Published:Updated:

"100 ஆண்டு சமூகநீதிப் பயணத்தில் ஒரு மைல் கல்"-அர்ச்சகர் பயிற்சிபெற்ற மாணவர் சங்கத் தலைவர் ரங்கநாதன்

சமத்துவத்தின் மீது தமிழக அரசு கொண்டிருக்கும் அக்கறையை வெளிப்படுத்துகிறது .

`கலைஞர் பிறந்தநாளில் அவரின் வாழ்நாள் விருப்பத்தை மு.க.ஸ்டாலின் நிறைவேற்றுவாரா?’ என்ற தலைப்பில் அர்ச்சகர் பயிற்சிபெற்ற அனைத்து சாதி மாணவர்கள் சங்கத் தலைவர் ரங்கநாதன் பேட்டியை கடந்த 3-ம் தேதி விகடன் இணையதளத்தில் வெளியிட்டிருந்தோம்.

இந்து சமய அறநிலையத்துறை அலுவலகம்
இந்து சமய அறநிலையத்துறை அலுவலகம்

அந்தக் கட்டுரையில், 'அர்ச்சகர் பயிற்ச்சி முடித்து பல வருடங்கள் கடந்தும், பரம்பரை அர்ச்சகர் நியமனம் கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும், தங்களுக்குக் கோயில்களில் பணி வழங்கப்படவில்லை. திமுக ஆட்சியில் கலைஞரின் விருப்பத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்ற வேண்டும்’ என்று வலியுறுத்திருந்தார்.

இந்தநிலையில், '100 நாள்களில் பயிற்சி முடித்த அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராக்கப்படுவர்கள்' என்று அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று தெரிவித்துள்ளார். இந்தத் தகவல் கேட்டு அர்ச்சகர் பயிற்சி முடித்தவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சேகர்பாபு
சேகர்பாபு

இந்த அறிவிப்பு குறித்து நம்மிடம் பேசிய அர்ச்சகர் பயிற்சிபெற்ற மாணவர் சங்கத் தலைவர் ரங்கநாதன், "தந்தை பெரியார் நெஞ்சில் தைத்த முள்ளான கருவறைத் தீண்டாமையை அகற்றும்விதமாக கலைஞர் கொண்டு வந்த இந்தத் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசு தற்போது நடைமுறைப்படுத்தவிருப்பதாக அறிவித்திருப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் சேகர்பாபு ஆகியோருக்கு எங்கள் சங்கத்தின் சார்பாக நன்றி.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

திராவிட இயக்கத்தின் 100 ஆண்டுக்கால சமூகநீதிப் பயணத்தில் இந்த அறிவிப்பு ஒரு மைல் கல். கடவுளின் படைப்பில் அனைவரும் சமம் என்பதை உறுதி செய்வது மட்டுமல்லாது, அரசியல் சட்டத்தின் உயரிய நோக்கமான சமத்துவ சமூகத்தை அடையும் சட்டப்பூர்வ முயற்சி இது.

ரங்கநாதன்
ரங்கநாதன்

இந்தச் சாதியைச் சேர்ந்தவர் பூஜை செய்தால்தான் மகிழ்வேன் என்று கடவுள் ஒருபோதும் சொல்லவில்லை. கடவுள் அனைத்து மக்களையும் தன் பிள்ளைகளாகவே பாவிக்கிறார். குறிப்பாக அறநிலையத்துறை கோயில் அர்ச்சகர் பணி என்பது அரசுப்பணி.

அரசுப் பணியில் சேர பொது அறிவிப்பு, தேர்வு, நேர்காணல் என்ற முறையே பின்பற்றப்படுகிறது. பரம்பரை வழி அர்ச்சகர் முறை ஒழிக்கப்பட்டு 50 ஆண்டுகள் ஆன பின்பும் இன்றுவரை மதுரை மீனாட்சியம்மன், பழநி, திருச்செந்தூர் முருகன் கோயில், திருவரங்கம் அரங்கநாதர், திருவண்ணாமலை அருணாச்சலேசுவரர் கோயில்களில் அர்ச்சகர் நியமனம் பரம்பரை, வாரிசுரிமை அடிப்படையில்தான் நடக்கிறது. இது அரசியல் சட்டம், உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு எதிரானது.

போராட்டம் நடத்தியபோது
போராட்டம் நடத்தியபோது

தமிழகத்தில் அரசுப் பயிற்சிப் பள்ளியில் ஆகமம் கற்று, தீட்சை பெற்ற இந்து மதத்தின் அனைத்துச் சாதி மாணவர்களை, கடந்த அதிமுக அரசு கண்டுகொள்ளவில்லை.

நியாயம் கேட்டு மாணவர்களாகிய நாங்கள், மக்கள் உரிமைப் பாதுகாப்பு மைய வழக்குரைஞர்கள் உதவியுடன் 10 ஆண்டுகளுக்கும் மேலாக வீதிகளிலும், நீதிமன்றத்திலும் போராடிவந்தோம். எதுவும் நடக்கவில்லை. ஆனால் தற்போது பொறுப்பேற்றுள்ள சமூகநீதி அரசு, கொரானா பேரிடர் காலத்திலும் அனைத்துச் சாதி அர்ச்சகர் நியமன அறிவிப்பு வெளியிட்டிருப்பது சமத்துவத்தின் மீது தமிழக அரசு கொண்டிருக்கும் அக்கறையை வெளிப்படுத்துகிறது. எங்கள் கோரிக்கையைத் தொடர்ந்து வெளியிட்ட விகடனுக்கும் நன்றி" என்றார்.

இந்து அறநிலையத்துறை
இந்து அறநிலையத்துறை

அமைச்சரின் இந்த அறிவிப்பை இதற்காக சட்ட போராட்டம், அறப்போராட்டம் நடத்திய மக்கள் உரிமைப் பாதுகாப்பு மைய நிர்வாகிகளும் வரவேற்றுள்ளனர். பல்வேறு கட்சியினர், அமைப்பினரும் வரவேற்றுள்ளனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு