Published:Updated:

ஆட்டம் காணும் முதல்வர் நாற்காலி... பரமபதம் ஆடும் பா.ஜ.க - நிதிஷ் குமார்!

நிதிஷ் குமார்
பிரீமியம் ஸ்டோரி
நிதிஷ் குமார்

பீகாரில் நிதிஷ் குமாரின் அரசியல் நடவடிக்கையைத் தீவிரமாகக் கண்காணித்து வருகிறார் பொருளாதாரப் பேராசிரியரும், பத்திரிகையாளருமான டி.என்.திவாகர்.

ஆட்டம் காணும் முதல்வர் நாற்காலி... பரமபதம் ஆடும் பா.ஜ.க - நிதிஷ் குமார்!

பீகாரில் நிதிஷ் குமாரின் அரசியல் நடவடிக்கையைத் தீவிரமாகக் கண்காணித்து வருகிறார் பொருளாதாரப் பேராசிரியரும், பத்திரிகையாளருமான டி.என்.திவாகர்.

Published:Updated:
நிதிஷ் குமார்
பிரீமியம் ஸ்டோரி
நிதிஷ் குமார்

‘எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்துவரும் மாநிலங்களிலெல்லாம் ஆளுநரைக்கொண்டு குடைச்சல் கொடுத்துவருகிறது பா.ஜ.க’ என்ற விமர்சனம் பெருகிவரும் நிலையில், பீகார் அரசியலிலோ ‘முதல்வரையே மாற்ற வேண்டும்’ எனக் கூட்டணிக் கட்சிக்கே குடைச்சல் கொடுத்துவருகிறது பா.ஜ.க!

பீகாரில் செல்வாக்கான தலைவராக விளங்கிய லாலு பிரசாத் யாதவ், ஊழல் வழக்கில் சிறைக்குச் சென்ற பிறகு அந்த மாநில அரசியலில் அசைக்க முடியாத தலைவராக உருவெடுத்தவர் நிதிஷ் குமார். கடந்த 2020-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், பா.ஜ.க-வுடன் கூட்டணி அமைத்து, தேர்தலைச் சந்தித்தார் நிதிஷ் குமார். அந்தத் தேர்தலில், பா.ஜ.க 74 இடங்களில் வெற்றிபெற்றது. நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் 43 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றது. தேர்தலுக்கு முன்பு நிதிஷ் குமாரை முதல்வர் வேட்பாளர் என்று சொல்லி பா.ஜ.க பிரசாரம் செய்ததால், முதல்வர் பதவியை நிதிஷ் குமாருக்கே விட்டுக்கொடுத்தது பா.ஜ.க.

நிதிஷ் குமார்
நிதிஷ் குமார்

தற்போது நிதிஷ் குமார் முதல்வராக இருந்துவரும் நிலையில், ‘அவரை நீக்கிவிட்டு சுசில் மோடியை முதல்வராக்க வேண்டும்’ என்று குரல் எழுப்புகிறார்கள் பீகார் பா.ஜ.க-வினர். “பா.ஜ.க மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஒரே மாதிரியான சிவில் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை பா.ஜ.க முன்வைத்துள்ளது. அதை நிதிஷ் குமார் ஏற்காததுதான் அவரை மாற்றச் சொல்வதற்குக் காரணம்” என்கிறார்கள்.

பா.ஜ.க எம்.எல்.ஏ வினய் பீகாரி ‘நிதிஷ்குமாரிடம் 2005-ம் ஆண்டில் இருந்த வேகம் இப்போது இல்லை. அதனால், பா.ஜ.க-வைச் சேர்ந்த ஒருவரை முதல்வராக்க வேண்டும்’ என்று கோரிக்கை வைத்தார். பா.ஜ.க-வும் நிதிஷ் குமாரை மாற்றுவது குறித்து பரிசீலித்துவருவதாகத் தெரிகிறது. ஆனால், நிதிஷ் குமாரைப் பகைத்துக்கொண்டு பீகாரைத் தொடர்ந்து தக்கவைத்துக்கொள்வது சாத்தியமில்லை என்பதும் பா.ஜ.க-வுக்கு நன்கு தெரியும். சமீபத்தில், மாநில பா.ஜ.க தலைவர் சஞ்சய் ஜெய்ஸ்வால், முன்னாள் துணை முதல்வர் சுசில் மோடி ஆகியோர் அளித்த பேட்டியில், “நிதிஷ் குமாரை முதல்வர் பதவியிலிருந்து நீக்கும் திட்டம் இல்லை. அவர், 2025-ம் ஆண்டு வரை முதல்வராக நீடிப்பார். எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு பொய்யான விஷயத்தைப் பரப்புகின்றன” என்று தெரிவித்தனர்.

சுசில் மோடி
சுசில் மோடி

இந்நிலையில் கடந்த மார்ச் 26-ம் தேதி, ‘ஐக்கிய ஜனதா தளத்தின் பெரும்பாலான எம்.எல்.ஏ-க்கள் எங்களுடன் தொடர்பில் இருக்கின்றனர். எனவே, ஐக்கிய ஜனதா தளத்தை ராஷ்டிரீய ஜனதா தளத்துடன் சேர்க்க வேண்டும்’ என்று ராஷ்டிரீய ஜனதா தளத்தின் மாநிலத் தலைவர் ஜக்தானந்த் சிங், நிதிஷ் குமாருக்குக் கோரிக்கை விடுத்திருக்கிறார். சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி, சமீபத்தில் ஏற்பாடு செய்திருந்த இஃப்தார் விருந்திலும் நிதிஷ் குமார் பங்கேற்றார்.

