அலசல்
அரசியல்
Published:Updated:

திவால் ஆகிறதா புதுச்சேரி அரசு?

புதுச்சேரி
பிரீமியம் ஸ்டோரி
News
புதுச்சேரி

அரசு ஊழியர்களுக்கு சம்பள பாக்கி... மருந்து சப்ளை நிறுத்தம்... ஆம்புலன்ஸுக்கு டீசல் வாங்க பணம் இல்லை

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண் பேடிக்கும், முதல்வர் நாராயணசாமிக்குமிடையே நடக்கும் அதிகார மோதல் மற்றும் ஆளுங்கட்சியின் நிர்வாகத் திறமையின்மை உள்ளிட்ட காரணங்களால், புதுச்சேரி அரசு திவாலாகும் சூழல் உருவாகியிருப்பதாகக் கதறுகிறார்கள் புதுச்சேரி மக்கள்.

2016-ம் ஆண்டு புதுச்சேரியில் நடைபெற்ற சட்டமன்ற பொதுத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்றவுடன், துணைநிலை ஆளுநராக கிரண் பேடியை களம் இறக்கியது மத்திய பா.ஜ.க அரசு. தொடர்ந்து நாராயணசாமி, முதல்வர் ஆகி மூன்றரை ஆண்டுகள் முடிந்துவிட்டன. இன்று வரை கிரண் பேடிக்கும் நாராயணசாமிக்கும் இடையேயான அதிகாரப் போட்டிதான் உச்சத்தில் இருக்கிறதே தவிர, மாநிலத்தில் எந்த வளர்ச்சித் திட்டங்களும் நடைபெறவில்லை. நிதி நெருக்கடியாலும் கடன் சுமையாலும் அதல பாதாளத்தில் தள்ளப்பட்டுள்ளது புதுச்சேரியின் எதிர்காலம்.

கிரண் பேடி, நாராயணசாமி
கிரண் பேடி, நாராயணசாமி

ஆனால், நாராயணசாமிக்கும் ஆளுநர் கிரண் பேடிக்கும் இதைப்பற்றியெல்லாம் கவலை இல்லை. தொட்டதற்கெல்லாம் பரஸ்பரம் குற்றம்சாட்டிக் கொள்வதிலேயே காலத்தைக் கழிக்கிறார்கள். அரசு மற்றும் அதன் சார்பு நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் சுமார் 10,000 பேருக்கு குறைந்தபட்சம் பத்து மாதங்களாகவும், அதிகபட்சம் ஐந்து ஆண்டு

களாகவும் சம்பளம் வழங்கப்படவில்லை. அதனால் இதுவரை 160 பேர் தற்கொலை செய்துகொண்டனர் எனக் குற்றம் சுமத்துகின்றன தொழிற்சங்கங்கள். புதுச்சேரியின் வீதிகள், போராட்டங்களின் நிரந்தரமான கூடாரங்களாக மாறிவிட்டன.

அரசிடம் முறையான தொழில்கொள்கைகள் இல்லாததால், பெரிய தொழிற்சாலைகள் அனைத்தும் மூட்டைகட்டிவிட்டன. அரசின் தொழிற்பேட்டைகளில் எலிகள் விளையாடிக் கொண்டிருக்கின்றன. 20-க்கும் மேற்பட்ட பொதுத்துறை நிறுவனங்கள் முடங்கிக் கிடக்கின்றன. பட்ஜெட்டில் ஒதுக்கப்படும் நிதியில் 75 சதவிகிதம் அரசு ஊழியர்களின் சம்பளத்துக்கும் ஓய்வூதியத்துக்குமே சென்றுவிடுவதால், மற்ற செலவினங்களுக்கு அரசின் பிணையப்பத்திரங்கள் ஏலத்தில் விடப்படுகின்றன.

திவால் ஆகிறதா புதுச்சேரி அரசு?

