Published:Updated:

ரஜினியின் ‘பாச்சா’ பலிக்குமா?

ரஜினிகாந்த்
பிரீமியம் ஸ்டோரி
ரஜினிகாந்த்

ரஜினியைச் சுற்றி என்ன நடக்கிறது?

ரஜினியின் ‘பாச்சா’ பலிக்குமா?

ரஜினியைச் சுற்றி என்ன நடக்கிறது?

Published:Updated:
ரஜினிகாந்த்
பிரீமியம் ஸ்டோரி
ரஜினிகாந்த்

‘அன்பும், ஒற்றுமையும், அமைதியுமே பிரதான நோக்கமாக இருக்க வேண்டும் என்ற அவர்களின் கருத்தை நானும் ஆமோதிக்கிறேன். நாட்டில் அமைதியை நிலைநாட்ட, என் தகுதிக்கு உட்பட்ட அனைத்தையும் செய்யத் தயாராக இருக்கிறேன்’ - இஸ்லாமிய மதகுரு அமைப்பான ஜமா அத்துல் உலமா சபை நிர்வாகிகள் சந்திப்புக்குப் பிறகு இப்படி ட்வீட் செய்திருந்தார் ரஜினிகாந்த். சமீபகாலமாகவே பா.ஜ.க-வுக்கு ஆதரவான நபராக ரஜினியை உருவகித்து செய்திகள் வந்த நிலையில், இஸ்லாமிய அமைப்பினர்களின் சந்திப்பும் அதற்கு ரஜினியின் ரியாக்‌ஷனும் தமிழக அரசியல் களத்தை விறுவிறுப்பாக்கியுள்ளன.

ரஜினியைச் சுற்றி என்ன நடக்கிறது?

மத்திய அரசு கொண்டுவந்த சி.ஏ.ஏ சட்டத்துக்கு ஆதரவாக ரஜினிகாந்த் முதலில் குரல்கொடுத்தது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியது. ‘‘சி.ஏ.ஏ-வால முஸ்லிம்களின் குடியுரிமைக்கு எந்தப் பாதிப்பும் இருக்கா துன்னு தெளிவா சொல்லிட்டாங்க. அப்படி முஸ்லிம்களுக்கு ஏதாவது பாதிப்பு வந்தா, முதல் ஆளா குரல்கொடுப்பேன். ஆனா, சில அரசியல் கட்சிகள் அவங்க சொந்த லாபத்துக்காகத் தூண்டிவிடுறாங்க. இதுக்கு மதகுருமார்களும் துணைபோறாங்க’’ என்று பேட்டியளித்துவிட்டு ஷூட்டிங்குக்குப் பறந்துவிட்டார் ரஜினி.

ரஜினியின் இந்தக் கருத்து, பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ‘பா.ஜ.க-வின் ஊதுகுழலாக ரஜினி செயல் படுகிறார்’ என்ற விமர்சனங்கள் முன்பைவிட கடுமையாக முன்வைக்கப்பட்டன. ‘மதகுருமார்கள் பிரச்னையைத் தூண்டிவிடுகிறார்கள்’ என்று ரஜினி குறிப்பிட்டதும், தமிழக ஜமா அத்துல் உலமா சபை ஹைதராபாத் ஷூட்டிங்கில் இருந்த ரஜினிக்கு விளக்கமாக ஒரு கடிதம் எழுதியது. அதில் அவர்கள் எந்த நிலைப்பாட்டில் இந்தச் சட்டத்தை எதிர்க்கின்றனர் என்பதைத் தெளிவாகக் குறிப்பிட்டிருந்தனர். அப்போது தன் உதவியாளர் மூலம் ஜமா அத்துல் உலமா சபை நிர்வாகிகளைத் தொடர்புகொண்ட ரஜினி, சென்னை திரும்பிய பிறகு அவர்களைச் சந்திப்பதாகக் கூறியிருக்கிறார்.