நிதிஷ் குமாரை நன்கு அறிந்த மூத்த பத்திரிகையாளரும், அரசியல் விமர்சகருமான கன்ஹையா பெலாரி, “நிதிஷ் குமார் ஜனாதிபதி பதவிக்குக் குறிவைத்துள்ளார். எப்படியாவது பேரம் பேசி துணை ஜனாதிபதி பதவியையாவது பெற்றுவிட வேண்டும் என்பதில் குறியாக இருக்கிறார். அதனால்தான் பா.ஜ.க-வுக்கு நெருக்கடி கொடுக்க ஆரம்பித்துள்ளார். அதன் வெளிப்பாடுதான், எதிர்க்கட்சி ஏற்பாடு செய்த இஃப்தார் விருந்தில் நிதிஷ் குமார் பங்கேற்ற விஷயம்” என்றார்.

இக்கூற்றை உண்மையாக்கும் விதமாக, சமீபத்தில் டெல்லியில் நடந்த அனைத்து மாநில முதல்வர்கள் கூட்டத்திலும்கூட நிதிஷ் குமார் கலந்துகொள்ளவில்லை. இது குறித்துப் பேசிய ஐக்கிய ஜனதா தளத்தின் பாராளுமன்றக்குழுத் தலைவர் உபேந்திர குஷ்வாஹா, “நிதிஷ் குமார் தலைமையிலான கூட்டணியில் பா.ஜ.க இடம்பெற்றுள்ளது. கூட்டணி நீடிக்கும் வரை நிதிஷ் குமார்தான் முதல்வர். அவரை மாற்ற பா.ஜ.க-விடமிருந்து எந்த நெருக்கடியும் வரவில்லை” என்றார்.

பீகாரில் நிதிஷ் குமாரின் அரசியல் நடவடிக்கையைத் தீவிரமாகக் கண்காணித்து வருகிறார் பொருளாதாரப் பேராசிரியரும், பத்திரிகையாளருமான டி.என்.திவாகர். அவர், “நிதிஷ் குமார் பா.ஜ.க-வின் நீண்ட நாளைய நண்பர். பா.ஜ.க-வின் அணுகுமுறையை அறிந்தவர். பா.ஜ.க மூலமாக ஜனாதிபதி பதவி அவருக்குக் கிடைக்க வாய்ப்பில்லை. எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையை நிதிஷ் குமார் இழந்துவிட்டதால், எதிர்க்கட்சிகள் சார்பாகவும் அந்தப் பதவியைப் பெற முடியாது. பா.ஜ.க அவருக்கு ஆளுநர் பதவி கொடுக்க வாய்ப்பிருக்கிறது. அதை நிதிஷ் குமார் ஏற்க மாட்டார். பா.ஜ.க., ஐக்கிய ஜனதா தளம் இரண்டிலுமே உட்கட்சிப்பூசல்கள் உள்ளன. கூட்டணியிலிருந்து நிதிஷ் குமார் விலகினால், உடனே தேஜஸ்வி முதல்வராகிவிடுவார். இந்த நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்துப் பலரிடமும் ஆலோசனை செய்துவருகிறார் நிதிஷ் குமார். முதல்வர் இல்லத்தைக்கூட அவர் காலி செய்துவிட்டார்” என்றார்.

கன்ஹையா பெலாரி
கன்ஹையா பெலாரி

நிதிஷ் குமார், லாலு ஆகியோரிடம் பணியாற்றிய ராஜ்ய சபா உறுப்பினர் சிவானந்த் திவார், “முன்பு பா.ஜ.க தலைவர்கள் சிலர் நிதிஷ் குமாரை முதல்வர் பதவியிலிருந்து நீக்க முயன்றனர். ஆனால், மேலிடத்திலிருந்து வந்த உத்தரவால் அந்தப் பிரச்னை கிடப்பில் போடப்பட்டது. நிதிஷ் குமார் எதிர்க்கட்சித் தலைவரின் இஃப்தார் விருந்தில் கலந்துகொண்ட மறுநாளே அமித் ஷாவை வரவேற்க விமான நிலையம் சென்றார். இதன் மூலம் நிதிஷ் குமார் மாறுபட்ட சிக்னல்களை பா.ஜ.க தலைமைக்குக் கொடுத்துக் கொண்டிருக்கிறார். தற்போது நிதிஷ் குமார் வயது மூப்பு அடைந்துவிட்டார். அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக நிற்பதற்கும் தகுந்த வேகம் அவரிடம் இல்லை. அவரின் செல்வாக்கும் குறைந்துவிட்டது” என்றார்.

தற்போது புலி வாலைப் பிடித்த நிலையில் இருக்கிறார் நிதிஷ் குமார். இந்த நிலையில், ‘ஐக்கிய ஐனதா தளத்தை பா.ஜ.க-விடமிருந்து எப்படிக் காப்பாற்றப்போகிறார்’ என்பதுதான் அரசியல் விமர்சகர்களின் கேள்வி!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism