Published:Updated:

`சபரிமலை பயணத்தை ஏன் ரத்து செய்தார் ராம்நாத் கோவிந்த்?'- `காரணம் அறியாத' கேரள அரசு!

சபரிமலையில் நடக்கும் மகர விளக்கு பூஜையில் பங்கேற்பதற்காக வருகை தருவதாக இருந்த ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்

சபரிமலை ஐயப்பன் கோயிலில் வரும் 15-ம் தேதி மகரவிளக்கு பூஜை நடைபெறவிருக்கிறது. அதற்காக வரும் 21-ம் தேதி வரை நடை திறக்கப்பட்டிருக்கும். ஐயப்பன் கோயிலுக்கு தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்தபடி இருக்கிறார்கள். இந்த நிலையில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வரும் 5-ம் தேதி கொச்சிக்கு வருவதாகவும் மறுநாள் சபரிமலை கோயிலில் ஐயப்பனை தரிசிக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது.

சபரிமலை ஐயப்பன் கோயில்
சபரிமலை ஐயப்பன் கோயில்

1973-ம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதியான வி.வி.கிரி சபரிமலைக்கு வந்த நிலையில், 45 வருடங்களுக்குப் பின்னர் குடியரசுத் தலைவர் வரவிருப்பதால் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ஆனால், குறுகிய காலத்தில் ஜனாதிபதி வருகைக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்வது சிரமம் எனக் கேரள அரசு சார்பாகத் தெரிவிக்கப்பட்டதால் அவரது பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பயணம் ரத்து செய்யப்பட்டதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை கேரள அரசுக்கு ஜனாதிபதி மாளிகை மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கேரள தேவசம்போர்டு அமைச்சரான கடகம்பள்ளி சுரேந்திரன் கூறுகையில், ‘’ குடியரசுத் தலைவரின் வருகை ரத்து செய்யப்பட்டதற்கான அறிவிப்பு அரசுக்குக் கிடைத்திருக்கிறது. அவரது பயணம் எதற்காக ரத்து செய்யப்பட்டது என்பது குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை’’ என்றார்.

குடியரசுத் தலைவரின் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ள போதிலும் அதற்கான காரணம் அறிவிக்கப்படவில்லை.
அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன்

இருப்பினும், பாதுகாப்பு காரணங்களுக்காகவே அவரது பயணம் கடைசி நேரத்தில் நிறுத்தப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக தற்போது மகரவிளக்கு பூஜைக்காக பக்தர்கள் அதிகமாக வரும்போது குடியரசுத் தலைவருக்குப் பாதுகாப்பு அளிப்பதில் சிரமம் இருப்பதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், ஹெலிகாப்டர் இறங்குவதிலும் சிக்கல் இருப்பதாகத் தெரியவந்ததால் அவரது பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.