Published:Updated:

ஆர்.டி.ஐ சட்டத்திருத்தத்துக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்! இன்று முதல் அமல்

மோகன் இ

இன்று ஆர்.டி.ஐ சட்டத்திருத்தத்துக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார். புதிய சட்டத்திருத்தம் இன்றுமுதல் அமலுக்கு வருகிறது.

நாடாளுமன்றம்
நாடாளுமன்றம்

மத்தியில் ஆட்சியில் உள்ள பா.ஜ.க தலைமையிலான அரசு கடந்த ஆட்சிக்காலத்தில் இருந்தே தகவல் அறியும் உரிமை (ஆர்.டி.ஐ) சட்டத்தைத் திருத்துவதற்கு முனைப்புடன் செயல்பட்டது. ஆனால், மாநிலங்களவையில் போதிய பலம் இல்லாத காரணத்தினாலும், பலத்த எதிர்ப்புகளினாலும் கடந்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் ஆர்.டி.ஐ சட்டத்திருத்தத்தை நிறைவேற்ற முடியவில்லை.

ஆர்டிஐ
ஆர்டிஐ

ஆனால், தற்போது மீண்டும் பி.ஜே.பி தனிப்பெரும்பான்மை பலத்துடன் மத்தியில் ஆட்சியில் அமர்ந்தபிறகு, அசுரவேகத்தில் பா.ஜ.க சட்டங்களை நிறைவேற்றி வருகிறது. தடைக்கல்லாக இருந்த மாநிலங்களவையிலும் மிக விரைவில் பா.ஜ.க கூட்டணி தனிப்பெரும்பான்மை பெற்றுவிடக்கூடிய சூழ்நிலையில் இருக்க, இதர கட்சிகளின் ஆதரவோடு தற்போது மாநிலங்களவையிலும் சட்டங்களை வேகமாக நிறைவேற்றிவருகிறது.

மக்களவையில் எளிதாக நிறைவேற்றப்பட்ட ஆர்.டி.ஐ சட்டத்திருத்த மசோதா, மாநிலங்களவையில் பிரதான எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்கிடையே டி.ஆர்.எஸ் மற்றும் பி.ஜே.டி ஆகிய கட்சிகளின் ஆதரவோடு நிறைவேற்றப்பட்டது.

ஆர்.டி.ஐ.
ஆர்.டி.ஐ.

`தகவல் ஆணையர்களின் சுதந்தரத்தைப் பறிக்கும் வகையிலும் தகவல் ஆணையத்தை மத்திய அரசு கட்டுப்படுத்தவும் ஆர்.டி.ஐ சட்டம் திருத்தப்பட்டிருக்கிறது. இந்தப் புதிய சட்டத்திருத்தத்துக்கு ஒப்புதல் அளிக்கக் கூடாது' என ஜனாதிபதிக்குச் செயற்பாட்டாளர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.

இந்த நிலையில், இன்று ஆர்.டி.ஐ சட்டத்திருத்தத்துக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார். புதிய சட்டத்திருத்தம் இன்றுமுதல் அமலுக்கு வருகிறது. இதையடுத்து, ஒரே வாய்ப்பாக உள்ள உச்ச நீதிமன்றத்தை நாடவிருப்பதாக ஆர்.டி.ஐ செயற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.