பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

உள்ளாட்சி உள்குத்துகளும் கூட்டணி குழப்பங்களும்!

Amit Shah
பிரீமியம் ஸ்டோரி
News
Amit Shah

தி.மு.க-வுக்கு எதிர்நிலையில் இருக்கும் அ.தி.மு.க முகாமும் அமைதியற்ற சூழலில்தான் இருக்கிறது.

சொல்லிவைத்தாற்போல, இரண்டு கட்சிக் கூட்டணிகளிலும் விரிசல்களும் உரசல்களும் ஆரம்பித்துவிட்டன. அதற்கான பின்னணி என்ன என ஆராய்ந்தால் கொட்டுகின்றன தகவல்கள்!

கழகக் கூட்டணியில் கலகம்!

மக்களவைத் தேர்தலில் மாபெரும் வெற்றியைப் பெற்ற தி.மு.க கூட்டணியில், விரிசலுக்கு விதைபோட்டது ஊரக உள்ளாட்சித்தேர்தல். கே.எஸ்.அழகிரி அறிக்கையில் ஆரம்பித்த உரசல், இரண்டு தரப்பிலும் சில அதிர்வலைகளை ஏற்படுத்தியபின், ஸ்டாலினின் அறிக்கையில் கொஞ்சம் அணைந்திருக்கிறது.

‘இயற்கையான கூட்டணி’ என்று சொல்லப்படும் தி.மு.க தலைமையிலான கூட்டணியிலேயே இப்படி என்றால் தாமரை–இலை தண்ணீராக ஒட்டிக்கொண்டிருக்கும் அ.தி.மு.க – பா.ஜ.க கூட்டணியைப் பற்றி கேட்க வேண்டியதில்லை. முதலில் தி.மு.க கூட்டணியைப் பார்ப்போம்...

நெருப்பைப் பற்றவைத்த நேரு!

கடந்த மக்களவைத் தேர்தலில் 38 தொகுதிகளை அள்ளியதால் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலிலும் தி.மு.க கூட்டணியே வெற்றிபெறும் என்று ஒரு எதிர்பார்ப்பு எழுந்திருந்தது. இதற்கிடையில்தான், தி.மு.க சார்பில் திருச்சியில் நடைபெற்ற ஓர் ஆர்ப்பாட்டத்தில், “இன்னும் எத்தனை காலம்தான் காங்கிரஸ் கட்சிக்குப் பல்லாக்குத் தூக்குவது?” என்று பேசி, கூட்டணிக் கூட்டில் நெருப்பைப் பற்றவைத்தார் கே.என்.நேரு.

உள்ளாட்சி உள்குத்துகளும் கூட்டணி குழப்பங்களும்!
உள்ளாட்சி உள்குத்துகளும் கூட்டணி குழப்பங்களும்!

அதன்பிறகு கடந்த மாதம் தமிழகத்தின் 27 மாவட்டங்களில் நடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் இடங்களைப் பங்கிட்டுக்கொள்வதில் மோதல் வெடித்தது. “கூட்டணி தர்மத்தைத் தி.மு.க மீறிவிட்டது” என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி மற்றும் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றத் தலைவர் கே.ஆர்.ராமசாமி ஆகியோர் வெளியிட்ட காட்டமான அறிக்கை கூட்டணிக்குள் அனலை மூட்டியது. அது, மறைமுகத்தேர்தலில் எதிரொலித்தது. பல மாவட்டங்களில் தி.மு.க கவுன்சிலர்கள் பெரும்பான்மையாக இருந்தும் மாவட்ட பஞ்சாயத்துத் தலைவர் பதவியைத் தி.மு.க-வால் பிடிக்க முடியவில்லை. காங்கிரஸ் கவுன்சிலர்கள் மாற்றி வாக்களித்ததே அதற்குக் காரணம். கோபமடைந்தது தி.மு.க தலைமை. கே.எஸ்.அழகிரி சமாதான அறிக்கை வெளியிட்டும் சரியாகவில்லை. குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக சோனியா காந்தி தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக்கூட்டத்தை தி.மு.க புறக்கணித்தது.