இதற்கிடையே டெல்லியில் சி.ஏ.ஏ-வுக்கு எதிரான போராட்டக்களத்தில் வன்முறை வெடித்து பலர் உயிரிழந் தனர்; பலருடைய உடைமைகள் தீக்கிரையாகின. இதற்கு ரஜினி என்ன கருத்து சொல்வார் என அனைத்துத் தரப்பினரும் ஆர்வமுடன் எதிர்பார்த் திருந்த நிலையில், ஷூட்டிங் முடிந்து சென்னை திரும்பிய ரஜினி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, ‘‘மத்திய அரசு, எவ்வளவு ஜாக்கிரதையாக இருந்திருக்க வேண்டும்! மத்திய அரசின் உளவுத் துறையும் உள்துறை அமைச்சகமும் இந்த விஷயத்தில் தோல்வியடைந்து விட்டன’’ என்று சொல்லி பரபரப்புக் கிளப்பினார் ரஜினி.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கமலின் கணக்கு

இன்னொரு பக்கம்... ரஜினியின் நீண்டநாள் நண்பரான கமல், வரும் சட்டமன்றத் தேர்தலில் ரஜினியுடன் இணைந்து பயணிக்கத் திட்டமிட்டு வருகிறார். ஆனால், ரஜினியின் பா.ஜ.க ஆதரவு முகத்தால் முடிவெடுக்க முடியாமல் கமல் திணறினார். இந்த நிலையில் மத்திய அரசுக்கு எதிராக மீண்டும் பிப்ரவரி 25-ம் தேதி ரஜினி கருத்து சொன்னதும் உற்சாகமான கமல் அடுத்த நிமிடமே, ‘சபாஷ் நண்பர் ரஜினி அவர்களே, அப்படி வாங்க. இந்த வழி நல்ல வழி, தனி வழி அல்ல. ஓர் இனமே நடக்கும் ராஜபாட்டை. வருக, வாழ்த்துகள்’ என்று உற்சாகமாகக் கருத்து தெரிவித்தார். அதற்கு இரண்டு தினங்களுக்குப் பிறகு செய்தியாளர் களைச் சந்தித்த கமல், ‘`ரஜினிகாந்தும் நானும் தமிழகத்தின் மேம்பாடுகுறித்து பேசிக்கொண்டிருக்கிறோம்’’ என்றார்.

இஸ்லாமிய அமைப்பினர் ரஜினியுடன் சந்திப்பு
இஸ்லாமிய அமைப்பினர் ரஜினியுடன் சந்திப்பு

இப்படி பரபரப்பான அரசியல் சூழலுக்கு இடையேதான் பிப்ரவரி 29-ம் தேதி ரஜினி தரப்பிலிருந்து இஸ்லாமிய மதகுருமார்களைச் சந்திக்கலாம் என திட்டமிடப்பட்டது. கராத்தே தியாகராஜன்மூலம் இஸ்லாமிய குருமார்கள் தரப்புக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. மார்ச் 1-ம் தேதியன்று ஜமா அத்துல் உலமா சபையின் நிர்வாகிகள் ஐந்து பேர் ரஜினி வீட்டுக்கு வந்தனர். அந்தச் சந்திப்பின்போது, ‘‘இந்திய நாட்டின் மக்கள்தொகை 130 கோடி ஆகிவிட்டது. இதில் வேறு நாட்டினர் நம் நாட்டுக்குள் வந்தால் பல சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அதனாலேயே அந்தச் சட்டத்தை ஆதரித்தேன்’’ என்று ரஜினி சொல்லியிருக்கிறார்.

அப்போது இஸ்லாமிய அமைப்பினர், ‘‘சி.ஏ.ஏ-வில் இஸ்லாமியர்களைப் புறக்கணித்திருக்கிறார்கள். ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய நாடுகளின் முஸ்லிம்களைத் தவிர்த்து பிற சமூகங்களுக்கு மட்டும் குடியுரிமை உண்டு எனச் சொல்லப்பட்டிருக்கிறது. இதில் மதரீதியான உள்நோக்கம் உள்ளது’’ என்று ரஜினியிடம் விளக்கியிருக்கின்றனர். அதற்கு ரஜினி தரப்பில், ‘‘சி.ஏ.ஏ விவகாரத்தில் உங்கள் தரப்பு வாதங்கள் இப்போதுதான் புரிகின்றன. இனி இந்த விவகாரத்தில் நீங்கள் எடுக்கும் ஆக்கபூர்வமான காரியங்களுக்கு உறுதுணையாக இருப்பேன். என்னால் என்ன செய்ய முடியுமோ அதை கண்டிப்பாகச் செய்வேன்’’ என்று உறுதியளித்துள்ளார்.

இஸ்லாமிய மதகுருக்களைச் சந்தித்ததுபோலவே இன்னும் சில தினங்களில் கிறிஸ்துவ பிஷப்களைச் சந்திக்கும் திட்டத்திலும் ரஜினி இருக்கிறார்.

ஸ்டாலினுக்கு செக்கா?

ரஜினியுடன் இஸ்லாமிய மதகுருமார்கள் சந்திப்பு நடந்த மார்ச் 1-ம் தேதிதான் ஸ்டாலினின் பிறந்த நாள். அன்று, ஸ்டாலின் பிறந்த நாளைவிட இந்தச் சந்திப்பே பரபரப்பாகப் பேசப்பட்டது. இதிலும் ரஜினியின் உள் அரசியல் இருக்கிறது என்கிறார்கள். இதுகுறித்து நம்மிடம் பேசிய ரஜினியின் முகாமைச் சேர்ந்தவர்கள், ‘‘தி.மு.க-வுக்கு எதிராகத்தான் இனி தனது அரசியல் பயணம் என்று ரஜினி முடிவுசெய்துவிட்டார். ‘ஏற்கெனவே தி.மு.க-வுக்கு இணக்கமாக இருக்கும் கணிசமான இஸ்லாமியர்கள், தற்போது சி.ஏ.ஏ உள்ளிட்ட விவகாரங்களால் தி.மு.க பின்னால் பெரியளவில் அணிதிரண்டுள்ளனர். அந்த வாக்குகளை உடைத்தால் மட்டுமே தி.மு.க-வுக்கு நெருக்கடி ஏற்படுத்த முடியும்’ என்று ரஜினியிடம் சிலர் சொல்லியிருக்கின்றனர். இதன் தொடர்ச்சியாகவே ஸ்டாலின் பிறந்த நாள் அன்று இந்தச் சந்திப்பை நடத்தி ஸ்டாலினுக்கு உஷ்ணத்தை ஏற்படுத்தியிருக்கிறார்’’ என்றார்கள்.

இஸ்லாமிய அமைப்பினர் ரஜினியுடன் சந்திப்பு
இஸ்லாமிய அமைப்பினர் ரஜினியுடன் சந்திப்பு

பதற்றத்தில் பா.ஜ.க

இந்த விஷயத்தைவைத்து, ‘‘பா.ஜ.க-வுக்கு ரஜினி கிலி கொடுக்க ஆரம்பித்துவிட்டார். உண்மையில் தமிழக அரசியல் களத்துக்கு ரஜினியைக் கொண்டுவர வேண்டும் என்பதில் பா.ஜ.க தரப்புதான் ஆரம்பம் முதலே ஆர்வமாக இருந்தது. ஆடிட்டர் குருமூர்த்தி தரப்பினர் ரஜினியுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் இருந்தனர். இந்த நிலையில்தான், டெல்லி கலவரம் தொடர்பாக மத்திய அரசைக் கண்டித்துப் பேசி பா.ஜ.க-வினருக்கு முதல் ஷாக் கொடுத்தார் ரஜினி. அடுத்த இரண்டொரு நாள்களிலேயே முஸ்லிம் மதகுருமார்கள் சந்திப்பு நடந்திருக்கிறது. இதன்மூலம் பா.ஜ.க-வுடன் இணைந்து செயல்பட முடியாது என்பதை அந்தக் கட்சிக்கு சூசகமாகத் தெரிவித்து விட்டார்” என்று ஒரு தரப்பினர் பா.ஜ.க-வைப் பதறவைக்க முயல்கின்றனர்.

