Published:Updated:

மகாராஷ்டிராவில் ஆட்சியை பறிக்கிறதா பா.ஜ.க?

vikatan
பிரீமியம் ஸ்டோரி
vikatan

கட்சியை உடைத்த அமைச்சர்... கவிழும் சூழலில் சிவசேனா அரசு...

மகாராஷ்டிராவில் ஆட்சியை பறிக்கிறதா பா.ஜ.க?

கட்சியை உடைத்த அமைச்சர்... கவிழும் சூழலில் சிவசேனா அரசு...

Published:Updated:
vikatan
பிரீமியம் ஸ்டோரி
vikatan

மகாராஷ்டிர அரசியல், உச்சகட்ட பரபரப்பை அடைந்திருக்கிறது. சிவசேனாவின் முக்கிய அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, 40-க்கும் அதிகமான எம்.எல்.ஏ-க்களுடன் அஸ்ஸாமில் தஞ்சமடைந்திருக்கிறார். மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே, முதல்வர் இல்லத்தைக் காலி செய்துவிட்டு சொந்த வீட்டில் குடியேறியிருக்கிறார். அங்கு நடக்கும் அடுத்தடுத்த நிகழ்வுகள் தேசிய அரசியலில் அதிர்வலைகளை உண்டாக்கியிருக்கின்றன. மகாராஷ்டிர அரசியலில் என்ன நடக்கிறது?

கிட்டத்தட்ட ஒரே மாதிரியான கொள்கைகளைப் பின்பற்றும் பா.ஜ.க-வும் சிவசேனாவும் 30 ஆண்டுகளாகக் கூட்டணியிலிருந்தன. ஆனால், தற்போது பரம எதிரிகளைப்போல மாறியிருக்கின்றன. 2019 சட்டமன்றத் தேர்தலைக் கூட்டணியாகச் சந்தித்து பா.ஜ.க 105 இடங்களையும், சிவசேனா 56 இடங்களையும் கைப்பற்றின. வெற்றிக்குப் பிறகு ஆட்சிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் பிரச்னை ஏற்பட, தங்களுக்கு நேரெதிர் கருத்தியல்கொண்ட தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளுடன் இணைந்து (மகா விகாஸ் அகாதி கூட்டணி) ஆட்சியமைத்தது சிவசேனா. பிறகு, பா.ஜ.க - சிவசேனா இரு கட்சிகளும் தொடர்ந்து மோதிக்கொண்டிருந்த நிலையில், ஜூன் 20-ம் தேதி இரவு, சிவசேனாவின் முக்கியத் தலைவரும், மாநில பொதுப்பணித்துறை அமைச்சருமான ஏக்நாத் ஷிண்டே தனது ஆதரவு எம்.எல்.ஏ-க்களுடன் குஜராத்துக்குச் சென்று பரபரப்பைக் கிளப்பினார்.

மகாராஷ்டிராவில் ஆட்சியை பறிக்கிறதா பா.ஜ.க?

ஏன் இப்படிச் செய்தார் ஷிண்டே?

சாதாரண ஆட்டோ ஓட்டுநராகத் தனது வாழ்க்கையைத் தொடங்கிய ஏக்நாத் ஷிண்டே, 1980-களில் சிவசேனாவில் இணைந்தார். கட்சியில் படிப்படியாகத் தன்னை வளர்த்துக்கொண்டவர், தனக்கெனப் பெரும் ஆதரவாளர் படையையும் கட்சிக்குள் திரட்டினார். ‘கட்சியின் உயர்மட்டத் தலைவர்களுடனும், அடிமட்டத் தொண்டர்களுடனும் நல்லுறவு வைத்திருக்கும் ஒரே சிவசேனா தலைவர் ஷிண்டேதான்’ என்கிறார்கள். 2019-ல், சிவசேனா தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைந்த பிறகு, பொதுப்பணித்துறை அமைச்சரானார் ஷிண்டே. தனது துறைகளில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலையிடுவதாலும், கட்சியில் முதல்வரின் மகன் ஆதித்யா தாக்கரேவுக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பதாலும் ஷிண்டே கடும் அதிருப்தியில் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. அந்தச் சமயத்தில்தான், பா.ஜ.க தலைவரும், மகாராஷ்டிராவின் முன்னாள் முதல்வருமான தேவேந்திர பட்னாவிஸுடன், ஷிண்டே தொடர்பை ஏற்படுத்திக் கொண்டதாகச் சொல்லப்படுகிறது.

