்ச்சி இல்லை என்பது மக்கள் ஆதங்கம். பிரேமலதா நிறையவே உழைத்தாக வேண்டும் என்பதே இப்போதைய கள நிலவரம்!

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு