குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு இரண்டு நாள் சுற்றுப்பயணமாக கேரளாவுக்கு வந்திருந்தார். நேற்று முன்தினம் கொச்சிக்கு வந்த அவர், கப்பற்படையின் ஐ.என்.எஸ் துரோணாச்சார்யா கப்பலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். பின்னர் மாதா அம்ருதானந்தமயி தேவியைச் சந்தித்தார். இன்று திருவனந்தபுரத்திலிருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்ட அவர் காலை 9 மணிக்கு கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகை வளாகத்தை வந்தடைந்தார்.
அவரை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர் மனோ தங்கராஜ், கன்னியாகுமரி கலெக்டர் ஸ்ரீதர், கன்னியாகுமரி எம்.பி விஜய் வசந்த் ஆகியோர் வரவேற்றனர். அரசு விருந்தினர் மாளிகையிலிருந்து கார் மூலம் கடற்கரைப் படகு குழாமுக்குச் சென்ற அவர், படகு மூலம் கடல் நடுவே அமைந்திருக்கும் விவேகானந்தர் நினைவிடத்துக்குச் சென்றார்.

அங்கு கன்னியாகுமரி பகவதி அம்மனின் கால்தடம் பதிந்திருக்கும் ஸ்ரீபாதபாறை, விவேகானந்தர் உருவச்சிலை ஆகியவற்றை வழிபட்டார். பின்னர் தியான மண்டபத்துக்குச் சென்றார். மேலும் விவேகானந்தர் நினைவிடத்தில் நின்றிருந்தவாறே 133 அடி உயர திருவள்ளுவர் சிலையைப் பார்த்தார்.
விவேகானந்தர் நினைவிடத்திலுள்ள பயணிகள் குறிப்பேட்டில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு எழுதிய குறிப்பில், `கன்னியாகுமரியின் சிறப்பு அடையாளமான விவேகானந்தர் நினைவுச்சின்னம், எனக்கு பிரமிக்கவைக்கும் ஆச்சர்ய அனுபவமாக இருந்தது.

ஆன்மிகம் நிறைந்திருக்கும் இந்த நினைவுச்சின்னத்தை உருவாக்கக் காரணமாக இருந்த ஏக்நாத்ராணடேஜியின் உயர்ந்த உள்ளத்தைக் கண்டு நான் ஆச்சர்யப்படுகிறேன்’ எனக் குறிப்பிட்டார். அதன் பின்னர் படகு மூலம் கரைக்குத் திரும்பிய குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு காரில் விவேகானந்தா கேந்திராவுக்குச் சென்றார். அங்கு அவரை விவேகானந்தா கேந்திரா நிர்வாகி பாலகிருஷ்ணன் வரவேற்றார்.

விவேகானந்தா கேந்திராவிலுள்ள ராமாயண தரிசன கண்காட்சியைப் பார்த்தவர், பாரத மாதா கோயிலுக்குச் சென்று வழிபட்டார். பின்னர் அங்குள்ள பயணிகள் குறிப்பேட்டில், `சுவாமி விவேகானந்தர் அனுபவித்த புனிதமான லட்சிய உணர்வையும், அவருக்குக் கிடைத்த அருளையும் நான் அனுபவித்து உணர்ந்தேன். சுவாமி விவேகானந்தரின் கொள்கை, செய்திகளை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கிற விவேகானந்தா கேந்திராவைச் சேர்ந்த அனைவரையும் பாராட்டுகிறேன்’ என குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு குறிப்பிட்டிருந்தார். பின்னர் ஹெலிகாப்டர் மூலம் அங்கிருந்து திருவனந்தபுரத்துக்குப் புறப்பட்டுச் சென்றார்.