ஷிண்டேவுக்கும், பா.ஜ.க தரப்புக்குமிடையே கடந்த சில மாதங்களாகவே ரகசியப் பேச்சுவார்த்தைகள் நடந்திருக்கின்றன. அதன் விளைவாகத்தான் கடந்த மாதம் நடந்த மாநிலங்களவைத் தேர்தலில், சிவசேனா எம்.எல்.ஏ-க்கள் சிலரின் ஆதரவோடு பா.ஜ.க கூடுதலாக ஒரு சீட் வென்றது. அதைத் தொடர்ந்து ஜூன் 20-ம் தேதி நடந்த சட்ட மேலவைத் தேர்தலிலும், சிவசேனா எம்.எல்.ஏ-க்கள் சிலரின் ஆதரவோடு கூடுதலாக ஓர் இடத்தைப் பெற்றது பா.ஜ.க. சட்ட மேலவைத் தேர்தல் முடிந்த அன்றே, இரவோடு இரவாக 13 சிவசேனா எம்.எல்.ஏ-க்களுடன் குஜராத்துக்குச் சென்றிருக்கிறார் ஏக்நாத் ஷிண்டே. அடுத்த நாளே தன் ஆதரவு எம்.எல்.ஏ-க்களுடன் பா.ஜ.க ஆளும் அஸ்ஸாம் மாநிலத்துக்குப் பறந்திருக்கிறார். அடுத்தடுத்த நாள்களில் ஷிண்டே ஆதரவு எம்.எல்.ஏ-க்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே சென்றது. தற்போது 42 எம்.எல்.ஏ-க்கள் ஷிண்டே பக்கம் நிற்பதாகத் தெரிகிறது.

``சிவசேனா தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைந்ததிலிருந்து, தனக்கிருந்த உடல்நலப் பிரச்னைகள், கொரோனா பரவல் உள்ளிட்டவை காரணமாகக் கட்சி நிர்வாகிகளைச் சந்திப்பதைத் தவிர்த்துவந்தார் உத்தவ் தாக்கரே. ஆனால், அமைச்சர் ஷிண்டே நிர்வாகிகளை அடிக்கடிச் சந்தித்துப் பேசியதால், கட்சிக்குள் அவருக்கான ஆதரவு பெருகியிருக்கிறது’’ என்கிறார்கள் மும்பை பத்திரிகையாளர்கள்.

மகாராஷ்டிராவில் ஆட்சியை பறிக்கிறதா பா.ஜ.க?

கடத்திச் செல்லப்பட்ட எம்.எல்.ஏ-க்கள்?!

சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத், ``விருந்துக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி, குஜராத்துக்குச் சில எம்.எல்.ஏ-க்கள் கடத்திச் செல்லப்பட்டிருக் கின்றனர். ஒருசில எம்.எல்.ஏ-க்களை ரௌடிகளும், குஜராத் காவல்துறையும் அடித்திருக்கின்றனர். அமலாக்கத் துறைக்கு பயந்து அந்தப் பக்கம் சாய்ந்திருக்கும் ஷிண்டே, பால் தாக்கரேவின் உண்மைத் தொண்டரில்லை. ஷிண்டேவுடன் இருப்பவர்களில், 20 எம்.எல்.ஏ-க்கள் எங்களுடன் தொடர்பில் இருக்கிறார்கள். சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கும்போது எம்.எல்.ஏ-க்கள் யார் பக்கம் என்பது தெரியவரும்’’ என்று கூறியிருக்கும் நிலையில், 42 எம்.எல்.ஏக்களுடன் தான் அமர்ந்திருக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார் ஷிண்டே.

இந்தக் குழப்பங்களுக்கு மத்தியில் தொலைக்காட்சியில் பேசிய முதல்வர் உத்தவ் தாக்கரே, ``கட்சிக்கு எதிராகத் திரும்பியிருக்கும் எம்.எல்.ஏ-க்கள் என்னை நேரில் சந்தித்து ராஜினாமா செய்யச் சொன்னால், எனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறேன்’’ என்றார். அவரின் மகன் ஆதித்யா தாக்கரே, தனது ட்விட்டர் பக்கத்தின் பயோடேட்டாவிலிருந்து `மகாராஷ்டிர அமைச்சர்’ என்பதை நீக்கியிருக்கிறார். எனவே, கூடிய விரைவில் உத்தவ் முதல்வர் பதவியை ராஜினாமா செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மகாராஷ்டிராவில் ஆட்சியை பறிக்கிறதா பா.ஜ.க?

‘சிவசேனாவையும், அதன் தொண்டர்களையும் காப்பாற்ற இயற்கைக்கு மாறான கூட்டணியிலிருந்து வெளிவர வேண்டும். நாங்கள் பா.ஜ.க-வோடு செல்வோம் என்கிறார்கள். அதை எப்படிச் செய்வோம்... அவர்களோடு இருந்தபோதும் நாங்கள் துன்பப்பட்டிருக்கிறோம்’ என்று ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார் ஷிண்டே. இதையடுத்து, ``ஆட்சி அதிகாரத்துக்காகக் கொள்கையில் சமரசம் செய்துகொண்டு, முரணான கருத்தியல்கொண்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்ததால்தான் உத்தவ் தாக்கரேவுக்கு இந்த நிலை ஏற்பட்டிருக்கிறது. பால் தாக்கரே இந்துக்களுக்கான இந்து ராஷ்டிரியத்தை உருவாக்கவே நினைத்தார். எனவே, ஷிண்டே பக்கம் நிற்பவர்களே உண்மையான சிவசேனா தொண்டர்கள்’’ என்று ஷிண்டே ஆதரவாளர்களும், பா.ஜ.க ஆதரவாளர்களும் ட்விட்டரில் பதிவிட்டுவருகின்றனர்.

இதற்கிடையில், ஏக்நாத் ஷிண்டேவை சிவசேனாவின் சட்டமன்றக்குழுத் தலைவர் பதவியிலிருந்து நீக்குவதாக அறிவித்தது அந்தக் கட்சி. இதையடுத்து ஜூன் 22-ம் தேதி, `நாங்களே உண்மையான சிவசேனா’ என்று 34 எம்.எல்.ஏ-க்களின் கையெழுத்தோடு ஆளுநருக்குக் கடிதம் அனுப்பினார் ஷிண்டே. ஒரு கட்சியின் மூன்றில் இரண்டு பங்கு எம்.எல்.ஏ-க்கள், அதாவது சிவசேனாவைப் பொறுத்தவரை 37 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு இருந்தால் மட்டுமே கட்சித் தாவல் தடைச் சட்டத்திலிருந்து ஷிண்டே தப்பிக்க முடியும். ஜூன் 23 நிலவரப்படி, 35 சிவசேனா எம்.எல்.ஏ-க்களும் 7 சுயேச்சை எம்.எல்.ஏ-க்களும் ஷிண்டேவின் முகாமிலிருப்பதாகச் சொல்லப்படுகிறது. இன்னும் சிலர் அவர் பக்கம் வரவிருப்பதாகச் சொல்கிறார் ஷிண்டே.

அதிருப்தி எம்.எல்.ஏ-க்களில் ஒருவரான சஞ்சய் ஷிர்சாத், உத்தவ்வுக்கு அனுப்பியுள்ள கடிதத்தை ஷிண்டே ட்விட்டரில் வெளியிட்டிருக்கிறார். `ஆதித்யா தாக்கரேவுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. எங்களுக்கு அவமானமே மிஞ்சியது. இரண்டு ஆண்டுகளாக சிவசேனா எம்.எல்.ஏ-க்களுக்கு நிதி ஒதுக்கவில்லை. முதல்வரைப் பார்க்கவும் அனுமதிக்கவில்லை. ஆனால், தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டதோடு, அவர்கள் முதல்வரைச் சந்திக்கவும் செய்தனர். எங்களது கருத்துகளைச் செவி சாய்த்துக் கேட்டவர் ஷிண்டே மட்டுமே’ என்பதுதான் அந்தக் கடிதத்தின் சாராம்சம். இந்தக் கடிதம் வெளியான பிறகு, `அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள் நேரில் வந்து முதல்வரைச் சந்தித்துப் பேசினால், மகா விகாஸ் அகாதி கூட்டணி அரசிலிருந்து வெளியேறத் தயார்’ என்றிருக்கிறது சிவசேனா!

மகாராஷ்டிராவில் ஆட்சியை பறிக்கிறதா பா.ஜ.க?

அடுத்து என்ன நடக்கும்?

பா.ஜ.க தலைவர் தேவேந்திர பட்னாவிஸ், ஷிண்டே முகாமிலுள்ள எம்.எல்.ஏ-க்களின் ஆதரவோடு ஆட்சியைப் பிடிப்பதற்கான திட்டங்களைத் தீட்டிவருவதாக பா.ஜ.க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த ஆளுநரிடம் கோரிக்கைவைக்கவும் பா.ஜ.க திட்டமிட்டுவருகிறது. ஷிண்டே முகாமிலுள்ள சிலர் மாற்றி வாக்களிக்க வாய்ப்பிருப்பதால், சுயேச்சை எம்.எல்.ஏ-க்களின் ஆதரவைத் திரட்டும் வேலைகளிலும் பா.ஜ.க இறங்கியிருக்கிறதாம். ஒருவேளை, ஏக்நாத் ஷிண்டே முதலமைச்சர் பதவியைக் கோரினால் என்ன செய்வதென்ற விவாதங்களும் பா.ஜ.க-வுக்குள் ஓடிக்கொண்டிருக்கிறதாம்.

`பா.ஜ.க-வுக்கு ஆதரவளித்தால் மீண்டும் உத்தவ்வுடன் கைகோக்கத் தயார்’ என்று ஷிண்டே தரப்பிலிருந்து உத்தவ் தாக்கரேவுக்குத் தூது வந்ததாகத் தெரிகிறது. ஆனால், `நமக்கு துரோகம் செய்த பா.ஜ.க-வுக்கு எப்போதும் ஆதரவு தர முடியாது’ என உத்தவ் உறுதியாக இருப்பதாகக் கூறப்படுகிறது. அதேசமயம், ஷிண்டே சமரசத்துக்கு வரும் பட்சத்தில், கட்சியைக் காப்பாற்ற, மகா விகாஸ் அகாதி கூட்டணியிலிருந்து வெளியேறுவதோடு, சட்டமன்றத்தையும் கலைத்துவிட்டு, உத்தவ் மறு தேர்தல் கோர வாய்ப்பிருப்பதாகச் சொல்கிறார்கள் சிவசேனா தரப்பில். அதேசமயம், ஷிண்டே அல்லது தேசியவாத காங்கிரஸ் இரண்டில் ஏதேனும் ஒரு கூட்டணியின் மூலம் ஆட்சியைப் பிடிக்கும் திட்டத்திலிருக்கிறது பா.ஜ.க.

இந்த இதழ் அச்சுக்குச் செல்லும் வரையிலான நிலவரம் இது. மகாராஷ்டிர அரசியலில் அடுத்தடுத்து திருப்பங்கள் ஏற்பட்டுக் கொண்டேயிருப்பதால், இதழ் உங்கள் கைகளுக்குக் கிடைக்கும்போது மகாராஷ்டிராவில், பா.ஜ.க ஆட்சியமைத்திருந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. “அவ்வளவு ஏன்... உத்தவ்வே பா.ஜ.க பக்கம் சாய்ந்தால்கூட அதில் ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை. அரசியலில் எதுவும் நடக்கலாம்” என்கிறார்கள் மகாராஷ்டிர அரசியல் பார்வையாளர்கள்!