டெல்லிக்கு அழைக்கப்பட்டார் அழகிரி. சோனியாவைச் சந்தித்த பின், “தி.மு.க – காங்கிரஸ் கூட்டணி பிரிவதற்கு வாய்ப்பே இல்லை” என்று பேட்டியளித்தார். அதேநாளில் சென்னையில் பேட்டியளித்த தி.மு.க-வின் முதன்மைச் செயலாளர் டி.ஆர்.பாலுவோ, “தி.மு.க – காங்கிரஸ் கூட்டணி பழைய நிலைக்குத் திரும்புமா என்பதற்குக் காலம்தான் பதில் சொல்ல வேண்டும்” என்றார். தி.மு.க பொருளாளர் துரைமுருகனோ, “கூட்டணியில் காங்கிரஸ் இருக்கிறதா என்பது சந்தேகமான நிலையில் இருக்கிறது. காங்கிரஸ் கட்சிக்கு வாக்குவங்கி இல்லை” என்று கொளுத்திப்போட, மீண்டும் பிரச்னை பற்றியெரிந்தது. உடனே, “தலை இருக்கும்போது வால் ஆடக்கூடாது” என்று பாய்ந்தார் காங்கிரஸ் எம்.பி-யான ஜெயக்குமார். “துரைமுருகனுக்கு ஞாபக சக்தி குறைந்துவிட்டது” என்று காங்கிரஸின் மாநிலச் செயல் தலைவரான மோகன்குமாரமங்கலமும், “வேலூர் இடைத் தேர்தலுக்கு முன்னர் துரைமுருகனுக்கு ஏன் இந்த ஞானம் வரவில்லை?” என்று காங்கிரஸ் எம்.பி-யான கார்த்தி சிதம்பரமும் விமர்சித்தனர். இரு தரப்பினரிடையே வார்த்தைப்போர் உக்கிர மடைந்த நிலையில், “கூட்டணி குறித்த கருத்துகளை இரு கட்சியினரும் பொதுவெளியில் தெரிவிப்பதைத் தவிர்க்க வேண்டும்” என்று மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டதன் மூலமாக முடிவுக்கு வந்திருக்கிறது கூட்டணி உரசல்.

இந்த மோதல் நடந்தபோதுதான், தி.மு.க கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகி அ.தி.மு.க-வுடன் கூட்டணி சேர வாய்ப்புள்ளது என்று செய்திகள் பரவின. அதுபற்றி அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, “தேவையற்ற சுமை என்று தி.மு.க கூறிய பிறகு தன்மானத்துடன் இருப்பது குறித்து காங்கிரஸ்தான் முடிவுசெய்ய வேண்டும்” என்றார். “அ.தி.மு.க-வுடன் காங்கிரஸ் சேர வாய்ப்பு உண்டா?” என்ற கேள்விக்கு, “அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம்” என்றார் ஜெயக்குமார்.

இந்த விவகாரம் குறித்து மூத்த பத்திரிகையாளர் மணியிடம் நாம் கேட்டோம்.

“மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியில் இருக்கும் பிராந்தியக் கட்சிகளை மோடி அரசு மறைமுகமாக நிர்பந்தப்படுத்தி வருகிறது. அப்படியான நிர்பந்தம் தி.மு.க மீதும் இருக்கிறது. அதன் வெளிப்பாடாகவும் காங்கிரஸ்–தி.மு.க உரசலைப் பார்க்கலாம். நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சிக்கு 52 எம்.பி-க்கள்தான் உள்ளனர். 24 எம்.பி-க்களுடன் நாடாளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சியாகத் தி.மு.க இருக்கிறது. இந்நிலையில், கூட்டணியை விட்டு தி.மு.க விலகினால், அது காங்கிரஸ் கட்சிக்குத்தான் பலவீனம். ஆகவே, கூட்டணி நீடிக்க வேண்டும் என்று காங்கிரஸ் நினைக்கிறது. ஆனாலும், வரவிருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க-வும் காங்கிரஸும் ஒரே கூட்டணியில் இருக்குமா என்பதை இப்போதே உறுதியாகச் சொல்ல முடியாது” என்றார்.

அங்கேயும் அப்படித்தான்!

தி.மு.க-வுக்கு எதிர்நிலையில் இருக்கும் அ.தி.மு.க முகாமும் அமைதியற்ற சூழலில்தான் இருக்கிறது. தமிழகத்தில் எப்படியாவது காலூன்றிவிட வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கும் பா.ஜ.க., அ.தி.மு.க-வை உடும்புப் பிடியாகப் பிடித்திருக்கிறது. ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள அ.தி.மு.க-வுக்கு பா.ஜ.க-வின் தயவு தேவைப்படுகிறது. இவர்களுக்குள் மக்களவைத் தேர்தலுக்கு முன்பே மோதல் ஆரம்பமாகிவிட்டது. “தமிழகத்தில் பா.ஜ.க -வைத் தூக்கிச்சுமக்க நாங்கள் என்ன பாவமா செய்தோம்?” என்று அ.தி.மு.க-வின் மூத்த தலைவர்களில் ஒருவரான தம்பிதுரை கொந்தளித்ததன் மூலம் இந்தக் கூட்டணி ஆட்டம் கண்டது.

ரஜினிகாந்த்
ரஜினிகாந்த்

தமிழகத்தில் செல்வாக்கு இல்லாத கட்சி பா.ஜ.க என்று நினைக்கும் அ.தி.மு.க-வினர், பா.ஜ.க-வுடன் கூட்டணி வைத்தால் சிறுபான்மையினர் வாக்குகள் தங்களுக்குக் கிடைக்காது என்று அஞ்சுகிறார்கள். அந்த அச்சம் நியாயமானது என்பதை மக்களவைத் தேர்தலே உறுதிசெய்தது. தமிழகத்தில் வீசிய பா.ஜ.க எதிர்ப்பலையால், ஒரேயொரு தொகுதியில் மட்டுமே அ.தி.மு.க வெற்றிபெற்றது. உள்ளாட்சித் தேர்தலில் பா.ஜ.க கழற்றிவிடப்படலாம் என்ற எதிர்பார்ப்பு அ.தி.மு.க தொண்டர்களிடம் இருந்தது. அது நடக்கவில்லை.

மத்தியில் ஆட்சியதிகாரத்தில் இருக்கும் பா.ஜ.க-வின் உடும்புப்பிடியிலிருந்து அ.தி.மு.க-வால் அவ்வளவு எளிதாக விலகிச்சென்றுவிட முடியாது. கடந்த மாதம் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலிலும் அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி தொடர்ந்தது. கிராமப்புறங்களில் அ.தி.மு.க-வுக்கு அதிக செல்வாக்கு இருந்தபோதிலும், அ.தி.மு.க-வைவிடக் கூடுதலான இடங்களில் தி.மு.க வெற்றிபெற்றது. அதேநேரம், முன் எப்போதும் இல்லாத அளவுக்குப் பல இடங்களில் பா.ஜ.க வெற்றிபெற்றது. அது, அ.தி.மு.க-வின் புண்ணியத்தால் கிடைத்த வெற்றி என்று பேசப்பட்டது. ஆனால், “பா.ஜ.க தனித்துப் போட்டியிட்டிருந்தால் இன்னும் அதிக இடங்களை ஜெயித்திருப்போம்” என்று பா.ஜ.க-வின் மூத்த தலைவரான பொன்.ராதாகிருஷ்ணன் பேசினார். “இப்படிப் பேசுவது கூட்டணி தர்மத்துக்கு அழகல்ல” என்று பதிலடி கொடுத்தார் அமைச்சர் ஜெயக்குமார்.

மக்களவைத் தேர்தலிலும் ஊரக உள்ளாட்சித் தேர்தலிலும் பா.ஜ.க கூட்டணியால்தான் தங்களுக்குச் சிறுபான்மையினரின் வாக்குகள் கிடைக்கவில்லை என்ற அதிருப்தி அ.தி.மு.க-வில் இருக்கிறது. அதன் வெளிப்பாடாகத்தான், “கூட்டணியிலிருந்து பா.ஜ.க விலகிச்சென்றால், அது அ.தி.மு.க-வுக்கு பம்பர் பிரைஸ்” என்று அதிரடி காட்டினார் அ.தி.மு.க-வின் மூத்த தலைவரான அன்வர்ராஜா. ஒருபுறம், பா.ஜ.க-வுடனான கூட்டணிக்கு எதிரான அலை அ.தி.மு.க-வுக்குள் வீசிக்கொண்டிருக்க, மற்றொருபுறம் அ.தி.மு.க-வுக்கு எதிராகப் பொங்கியெழுந்தார் பா.ம.க-வின் இளைஞரணித் தலைவர் அன்புமணி.

“கூட்டணி வேண்டாம் என்ற எங்களின் கொள்கையை மீறி அ.தி.மு.க-வுடன் கூட்டணி வைத்தோம். ஆனால், அதற்கான அங்கீகாரத்தை அ.தி.மு.க தரவில்லை. அரைச்சீட்டு, கால் சீட்டுக்கெல்லாம் அவர்களிடம் கெஞ்ச வேண்டியிருந்தது. கூட்டணியில் பா.ம.க இடம்பெற்றிருக்காவிட்டால், அ.தி.மு.க ஆட்சி தொடர்ந்திருக்காது” என்று அன்புமணி சீறினார். பா.ம.க நிறுவனர் ராமதாஸ், “மூன்றாவது பெரிய கட்சியாக பா.ம.க வெற்றிபெற்றுள்ளது” என்றார். இதன் மூலம், அடுத்து வரவிருக்கும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கும் 2021-ல் நடக்கவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்கும் கூடுதல் சீட்டுகளைப் பெறுவதற்கு பா.ம.க. அடிபோட்டுள்ளது. அ.தி.மு.க கூட்டணியில் இருக்கிறதா இல்லையா என்பதே தெரியாத அளவுக்கு தே.மு.தி.க. தேய்ந்து கிடக்கிறது. விஜயகாந்த் மீண்டு வருவாரென்ற நம்பிக்கையை இழந்து கரைந்து கொண்டிருக்கிறது கட்சி.

நாளை எதிரொலிக்கும் நேற்று!

சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு இருக்கும்நிலையில், இரு அணிகளும் அப்படியே நீடிக்குமா என்பது சந்தேகமே. ஆனால் கூட்டணி நீடித்தாலும் சீட் ஒதுக்கீடு பெரும் பிரச்னையாக வெடிப்பது நிச்சயம். 2016 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க கூட்டணியில் காங்கிரஸுக்கு 41 இடங்கள் ஒதுக்கப்பட்டன. எட்டு இடங்களில் மட்டுமே காங்கிரஸ் வென்றது. காங்கிரஸுக்கு இடங்களைக் குறைத்துக்கொடுத்திருந்தால், நாம் கூடுதல் இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியைப் பிடித்திருக்கலாம் என்ற ஆதங்கம் தி.மு.க- வினருக்கு உண்டு. அதனால் வரும் தேர்தலில் காங்கிரஸுக்கு 41 இடங்களை தி.மு.க தரவாய்ப்பில்லை. வரும் சட்டமன்றத் தேர்தலில் 200 தொகுதிகளில் தி.மு.க வெற்றிபெறும் என்று மு.க.ஸ்டாலின் கூறியிருப்பது இங்கே கவனிக்கத்தக்கது. ரஜினி கட்சி ஆரம்பிக்கும் பட்சத்தில் இந்தக் கூட்டணிக் கணக்குகள் மாறலாம்.