அதேசமயம், “இதுவும் பா.ஜ.க - ரஜினி இருவரும் பேசிவைத்து நடத்தும் உள்ளே வெளியே நாடகமே! தமிழகத்தைப் பொறுத்தவரை எந்த மாதிரி அரசியல் சரிப்பட்டுவரும் என்று பா.ஜ.க இன்னமும் தெளிவானதொரு முடிவுக்கு வர முடியாமல் தவிக்கிறது. பற்பல மாதிரித் திட்டங்களைச் செயல்படுத்திப் பார்க்கிறது. அந்த வகையில் இதுவும் ஒரு புது முயற்சியே” என்று மற்றொரு தரப்பினர் சொல்லிச் சிரிக்கிறார்கள்.

இதற்கிடையே ரஜியுடன் அணி சேரும் கட்சிகளின் பட்டியல் குறித்த தகவல்களும் தினமும் பரவிவருகின்றன. பா.ம.க தரப்பு கிட்டத்தட்ட பச்சைக்கொடி காட்டிவிட்டது என்கிறார்கள். காங்கிரஸ் தரப்பிலும் சிலர் பேசிவருகின்றனர்.

மாநகரங்கள் தொடங்கி குக்கிராமங்கள் வரை பலமான உள்கட்டமைப்புகளைக் கொண்டிருக்கும் அ.தி.மு.க மற்றும் தி.மு.க ஆகிய இரு கட்சிகளையும் வீழ்த்த கூட்டணிக் கட்சிகள் மட்டுமன்றி அனைத்துச் சமூக மக்களின் ஆதரவும் ரஜினிக்குத் தேவை. ஏற்கெனவே தன்னை ஓர் ஆன்மிகவாதியாக வலுவாகக் கட்டமைத்துக்கொண்டுவிட்டார். சின்னக்கட்சிகள், நடுத்தரமான கட்சிகள் எனப் பல கட்சிகளையும் தன் கவனிப்பில் வைத்திருக்கிறார். அடுத்த கட்டமாக, இஸ்லாம், கிறிஸ்துவம் என மத அமைப்புகள், மதவாதக் கட்சிகளையும் வரிசையாகக் கவனிக்க ஆரம்பித்துள்ளார். இப்படி தமிழக அரசியல் களத்தில் காய்களை கவனமாக நகர்த்திவருகிறார் ரஜினி.

எல்லாம் சரி... ரஜினி, கட்சியை அறிவிப்பாரா அல்லது அடுத்த பட ஷூட்டிங்குக்குக் கிளம்பிவிடுவாரா என்பதே அவரை நம்பும் கட்சிகள் மற்றும் அமைப்புகளின் கேள்வி.

இஸ்லாமிய அமைப்பினர் ரஜினியுடன் சந்திப்பு
இஸ்லாமிய அமைப்பினர் ரஜினியுடன் சந்திப்பு

இதற்கும் விடை தருவதுபோல், “தற்போது சன் டி.வி தயாரிப்பில் ரஜினி நடித்துவரும் ‘அண்ணாத்த’ படம்தான் அவருக்குக் கடைசிப் படம். மேற்கொண்டு படங்களை அவர் ஒப்புக்கொள்ளவில்லை” என்கிற செய்தியையும் சிறகடிக்கவிட்டுள்ளனர். ஆன்மிக அரசியலை ஆரம்பித்த மாணிக்கம், தற்போது பாஷா பாய் வேஷம்கட்ட ஆரம்பித்துள்ளார். அடுத்தடுத்து, பல்வேறு பாய்ச்சல்களுக்கும் தயாராகிவருகிறார். அவரது பாச்சா பலிக்குமா என்பதை, பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!