அரசு மருத்துவமனைகளில் மருந்து சப்ளை செய்யும் நிறுவனங்களுக்கு பல கோடி ரூபாய் வரை பாக்கி வைத்திருப்பதால், அந்த நிறுவனங்கள் மருந்து சப்ளையை நிறுத்திவிட்டன. `மருந்துகளை வெளியே வாங்கிக்கொள்ளுங்கள்’ என்று நோயாளிகளிடம் கூறிவந்த அரசு மருத்துவ மனைகள், ஒரு படி மேலே சென்று ‘மருந்துகள் இல்லை’ என்று வாசலில் போர்டு வைக்கும் அளவுக்குச் சென்றுவிட்டன.

டீசல் வாங்க பணம் இல்லாததால் ஆம்புலன்ஸுகள் இயக்கப்படுவதில்லை. போதுமான மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் இல்லாததால் ஆரம்ப சுகாதார நிலையம் அளவுக்கு சுருங்கிக் கிடக்கிறது புதுச்சேரி அரசு மருத்துவமனை.

நகர் பகுதிகளில் விநியோகிக்கப்படும் குடிநீர், உப்புநீராக மாறி பல ஆண்டுகளாகிவிட்டன. அதனால் ஒருங்கிணைந்த குடிநீர் திட்டத்துக்காக பிரெஞ்சு அரசு 454 கோடி ரூபாய் கொடுக்க முன்வந்து, அதற்காக 2017-ம் ஆண்டு ஒப்பந்தமும் போடப்பட்டது. ஆனால், போர்வெல்கள் அமைக்க அரசிடம் நிதி இல்லாததால் அந்தத் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. குண்டும்குழியுமாகக் கிடக்கும் சாலைகளால் நாள் ஒன்றுக்கு குறைந்தது பத்துக்கும் மேற்பட்ட விபத்துகள் நிகழ்கின்றன. நிதி நெருக்கடியைச் சமாளிக்கத் தெரியாமல் மக்கள்மீது வரிச்சுமைகளை பல மடங்கு ஏற்றிவிட்டது அரசு. `மின்சாரக் கட்டணங்கள் மிக அதிகம்’ எனப் புலம்புகின்றனர் மக்கள். அவ்வளவு ஏன்... வேகத்தடைகளுக்கு பெயின்ட் அடிக்கக்கூட அரசிடம் நிதி இல்லை. அதனால் ஏற்பட்ட விபத்துகளால் இதுவரை இருவர் உயிரிழந்தனர்.

திவால் ஆகிறதா புதுச்சேரி அரசு?

காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறி தனிக்கட்சி தொடங்கிய ரங்கசாமி, 2011-ல் ஆட்சியைப் பிடித்தார். அப்போது மத்திய இணை அமைச்சராக இருந்த நாராயணசாமியின் நண்பர் கட்டாரியா, புதுச்சேரிக்கு ஆளுநராக நியமிக்கப்பட்டார். வந்த வேகத்தில் ஆய்வுகள், பொதுமக்கள் குறை கேட்பு என, கட்டாரியாவின் அதிரடிகளால் கதறினார் ரங்கசாமி. அப்போது “கவர்னர், தன் அதிகாரத்தின்படிதான் செயல்படுகிறார். யூனியன் பிரதேசங்களில் கவர்னருக்கே அதிகாரம் உண்டு. மாநில அரசு அவருடன் இணக்கமான போக்கைத்தான் கடைப்பிடிக்க வேண்டும்” என்று கூறிய நாராயணசாமிதான் தற்போது, “அரசின் அன்றாட நடவடிக்கைகளில் தலையிட்டு ஆளுநர் கிரண் பேடி தொல்லை கொடுக்கிறார்” என்று குற்றம்சாட்டுகிறார்.

குறு, சிறு தொழில்கள் படுத்துவிட்டதால் மக்கள் தமிழகத்தை நோக்கி புலம்பெயரத் தொடங்கிவிட்டதை, நகர்ப்புறங்களில் தொங்கும் ‘டுலெட்’ பலகைகள் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. மொத்தத்தில், புதுச்சேரி அறிவிக்கப்படாத திவால் அரசாகக் காட்சியளிக்கிறது என்று விமர்சிக்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.