ரவீந்திரன், சுமந்த்
ரவீந்திரன், சுமந்த்

வரும் சட்டமன்றத் தேர்தலில் களம் காணப்போவதாக அறிவித்துள்ள ரஜினி, எப்போது கட்சியைத் துவக்குவார் என்று தமிழகம் மட்டுமல்ல, இந்தியாவே எதிர்பார்க்கிறது. அதையொட்டி தமிழக அரசியலில் காய் நகர்த்தல்களும் துவங்கிவிட்டன. அ.தி.மு.க அணியை விட்டு பா.ஜ.க-வும், தி.மு.க அணியை விட்டு காங்கிரஸும் கழன்றுகொள்வதற்கு இரண்டு தேசியக்கட்சிகளும் எதிர்பார்க்கும் ஒரே விஷயம் ரஜினியின் அரசியல் ‘என்ட்ரி’தான் என்பது அரசியல் நோக்கர்களின் கருத்து.

இதுகுறித்து அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமியிடம் பேசினோம். “ரஜினிகாந்த்தை மையமாக வைத்துதான் தமிழக அரசியல் நகர்கிறது. வெளிப்படையாகத் தெரியாவிட்டாலும், அதுதான் உண்மை. தி.மு.க 200 தொகுதிகளுக்கு மேல் ஜெயிக்கும் என்று ஸ்டாலின் சொல்லியிருப்பதால் கூட்டணிக் கட்கிகளுக்குத் தொகுதிகளைக் கிள்ளித்தான் அவர் கொடுப்பார். ஆனால், தி.மு.க கூட்டணியில் 60 இடங்களைப் பெற்றுவிட வேண்டும் என்று காங்கிரஸ் நினைக்கிறது. ரஜினிகாந்த்துடன் போய்விடுவோம் என்று பயம் காட்டினால் தி.மு.க பயந்துவிடும் என்று காங்கிரஸ் தலைவர்களில் சிலர் கணக்கு போடுகிறார்கள். ஆனால் காங்கிரஸ் கட்சியின் டெல்லி தலைமை, தி.மு.க கூட்டணியைத்தான் விரும்புகிறது. கட்சி தொடங்குவது பற்றி ரஜினி என்ன முடிவு செய்யப்போகிறார் என்பதைப் பொறுத்தே கூட்டணிகள் அமையும்” என்கிறார் ரவீந்திரன்.

காங்கிரஸ் இல்லாமல் சட்டமன்றத் தேர்தலில் பெரும் வெற்றி பெற்று தி.மு.க-வால் ஆட்சியமைக்க முடியுமா என்ற கேள்வியை அரசியல் விமர்சகர் சுமந்த் சி.ராமனிடம் வைத்தோம்... “அடுத்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க-தான் வெற்றிபெறும் என்ற சூழல் ஐந்து மாதங்களுக்கு முன்புவரை இருந்தது. நாங்குநேரி, விக்கிரவாண்டி உள்ளிட்ட இடைத்தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அந்த நிலைமை மாறியிருக்கிறது. 2021-ல் தி.மு.க-தான் ஆட்சியமைக்கும் என்பதை இப்போது உறுதியாகச் சொல்ல முடியவில்லை. எனவே, தி.மு.க-வுக்குக் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவு கட்டாயம் தேவை. காங்கிரஸைப் பொறுத்தவரை, அது எம்.ஜி.ஆர் காலத்திலும் ஜெயலலிதா காலத்திலும் அ.தி.மு.க-வுடன் கூட்டணியில் இருந்த கட்சிதான். ஒருவேளை தி.மு.க கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் அ.தி.மு.க-வுடன் அது சேரலாம். ஆனால், அ.தி.மு.க கூட்டணியில் பா.ஜ.க இருக்கிறது. ஒருவேளை, அ.தி.மு.க-வை விட்டு பா.ஜ.க விலகினால், அது யாருடன் கூட்டணி சேரும் என்பது கேள்விக்குறி. ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிக்கும் பட்சத்தில், அதில் பா.ஜ.க சேரலாம். இப்படி, இரண்டு அணிகளுக்கும் பல கதவுகள் திறந்தே இருக்கின்றன. சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 16 மாதங்கள் உள்ளன. அதற்குள் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்” என்றார் சுமந்த்.

சட்டமன்றத் தேர்தல் வருவதற்குள் என்னென்ன மாற்றங்கள் நடக்குமோ!