Published:Updated:

பேரறிவாளன் உள்ளிட்ட எழுவர் விடுதலை: "குடியரசு தலைவர்தான் முடிவு எடுக்க வேண்டும்" -ஆளுநர் பன்வாரிலால்

எழுவர் விடுதலை - பேரறிவாளன்
எழுவர் விடுதலை - பேரறிவாளன்

எழுவர் விடுதலை விவகாரத்தில் தமிழக அரசின் பரிந்துரையை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நிராகரித்திருக்கிறார்.

பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுவிக்க வேண்டும் என்ற தமிழக அரசின் பரிந்துரையை தமிழக ஆளுநர் பன்வாரிலால் நிராகரித்தார். எழுவர் விடுதலை விவகாரத்தில் குடியரசுத் தலைவர்தான் முடிவெடுக்க வேண்டும் என்று தமிழக ஆளுநர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்
ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்

தமிழக அரசு பரிந்துரை

அரசியல் சட்டப்பிரிவு 161-ன் படி 7 பேரை விடுவிக்க வேண்டும் என தமிழக அமைச்சரவை 2 ஆண்டுகளுக்கு முன் பரிந்துரை செய்திருந்தது. இந்த சூழலில், தன்னை விடுவிக்க வேண்டும் என பேரறிவாளன் தொடர்ந்த வழக்கில் 7 நாள்களில் முடிவெடுக்க ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் கெடு விதித்திருந்தது.

இந்த வழக்கு பிப்ரவரி 9-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வர இருக்கிறது. இந்தநிலையில் தமிழக அரசின் பரிந்துரையை தமிழக ஆளுநர் நிராகரித்திருக்கிறார்.

தமிழக அரசின் நம்பிக்கை

முன்னதாக இன்று சட்டப்பேரவையில், எழுவர் விடுதலையில் விரைவில் ஆளுநர் நல்ல முடிவை எடுப்பார் என நம்புவதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை தெரிவித்திருந்தார். சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பேரறிவாளன், சாந்தன், முருகன் உள்ளிட்ட எழுவர் விடுதலை விவகாரத்தில் தி.மு.க தொடர்ந்து தவறான தகவல்களைப் பரப்பி வருவதாகக் குற்றம்சாட்டியிருந்தார்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

மேலும் அவர், ``அ.தி.மு.க அரசு 7 பேருக்கும் விடுதலை கிடைக்க வேண்டும் என உண்மையாகச் செயல்பட்டு வருவதாகவும் அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறோம். அத்தோடு மட்டுமல்லாமல், ஆளுநரைச் சந்திக்க வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் 7 பேர் விடுதலை தொடர்பாக விரைவில் முடிவெடுக்க வலியுறுத்தி வருகிறோம். ஜனவரி 29-ம் தேதி ஆளுநரைச் சந்தித்த போது 7 பேர் விடுதலை தொடர்பாக வலியுறுத்தினேன். 7 பேர் விடுதலை விவகாரத்தில் ஆளுநர் நல்ல முடிவை எடுப்பார் என நாம் நம்புகிறேன்’’ என்றூ முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறி இருந்தார்.

இப்படியான சூழலில் தமிழக அரசின் பரிந்துரையை தமிழக ஆளுநர் நிராகரித்து உள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு